Tuesday 24 September 2013

முள் - ஒரு பெண்ணின் எதிர்நீச்சல் வாழ்க்கை !!!


நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் . என் இடக் கண்ணின் புருவத்திற்க்கு கீழே  வெண்மையாக  மினுமினுப்போடு  ஒரு தழும்பு உருவானது . நானோ அல்லது எங்கள் வீட்டில் உள்ளவர்களோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஒரு குடும்ப விழாவிற்கு வந்திருந்த என்னுடைய அத்தை ஒருவர் தான் அந்த தழும்பை அடையாளம் கண்டு கொண்டார் . எப்போதிலிருந்து இப்படி இருக்கிறது என்றார் என் அம்மாவிடம் . "கொஞ்ச நாளாதான் இருக்கு , அது ஒண்ணுமில்ல அழுக்கு தேமல் அண்ணி . படிகாரம் தேய்ச்சி குளிச்சா சரியாபோயிடும் " என்றார் அம்மா . ஆனால் என் அத்தையோ என்னை அருகில் அழைத்து அந்த தழும்பில் கிள்ளினார் . வலிக்கிறதா என்றார் . எனக்கு வலிக்கவே இல்லை . என் அத்தை கலவரமானார் . முதலில் இவனை உரிய மருத்துவரிடம் காமிக்க வேண்டும் என்று விவரங்களை சொன்னார் . அடுத்த நாளே என் அப்பா , அம்மா என்னை அழைத்துக் கொண்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில்   இருக்கிற "தொழு நோய் " பிரிவிற்கு சென்றார்கள் .

அங்கே மருத்துவர் என்னை பரிசோதித்தார் . ஒரு ஊசியால் என் தழும்பில் குத்தினார் .

"வலிக்குதா .?" .

 வலிக்கல சார் .

என் கன்னத்தில் ஊசியில் குத்தினார்

"வலிக்குதா?"

வலிக்குது சார் .

தொழுநோயோட அறிகுறி மாதிரி தான் இருக்கு . ரத்த மாதிரிகள குடுத்துட்டு போங்க . பரிசோதிச்சு முடிவுசெய்யலாம் என்று சொன்னார் மருத்துவர் . என் அப்பாவின் முகம் வாடி விட்டது . என் அம்மா அங்கேயே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார் . என் அம்மா அழுவதை பார்த்த பின்னால் தான் எனக்கு கலவரமானது . என்னவோ நோய் வந்து விட்டது . நாம் சீக்கிரம் செத்துவிடுவோம் என்று முடிவுசெய்துவிட்டேன் . என் அப்பாவிடம் "நான் செத்துடுவனா " என்று கேட்ட பொழுது என் அப்பா , என் அம்மாவை திட்டினார் . அழுது தொலைக்காம வா . உன்னால் என் புள்ள பயப்படுது . "அதெல்லாம் ஒண்ணுமில்ல . மாத்திர தின்னா சரியா போயிடும் "  என்று எனக்கு சமாதானம் சொன்னார் . வழியில் எனக்கு சோன் பப்படி வாங்கி கொடுத்தார் .

அப்போதைக்கு நான் சமாதனமானேனே தவிர , பயந்து பயந்து இரவு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது . மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும்ப் போது என் அப்பா அம்மாவை வரவேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை மட்டும் அழைத்துக் கொண்டு போனார் . மருத்துவமனையில் பரிசோதனைகளின் முடிவை பார்த்து எனக்கு தொழு நோயின் ஆரம்ப கட்டம் என்று மருத்துவர் சொன்னார் . என் அப்பா உடைந்து போனார் . என் அப்பா கண்கலங்கி மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தார் . என் குடும்பத்துல யாருக்கும் இந்த வியாதி வந்ததில்ல சார் . இந்த சின்ன பையனுக்கு எப்படி சார் இந்த வியாதி என்று சொல்லும்போதே அழுதுவிட்டார் அப்பா . அப்பா அழுவதை  பார்த்த உடன் எனக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது .

