Friday 27 September 2013

மெர்லின் என்றொரு சபிக்கப்பட்டவள் !

சென்றவாரம்  நான் எனக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு மன நல மருத்துவரிடம் சென்றிருந்தேன் தூக்கம் வரவில்லை என மாத்திரை வேண்டி  . அப்போது  எங்கள் உரையாடல் எங்கோ ஆரம்பித்து , எங்கெல்லாமோ பயணித்து ஒரு நடிகையின் வாழ்க்கை பக்கம் திரும்பிற்று . எனக்கு அந்த நடிகையின் பெயர் தெரியும் , அவரின் புகைப்படம் பார்த்திருக்கிறேன் . ஆனால் அவரின் வாழ்வை , அவரின் மரணத்தின் காரணம் என எதையும் நான் அறிந்திருக்கவில்லை . ஆனால் என் அந்த  நண்பர் மூலமாக சென்றவாரம் எனக்கு அந்த நடிகையின் வாழ்க்கை மீது கவனம் குவிந்தது . பின் எங்கள் கலந்தாய்வு முடிந்து , நான் வேளச்சேரி செல்ல , சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் கடைசி வண்டிக்காக காத்திருந்தேன் . அங்கே என்னை தவிர வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள் . பெருத்த அமைதி .  எனக்கோ அனிச்சையாக அந்த நடிகை பற்றி என் நண்பர் சொன்னவை சுழன்று சுழன்று கனத்தது .

அதன் பிறகு புத்தகங்கள் வாயிலாகவும் , இணையத்தின் வாயிலாகவும் , சில ஊடக நண்பர்கள் மூலமாகவும் அந்த நடிகை பற்றி படித்து , நிம்மதி இழந்து போனேன் .

நார்மா ஜீன் மார்டின்சென் (எ) மெர்லின் மன்றோ !

மிக அழகாக  உதித்து , பின் அவசரத்தில் உதிர்ந்த பூவை போன்ற ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மெர்லின்  .  பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி , பாதி வாழியில் ஆவியானதை  போல காணமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி . உலக ஆண்களின் கனவுக்கன்னியாக , கவர்ச்சி குறியீடாக , பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக  உலகத்தால் மிகத்தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி  மெர்லின் !

சில குழந்தைகளுக்கு தன் தகப்பன் யாரென தெரியாது . ஆனால்  மெர்லின் வாழ்வோ , புதிர் நிறைந்தது . மெர்லினின் தாய்க்கே தன் மகளுக்கு தகப்பன் யாரென தெரியாது . காரணம் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு உடலுறவு வைத்திருந்திருக்கிறார்   மெர்லினின் தாய் "க்ளாடிஸ் மன்றோ பேக்கர்" . தாய்க்கே தெரியாத போது , மெர்லினுக்கு எப்படி தெரியும் தன தந்தை யாரென ? . இவள் தன் வாழ்வின் கடைசி அத்தியாயம்  வரைக்கும் தகப்பனின் பாசத்திற்கு ஏங்குகிற சிறுமியாகவே இருந்தார் என்பது பலருக்கு தெரியாது .  தன் வாழ்வில் தகப்பன் என்கிற உறவு மட்டும் வெற்றிடமாக இருந்ததில்  ஆரம்பித்தது மெர்லினுக்கு முதல் மன அழுத்தம் . இவளுடைய தகப்பன் என்கிற நேசத்தின்  தேடல் தான் , இவள்  தன் வாழ்வின் பலதரப்பட்ட ஆண்களோடு  உறவு வைத்திருந்ததற்கு காரணமாக இருந்திருக்க கூடும் . இவள்,  தான் திருமணம் செய்துகொண்ட ஆண்களை "டாடி " என்றே அழைத்தார் என்கிற  செய்தியில்  இருந்து இதை என்னால் அனுமானிக்க முடிகிறது .


மெர்லின் பிறந்த இரண்டு வாரங்களில் , மெர்லினின் தாய் இவளை ஒரு தம்பதியிடம் தத்து கொடுத்திருக்கிறாள் . அவள் பிறந்த இரண்டு வாரங்களில் ஆரம்பித்த இந்த நாடோடி வாழ்க்கை அன்றிலிருந்து மெர்லின் என்கிற பூ , பல கைகளுக்கு மாறி மாறி கடைசியில் மிச்சமில்லாமல் சிதைந்துபோன அவளின்  வரலாறு தான் அன்றைக்கு என்னை நிம்மதி இழக்க செய்தது .  இவள் பல வளர்ப்பு பெற்றோர்களுக்கு  மாற்றி மாற்றி கொடுக்கபட்டாள் . பிறகு ஒரு அநாதை விடுதியில் வந்து விழுந்திருக்கிறது மெர்லினின் வாழ்க்கை . தன் தாய் "க்லாடிசை " அவ்வபோது சென்று பார்த்து வந்திருக்கிறாள் , விதி அவள் தாயின் மன நலத்தை சிதைத்த போது, மெர்லினும் சிதைந்தே போனாள் . மெர்லினின்   தாய் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் , இவள் மீண்டும் வளர்ப்பு பெற்றோர்களிடமே வந்துவிழுந்திருக்கிறாள் .


