தொடரவியலாத வாழ்க்கையை
தொடரத்தான் வேண்டியிருக்கிறது
சில நிர்பந்தங்களினால்
இங்கே
முழுக்க சரியென்றும்
முழுக்க தவறென்றும்
எதுவுமில்லை
பூரணமில்லாத வாழ்வில்
எதை கொண்டு
நிறைக்க
சிறகிழந்து
வெறும் தடயங்களோடு
வாழ்பவனுக்கு
போக்கிடம் தான் ஏது
புதிதாக
எதையுமே கொண்டுவருவதில்லை
சமயத்தில்
இந்த வாழ்க்கை
ஆயினும்
வாழ நேர்கிறது
அது எல்லோர்க்கும்
நிகழும்
விசித்திரம்
எதை எதையோ
நினைவூட்டி
அச்சமூட்டிடும்
வாழ்விடம்
நாம் அடங்கி தஞ்சமடைய
வலுவான காரணங்கள்
இருப்பதில்லை
சாகப் பயந்தவர்களுக்கு
வாழ்க்கையொரு வேதாளம்
சாகத்துணிந்தவர்களுக்கு
வாழ்க்கை வெறும் கால் தூசு
சாவை அறியாதவர்களுக்கோ
வாழ்க்கையொரு பெரும்புதிர்
வெற்று சமாதானங்களாலும்
புலம்பல்களாலும்
நிரப்பப்பட்ட
குப்பைதொட்டிதானே
வாழ்க்கை
இதோ
பக்கத்தில் இருக்கிறது மரணம்
ஆயினும்
தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது
மாய வாழ்க்கையை
வாழ்க்கை
பொய்
மரணம்
நிஜம்
வாழ்வு சுமையாகும்
தருணங்களில்
மரணம்
கனவாகிறது
இறுதியில்
எல்லோரும்
சாகத்தான்
வாழ்கிறோம்
இறந்துபோதல் என்றால்
எல்லாவற்றையும் விட்டு
எங்காவது நீங்கிப்போதல் இல்லையா
இங்கிருந்துகொண்டிருக்கிறேன்
என்பது எவ்வளவு பொய்
இனி இங்கிருக்கமாட்டேன் என்பது தான்
எவ்வளவு நிஜம்
தொடரவியலாதபோதும்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
வாழ்க்கை
அதன்
ஆயிரமாயிரம் புதிர்களோடும்
எண்ணிக்கையற்ற மற்றும் பதில்களற்ற கேள்விகளோடும்
வலி
வாதை
கேவல்
கண்ணீர்
இவையனைத்தும்
உள்ளடக்கியது
நிதர்சனம்
நான் என்பது
நிஜமற்ற பொய்
மரணம்
மெய்யான உண்மை
எது எதில்
தொலையப்போகிறது
No comments:
Post a Comment