அந்த அமருத்துவர் மிகவும் கனிவானவர் . அவர் பெயர் கூட இன்னும் எனக்கு நினைவிருக்கிறது . தேவராஜ் !!!  அவர் தான் என்னிடம் சொன்னார் ," இது ஒண்ணுமே பிரச்சன இல்ல . நீ தினமும் காலையும்  இரவும்  ஒரு மாத்திரை சாப்பிடனும் . ஒரு வருஷம் சாப்பிட்டா போதும் . எல்லாமே சரியாகிடும் ." என்று என் கன்னங்களை  தட்டிக் கொடுத்து பேசினார் . அப்பாவிடமும் அதையே சொன்னார் . "இது ஆரம்ப கட்டம் . ஒரு வருடம் மருந்தெடுத்துக்  கொண்டால் பூரணமாக குணமாகிவிடும் . நீங்கள் நினைப்பது போலெல்லாம்  ஆகவே ஆகாது  என்று அப்பாவிற்கு  தைரியம்  சொன்னார் .  

அன்றைக்கே மருந்து கொடுத்தார்கள் முப்பது நாளைக்கு . முப்பது நாளைக்கு ஒரு முறை மட்டும் ஒரு சிவப்பு நிறத்தில் தடியான மாத்திரை  கூடுதலாக சாப்பிடவேண்டும்  . இதை தின்றால் ரத்தம் நிறத்தில் ஒன்னுக்கு போகும் , பயப்படக் கூடாது என்று மருத்துவர் சொன்னார் . இனிமேல் நீங்கள் இங்கு   வந்து மருந்து வாங்க   வேண்டாம் , கீழ்பெரும்பாக்கத்தில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாதமொரு முறை நாங்களே வருவோம் வந்து மருந்து வாங்கி கொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னார் . கிளம்பும் போது தன் மேசையில் இருந்து எனக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பி வைத்தார் .

எங்கள் வீட்டில் என்னிடம் "இந்த மாத்திரை திங்குறேன்னு  பக்கத்து   வீட்லயோ பள்ளிகூடத்துலையோ சொல்லக் கூடாது" என்று என்னிடம் சொல்லி வைத்தார்கள் . ஆனால் ஒரு மாதத்தின் முதல் நாள் அந்த சிவப்பு நிற மாத்திரை தின்ற தினம் . பள்ளியில் இடைவேளையின் பொழுது சிறுநீர் கழிக்க சென்றேன் . பள்ளிக்காலத்தில் தண்ணிக் குடிக்கவென்றாலும் சிறுநீர்கழிக்க வென்றாலும்  கும்பலாக போவது தானே வழக்கம் . அப்படி  போகும் போது நண்பர்கள் "அய்யய்யோ உதயாவுக்கு ஒன்னுக்குல ரத்தம் வருது" என்று பள்ளிக்கே சொல்லி விட்டார்கள்  . என் ஆசிரியர் நாகரத்தினம் எனை அழைத்து என்னிடம்  உடம்பு  சரியில்லையா என்று கேட்ட பொழுது நான் உண்மையை சொல்லி விட்டேன் . எந்த   பள்ளிக்கூடத்தில் சொல்லக் கூடாது என்று சொன்னார்களோ அங்கே என்னை ஒன்றும் வித்யாசமாக நடத்தவில்லை . ஆனால் என் உறவினர் ஒருவரிடம்  எங்கள் வீட்டில் தான்  எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொன்னார்கள் . அவர் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்ற பொழுது எனக்கு தனி தட்டும் , துண்டும் கொடுத்தார் அந்த உறவினர்  . நான் இதை அப்பாவிடம் சொல்லப் போய் பெரிய சண்டையானது . இப்படி என் அம்மாவும் என் அப்பாவும் அந்த ஒரு வருடம் நெஞ்சில் நெருப்பிருப்பதை போலவே இருந்தார்கள் , என் மீது அதீத அக்கறையோடு .

இப்படியாக ஒரு வருட சிகிச்சைக்கு பிறகு எனக்கு நோய் சரியாயிற்று என்றும் , தேமல் அப்படியே இருக்கும் ஆனால் கொஞ்சம் நிறம் மங்கி இருக்கும் . பயப்படதேவயில்லை என்றும் தேவராஜ் மருத்துவர் சொன்னார் . அப்பாடா இனி தினமும் மாத்திரை திங்க வேண்டாம் என்ற மகிழ்ச்சி எனக்கு .

சரி, இதை நான் ஏன் இப்போது இங்கே எழுதுகிறேன் ? எனக்கு இப்படி ஒரு நோய் வந்ததையோ நான் சிகிச்சை எடுத்துக் கொண்டதையோ நான் இதுவரையில்  என் கல்லூரி நண்பர்களிடமோ மற்ற நண்பர்களிடமோ , அலுவலகத்திலோ சொல்லிகொண்டதே இல்லை . யாருக்கும் தெரியாது . காரணம் விவரம் தெரிந்த பின்னால் , அதுவும் ரத்தக் கண்ணீர் திரைப்படம் எல்லாம் பார்த்த  பின்னால் எனக்குமே தொழுநோய் என்றால் இப்படியெல்லாம் ஆகுமா என்ற அருவருப்பும் அச்சமும் வந்தது . இதை வெளியே சொல்வது அசிங்கம் , நம்மை கேவலமாக பார்ப்பார்கள் இப்படி எதை எதையோ நினைத்துக் கொண்டு வெளியில் யாரிடம் சொல்லிக் கொண்டதில்லை இதுநாள் வரையில்.

இப்போது எது என்னை பகிர்ந்து கொள்ள வைத்தது ?

முத்துமீனாள் அவர்கள் எழுதிய "முள் " என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன் . அந்த புத்தகம் தான் என்னை தைரியமாக இதை  வெளியே பகிர்ந்து கொள்ள தூண்டியது . இதை வெளியே சொல்வதன் மூலம் இந்நோய் ஒரு குணப்படுத்த  முடியாத நோயில்லை , இது தொற்று நோயில்லை , இந்த நோயின் ஆரம்பத்திலேயே மருந்து உட்கொண்டு விட்டால் நோய் இருந்த   இடம் இல்லாமல் அழிந்து   போய் விடும்  . இந்த  நோய் சிகிச்சை காலத்தில் வேறு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்ற உண்மைகளை நாம் நமக்கு   ஏற்பட்ட அனுபவத்தில் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியுமே என்று எனக்கு தோன்றியது .

முத்து மீனாள் எழுதி இருக்கும் முள் என்ற புத்தகம் அவரின் சொந்த வாழ்வின் பக்கங்கள் . ஐந்தாவதும்  பிறக்கிற பிள்ளை ஆணாக பிறந்துவிடுமோ என்று முத்து மீனாளின் அம்மா கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டு , அந்த மருந்துக்கு தப்பித்து முத்து மீனாள் பிறந்ததில்  இருந்து தொடங்குகிறது புத்தகம் .

பிறந்தது முதல் பால்ய நாட்கள் வரை எல்லோரையும் போல நகர்கிற முத்து மீனாளின் வாழ்க்கை பால்யத்தில் கன்னத்தில் புதிதாக முளைத்த தழும்பில் வேறு திசைக்கு முத்து மீனாளை ஒப்புக்கொடுக்கிறது . எல்லோரும் குடும்பத்தோடு கழிக்க விரும்புகிற சிறு பிராயத்தை தொழு நோய் பாதித்த பிள்ளைகள் தங்கி படிக்கும் விடுதியில்  தன் பால்யம் தொடங்கி இளமை காலம் வரை கழித்தது என்பது சாதாரண ஒரு வாழ்க்கையா ? முத்து மீனாளுக்கு அப்படி ஒரு வாழ்க்கை தான் வாய்த்திருந்தது .     

கைகள் இல்லாமல் கால்கள் இல்லாமல் விரல்கள் இல்லாமல் சீழ் வடியும் உடல் உறுப்புகளோடு இருக்கிற தொழு நோய் மருத்துவமனையில் ஒரு சிறு பிள்ளையாக நுழையும்   போது இருக்கிற மனதின் கலவரம் இந்த நூலில் முத்து மீனாள் விவரிக்கும் போது அதை என்னால் அப்பட்டமாய் புரிந்துகொள்ள முடிந்தது . ஆனால் எனக்காவது ஒரு வருடத்தில் சிகிச்சை முடிந்தது . தாய் தந்தை அரவணைப்பில் இருந்தேன் . ஆனால் முத்து மீனாள் விடயத்தில் அப்படி இல்லை . ஊரை விட்டு எங்கேயோ இது வரை சென்றிராத கும்பகோணத்தில் ஒரு தொழு  நோய் இல்லத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு , படிப்பிலும் கவனம் செலுத்தி படித்து , எல்லோரும்  இருந்தும் ஒரு அனாதை போல வாழ்ந்த கொடிய வாழ்வை முத்து மீனாள் எப்படி தான் எதிர்கொண்டாரோ என்று எனக்கு தோன்றிற்று . அதுவும் அந்த விடுதியில் சிறுமியாக இருந்த  காலகட்டத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டு , வீட்டு ஏக்கத்தோடு தனிமையில்  துயருற்ற அவரின் பால்யம் அத்தனை இனிப்பானது இல்லை.

சிறுமியாக இல்லத்திற்குள் சென்றவர் பூப்படைந்த ஒரு குமரியாகத்தான் சிகிச்சை முடிந்து நோய் சரியாகி  அந்த  இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் . அதை அவர் விவரிக்கும் போது "சிறையில் இருந்து வெளியே வந்தது போல இருந்தது " என்கிறார் . இந்த ஒற்றை வரியில் ஒன்று புரியும் . எந்த தவறும் செய்யாத ஒரு குழந்தைக்கு  விதி ஒரு சிறைச்சாலை போன்ற தனிமை வாழ்வை அந்த சிறுபிராயத்தில் கொடுத்திருக்கிறது .

அவர் அந்த விடுதியில் இருந்த காலத்தில் நோய் பற்றி மட்டுமோ , தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை  பற்றி மட்டுமோ எழுதி இருக்கிறார் என்று நினைக்காதீர்கள் . அங்கே இருந்த  கன்னியாஸ்திரிகளின்   கனிவான அனுசரணையை , அங்கிருந்த  பணியாட்களின்  பரிவை , உடன் படித்த நேசக் கூட்டாளிகளை பற்றிய முத்து மீனாளின் பக்கங்கள் மிக மிக எளிய வரிகளில் , ஆர்ப்பாட்டமில்லாத  மொழியில் சொல்லிப் போகிறது . அதுவும் "மதர் நியோமி " முத்து மீனாளுக்கு ஒரு தாயை போல வாய்த்தது , கடவுளின் கிருபை ! கெட்டதிலும் ஒரு நல்லதென்பார்களே, அதை போல முத்து மீனாளுக்கு கிடைத்த  மகோன்னத ஆத்மா மதர் நியோமி . எத்தனை அன்பு எத்தனை அக்கறை ...அதனால் தான் "முள்" புத்தகத்தை மதர் நியோமிக்கு அர்ப்பணித்திருக்கிறார் முத்து மீனாள் .

சிகிச்சை முடிந்த பின் அவருக்கு எல்லாமே சரியாகி விட்டதா என்றால் , அது தான் இல்லை . பெண்ணாயிற்றே . அவருக்கு நோய் பூரணமாக குணமாகி முற்றிலுமாக அதில் இருந்து விடுதலை  பெற்றுதான் அவர் கும்பகோணத்தை விட்டு வெளியேறி மதுரை சென்றார் . ஆனால் நம் ஊரில் தான் குடும்பத்தை கலைப்பதற்கென்றே  சில பிறவிகள் இருக்குமே . நோய் வந்தது தெரிந்தால் அவ்வளவு தான் . அதற்கு தனியாக திருமண சந்தையில்   பெண்ணுக்கு பொன்னாபரணங்கள்   பூட்ட வேண்டுமே ...எதிர்கொண்டார் முத்து மீனாள்.  அதையும் எதிர்கொண்டார் . அது அவர் எதிர்கொண்ட வாழ்வின் இரண்டாம் கட்ட புயல் .  

ஒரு பெண்ணாக கருக்கொண்ட போதே கருக்கலைப்பு மாத்திரைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் அத்தோடு ஓய்ந்துவிடவில்லை . அந்த  போராட்டம் வேறு வேறு வடிவில் அவர் வாழ்வு முழுக்க தொடர்ந்திருக்கிறது . கல்லூரி காலத்தில் தன் தோழியின்  அப்பா தன்னை அவரின் மகள் போல் பழகி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று முத்து  மீனாள் சொல்வதை படித்த போது நான் அதிர்ச்சிக்குள்ளானேன் . ஒரு பெண்ணை விதி என்னும் பாம்பு எத்தனை வடிவத்தில் தான் கொத்தித் தின்னும் என்று வெறுப்பாய் இருந்தது . வந்து போன வரன்கள் தட்டிக் கழித்து போனதும் , முத்து மீனாள் ஒரு கட்டத்தில்   மன உளைச்சலுக்கு ஆளாகி பின் அதில்   இருந்தும் மீண்டு சொந்தக் காலில் நின்று , கடைசியில் தனக்காகவே பிறந்திருந்த  ஒரு நல்லவரை கரம் பிடித்து இன்றைக்கு மகிச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

அவரின் எழுத்தை போலவே அத்தனை எளிமையானவர் மிகுந்த  அன்பானவர் முத்து மீனாள் . அவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன் . முதல் முறை நேர்காணல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மறுமுறை அவரின் இல்லத்தில் . அப்போதெல்லாம் நான் அவரின் இந்த புத்தகத்தை படித்திருக்கவில்லை . ஆனால் அவரின் எதிர்நீச்சல் வாழ்க்கையை படித்தபின்னால் இப்போது அவரின் மீதான என் சகோதர பிரியமும் மதிப்பும்  உயர்ந்து கூடுகிறது .

முத்து மீனாள் பெண் சமுதாயத்தில் பின்பற்றத் தகுந்த ஒரு முன்னுதாரணம்  என்று புத்தகத்தை படித்து முடித்த  பொழுது நினைத்துக் கொண்டேன் . ஒரு ஆணுக்கு சமூகத்தில் சில சவுகரியங்கள் இருக்கிறது தான் . ஆனால் அப்படி இருந்தும் எனக்கு வந்த நோயை பற்றி வெளியே சொல்ல நான் வெட்கப் பட்டிருக்கிறேன் . ஆனால் முத்து மீனாள் அப்படி ஒதுங்கி   விடவில்லை .  விதி சுமத்திய  தன் போராட்ட வாழ்வை தான் எப்படி எல்லாம் எதிர்கொண்டு வென்றேன் என எழுதி இருப்பதன் மூலம் பலருக்கு தன்னம்பிக்கையையும் , நம் வாழ்க்கை என்பதை நாம் தான் மகிழ்ச்சியாக நிர்ணயிக்க வேண்டும் என்பதையும் அத்தனை துணிச்சலோடு மிக எளிய மொழி நடையில் எழுதி இருக்கிறார் . அது மட்டுமில்லை அவர் அழுத்தம் திருத்தமாய் இந்த சமூகத்திற்கு இந்த புத்தகத்தில் தன் வாழ்கையின் மூலம் சொல்லும் இன்னொரு சேதி தான் மிக முக்கியமானது .

தொழு நோய் ஒரு தொற்று நோயில்லை . தொழு நோய் வந்தவர்களை அருவருப்பாய் பார்க்காதீர்கள் . மனித தன்மையோடு அணுகுங்கள் . தொழு நோய் என்பது நோய் முற்றாத வரையில் வெறும் மாத்திரைகளிலேயே பூரணமாக குணப் படுத்திவிட முடியும் என்கிற சேதி தான் அது . அதற்கு சாட்சியாக மதிப்பிற்குரிய  முத்து மீனாளும் , நானுமே இருக்கிறோம். நாங்கள் தொழுநோயை வென்று இதோ உங்களை போல வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள்.

நாம் இந்த பூமியில் வாழ இருக்கிற எல்லா உரிமையும் , மற்றவர்களுக்கும் இருக்கிறது . அவர்களுக்கு எந்த  நோயிருந்தாலும்  அவர்களும் நம்மை போன்றவர்கள் . நேசியுங்கள் !!!

"மீனாள் பதிப்பகம்" வெளியிட்டிருக்கிற  "முள் " புத்தகம் வாங்கி படியுங்கள் . முள் புத்தகம்  ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க பட்டிருக்கிறது "Thorn " என்ற பெயரில் . தமிழக வாசகர்கள் இதுவரை வாசித்திராத வாழ்வின்  பக்கங்களை இதில் வாசிப்பீர்கள் .

~~க.உதயகுமார்



No comments:

Post a Comment