இவள் வாழ்வின் உச்சகட்ட சோகம் , மெர்லின் தன் வளர்ப்பு தந்தையாலேயே  வன்புணர்ச்சிக்கு ஆளானாள் என்பது தான் . அதுவும் மெர்லினுக்கு எட்டு வயதாகும்போது  மெர்லினை வளர்த்த "கிம்மல்" என்கிற கிழ நாய் மெர்லினை பாலியல் வன்புணர்ச்சி செய்தது என்பது தான் எனக்கு பேரதிர்ச்சியையும் , தாளா துக்கத்தையும் இவள் வரலாற்றை படிக்கும் போது தந்தது .  கிம்மலை தொடர்ந்து சிறுவயதிலேயே இவள் பலரால் குதறபட்டிருக்கிறாள். "அந்த வயதில் என்னை சுற்றிய உலகம் முழுவதுமே இருண்டு கிடந்தது. வெளியேறும் வழியில்லாமல் பயந்துபோயிருந்தேன்"  என்று மெர்லினே பின்னாளில்  , தன்னுடைய அன்றைய சூன்ய நாட்களை பற்றி சொல்கிறார் . பாவம் மெர்லின் ! வேறென்ன சொல்ல ....

தன் பதினாறாவது வயதில் மெர்லினுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அவளது வளர்ப்பு பெற்றோர் . இந்த திருமணத்திற்கு பிறகு தான் , தன் கணவனோடு தங்கி இருந்த ஊரில் "டேவிட் கொனோவர் " என்ற புகைப்பட காரனின் கண்ணில் பட்டிருக்கிறார் மெர்லின் . இந்த டேவிட் கொனோவர் தான் "நார்மா ஜீன் மார்டின்சென்" என்கிற அழகு பதுமை "மெர்லின் " என்கிற புது அவதாரம் எடுக்க காரணமாயிருந்திருக்கிறார் . வெறும் ஐந்து டாலருக்கு ஒப்பந்தம் செய்து இவர் மெர்லினை எடுத்த புகைப்படங்கள் பின்னாளில் பல முன்னணி பத்திரிக்கையின் அட்டைப்படங்களில் வந்து அமெரிக்காவை வாய்பிளக்க வைத்திருக்கிறது .

மெர்லின் மீது கொஞ்சம் கொஞ்சமாக புகழின் வெளிச்சம் விழத்தொடங்கிய காலகட்டத்தில் மெர்லினின் முதல் கணவனுக்கும் இவளுக்கு பிணக்கு ஏற்பட்டு அது மண முறிவில் வந்து நின்றிருக்கிறது . அதன் பின்னால் "ஜோ டி மாகியோ " என்கிறவரோடு இரண்டாம் திருமணம் , பின் மூன்று நான்கு என மெர்லினுக்கும் ஆண்களுக்குமான  உறவு நீடித்திருக்கிறது . இதை வெறும் காம கண்ணோட்டத்தில்  மட்டும் பார்க்காதீர்கள் . இவளோடு வாழ்ந்த ஆண்களுக்கு வேண்டுமானால் அப்படி ஒரு தேவையோடு மெர்லினின் காலடியில் விழுந்து கிடந்திருக்கலாம் , ஆனால் மெர்லினுக்கு அப்படி இருக்க அவசியம் இருந்ததாக தோன்றவில்லை . காரணம் , இவள் மூன்றாவதாக கட்டிக்கொண்ட ஆணுக்கு வயது 60  . அவர் வேறு யாருமல்ல பிரபல எழுத்தாளர் "ஆர்த்தர் மில்லர்"  .  முன்னாள் கணவர்கள் மெர்லினை உருகி உருகி காதலித்தார்கள் . ஆனால் மெர்லினோ மூன்றாவதாக வந்த "ஆர்த்தர்" என்கிற 60  வயது எழுத்தாளரை காதலித்திருக்கிறாள் . ஆர்த்தரோடு  படுக்கையை பங்கிட்டபோதும்   இவள்  அவரை "டாடி" என்றே அழைத்திருக்கிறாள் . வெறும் காமத்தேவைக்கா 60  வயது ஆணோடு வாழ துணிந்தாள் மெர்லின் ?

