Thursday 8 October 2015

சாபமல்ல இது

குற்ற உணர்ச்சியற்று இருக்கிறாய்
அது உன் இயல்பு
நான் குறைசொல்வதர்க்கில்லை
ஆனால்
உனது மனசாட்சியை
உலுக்கும் எனது கேள்வி

நேற்று கூட
மழை பார்த்தபடி
அழுதிருந்தேன்
எனக்கிது ஏன் நிகழ்ந்தது
நான் பாவம் இழைத்தவனா
என்ற என் கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லாமல் போகலாம்
அவை
உன்னிடம்
பழிதீர்க்கும்

உதிரம் குடித்து
கண்ணீரில் கைகழுவ
எங்கு கற்றாய்
நீ நினைக்கிறாய்
காலம் உனது நாய்க்குட்டி என்று
அது நெருப்பு
சேர்ந்தவைகளை பொசுக்கும்
நீ மட்டும் என்ன விதிவிலக்கா
அறம் தவறி
நெறிகெட்டு
தீ சேர்ந்த உன்னை
காலத்தின் கைவிரல்கள்
பொசுக்கிக் கரைக்கும்

சாபமல்ல இது
தனிமைபடுத்தப்பட்ட
கொதிக்கும் என் உள்ளத்தின் சுவாலை
அதில்
நீ விட்டில்பூச்சியானதில்
என் பிழையொன்றுமில்லை

1 comment:

  1. சாபமல்ல இது
    தனிமைபடுத்தப்பட்ட
    கொதிக்கும் என் உள்ளத்தின் சுவாலை
    அதில்
    நீ விட்டில்பூச்சியானதில்
    என் பிழையொன்றுமில்லை

    அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete