Monday 28 December 2015

எஞ்சிய பிரியங்களோடு

நீ அருகில்லாத  வேளை
எப்படியோ
வந்துவிட்டன
சில வலிகளும் வருத்தங்களும்நீ எனக்கு
கொடுத்திருக்கும்
தண்டனைக்கு
நான் தகுதியற்றவன்என் நெஞ்சம்
வலியால்
நிறம்பித் தளும்புகிறது
நீயோ பொய்களை கொண்டு
குழலூதிக்கொண்டிருக்கிறாய்என் பதற்றமிக்க மௌனம்
உடைந்துசிதறும்
நொடிக்காக காத்திருக்கிறாய்
உனக்கு வேண்டியதெல்லாம்
பிசுபிசுப்பான
என் சொற்களின் குருதிநீண்ட காத்திருத்தல்களுக்குப்பின்
வந்து விழும்
ஒற்றை சொல் போல்
என் பிரியங்கள்
மதிப்பு வாய்ந்தவை
நீயோ
அவைகளை
போகிறபோக்கில்
உடைத்து சிதறடிக்கிறாய்என் பிரியத்தின்
பிரமாண்டத்தை
உனக்கு பிரித்துக் காட்டும்
அவகாசம் எனக்கு கொடுக்கப்படாமலேயே
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவுஒரு கனவை போல
பிறிதொருநாள்
நீ என்னை கடக்க நேர்ந்தால்
அப்போதும் பகிர்வேன்
எஞ்சிய என் பிரியங்களை நீ பெற்றுக்கொள்ளாத
மீதமான என் பிரியங்களை
கொண்டு
கட்டி எழுப்புவேன்
நமக்கே நமக்கென
சில கவிதைகளை 

Sunday 27 December 2015

அவமதிப்பு

சட்டையை கழற்றி
அணிவது போல
உனக்கு
மிக சுலமாக இருக்கிறது
என்னை அவமானப்படுத்துதல்நீ என்னுள்
உருவாக்குகின்ற
பதற்றம்
என்னை பற்றிய அவநம்பிக்கையை
கட்டிஎழுப்புகிறதுசின்ன முகச்சுளிப்பில்
சுக்குநூறாய்
உடைத்தெறிகிறாய்
மனதைஉன் அவமதிப்பின் நகம் கீறி
வழியும் குருதியில்
பின்னப்பட்டிருப்பது
என் ஒழுக்கமான நடத்தையும் தான்கண்டும் காணதது போல
என் கதறலை
நோக்கமறுக்கிறாய்
கேட்டும் கேளாதது போல
என் கேவலை
உதாசீனப்படுத்துகிறாய்நான் உனக்கு கையளித்த
பிரியங்களை
வேண்டாமென உதறிவிட்டாய்
உனக்கு பிரியங்களை
பிடிக்கவில்லையா
அல்லது
பிரியமாய் இருப்பவர்களையே பிடிக்கவில்லையா ?குழந்தை மனசுனக்கு
எப்போதுதான்
புரிந்திருக்கிறது
கால்பந்தினை போல்
எளிதில் எட்டியுதைக்கிறாய்எனக்குள்
தேங்கிக்கிடக்கும்
அழித்தகற்றவியலாத
உன் புறக்கணிப்பின் சித்திரங்கள்
என்றென்றைக்குமாய்த்
என் தனிமையின் துயரங்களை
தின்றபடி இருக்கும்

Wednesday 16 December 2015

பிரிவோம்

உன்னோடிருந்த
கடந்த கால நாட்களை
நினைத்துகொள்கையில்
நினைவுக்குள்
வலி பீறிடுகிறது

 
எவ்வளவு பொய்கள்
அத்தனையும் பொருத்திருந்தேன்
கேட்கச்சகிக்காத எத்தனையோ
சொற்களை
கேட்டிருந்திருக்கிறேன்சிக்கல் மிகுந்ததாய்
மாறிப்போன உறவுக்குள்
உன் நிமித்தம்
நான் நீடித்திருந்தேன்இத்தனைக்குப்  பிறகும்
நீ என்னை நிராகரித்திருப்பது
என் நெஞ்சை வலியால் நிரப்புகிறதுஇவ்வளவு பாசாங்கை
எப்படி இத்தனை நாளாய்
உள்ளுக்குள் மறைத்துவைத்திருந்தாய்

 
கனக்கும் உன்
அழுகிய சொற்கள்
மனதை சிதைவுறசெய்கின்றன


என் கேவல் மொழியை
உனக்கு தெரியவில்லை
என் துருவேறிய மௌனம்
உனக்கு புரியவில்லை
இப்போதும்
என்னிடம் உன்னால்
எப்படி புன்னகைக்க முடிகிறதுநீ நீயாகவும்
நான் நானாகவும்
அவர் அவர் நிலைக்கு
மீள்வோம்
நமதிடையே எதுவுமே
நிகழாதது போலஎந்த சலனமுமின்றி
கைகுலுக்கி பிரிவோம்
அழுகிய நாற்றத்தோடு  சேர்ந்திருப்பதைவிடவும்
பிரிந்துவிடுவது உத்தமம் இல்லையா