மெர்லின் என்பவள் வெறும் கண்களாலேயே ஆண்களை கற்பிழக்க தூண்டுவாள் , இவளின் மிதமிஞ்சிய காமம் சொட்டும் நடிப்பு பல இளைஞர்களை புரட்டி போட்டது , மெர்லின் என்கிறவள் ஆண்களின் பாலினதேவையின் குறியீடு என்றே இந்த உலகம் தப்பு தப்பாக  பிம்பம் உருவாக்கியது .. .. பெண்கள் என்றால் , அதுவும் சகஜமாக சிரித்துப் பேசும் அழகான பெண்களென்றால் அவர்கள் சுலபத்தில் நமக்கு இசைந்து நம்மோடு படுத்துவிடுவார்கள் என்றே சில ஆண்களின் புத்தி வரையறை செய்திருக்கிறது . அதன் விளைவே இப்படி மெர்லின் காட்சிபடுத்தபட்டாள் . மெர்லின் ஒருபோதும் உடலுறவின் மீது அதீத ஆர்வம் காட்டவில்லை . ஆனால் ஆண்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவளின் மனநிலை தான் அவளை அப்படிப்பட்ட படங்களில் வெறும் கவர்ச்சி பிம்பமாக நடிக்க வைத்திருக்கிறது .  ஆனால் அதுவல்ல மெர்லினின்  நிஜ உருவம் . மெர்லின்  என்பவள் இலக்கியங்களை காதலிக்கிறவளாக , கவிதைகளை காதலிக்கிறவளாக , நாடகங்களை காதலிக்கிறவளாக இருந்திருக்கிறாள் . ஆனால் ஆண்கள் அதை எதையும்  பார்க்கவில்லை , உரித்து தொங்கவிடப்பட்ட அவள் உடலின் சதைகளை தவிர . மெர்லின் நடிகை என்று தெரிந்தவர்கள் கூட , மெர்லின் ஒரு அற்புதமான பாடகி என்பதை தெரிந்திருக்கவில்லை , அல்லது அதை பொருட்படுத்த அவர்களுக்கு விருப்பமில்லை . கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறாள் மெர்லின். அத்தனையும் பிரபலம் . ஆனால் மெர்லினிடம் இதெல்லாம் யார் எதிர்பார்த்தார்கள் , அவளின் வாளிப்பான உடலை தவிர .

 சிக்மன்ட் ஃப்ராயிட், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் என இவளுக்கு இருந்த இலக்கிய தேடல் தான் ,  இந்த அறிவுக்காதல் தான் ஆர்த்தர் மில்லர் என்கிற முதியவரை நோக்கி மெர்லினை அழைத்தது . ஆனால் இதில் சோகம் என்னவென்றால் , மில்லரும் கூட மெர்லினிடம் மண்டியிருந்த அறிவின் ஆர்வங்களை அங்கீகரிக்கவில்லை , மாறாக அவளின் கட்டுடல்  மீது விழுந்து பிரள மட்டுமே மில்லர் ஆசைப்பட்டிருக்கிறார் .

புகழின் வெளிச்சம் இவள் மீது பெரு ஒளியை பாய்ச்சத்தொடங்கிய  போதே , இவள் மனச்சிதைவின் ஆரம்ப கட்டத்தில் காலெடுத்து வைத்துவிட்டாள். இந்த "ஹாலிவுட்  உலகம் ஒரு பரத்தையர் விடுதி " என பின்னாளில் மெர்லின் சொன்னதை போல , மெர்லினை மேலோட்டமாக  சதைகளை மேயவே அங்கு பெருங்கூட்டம் அலைந்துகிடந்திருக்கிறது . ஒரு பக்கம் , மெர்லின்  உலக  இளைஞர்களின் தேவதையாக  விஸ்வரூபம் எடுத்திருந்தாள், ஆனால்  அதே சமயம் இவள் உடம்பிற்குள்ளும்  மனஉளைச்சல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருந்திருக்கிறது . வலி உணரா மருந்துகளும் , தூக்க மாத்திரைகளும் , மிதமிஞ்சிய குடியும் இவள் வலிகளை குறைக்கவில்லை , மாறாக அது இன்னும் இன்னும் அதிகபடுத்தி இருந்திருக்கிறது .

அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி , மற்றும் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் மெர்லினோடு உறவில் இருந்திருக்கிறார்கள் . ஆனால் அதுவே மெர்லினை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது . மெர்லின் ஒரு உளவாளி , கென்னடி இடம் இருந்து ராஜ ரகசியங்களை திருடுகிறாள் என இவள் மீது வசை மாறி பொழிய ஆரமபித்த போது மெர்லின் இன்னும் ஒடிந்து போனாள் .

மிதமிஞ்சிய குடி , அளவுக்கதிகமான தூக்க மாத்திரை , அடிக்கடி நிகழ்ந்த கருச்சிதைவு என மெர்லின்  சிதயதொடங்கினாள். இவளின் புகழ் ஏணி சரியதொடங்கியது . 1962  ஆகஸ்ட்டு ஐந்தாம் தேதி தன்னுடைய வீட்டின் படுக்கையறையில் மெர்லின் இறந்துகிடந்தார் , நிர்வாணமாக .  இறப்பிற்கு காரணம் "அன்றிரவு எடுத்துக்கொண்ட அதிகப்படியான தூக்கமாத்திரை மற்றும் வலியுணரா மாத்திரைகள் " என மருத்துவர்கள் சொன்னார்கள் .


(மெர்லின் படுக்கையில் இறந்துகிடக்கும் புகைப்படம் . மெர்லினின் கடைசி புகைப்படம்)

கொடுமையின் உச்சம் இனி தான் . எந்த உடலை இந்த உலகம் ஆராதித்ததோ , எந்த உடலை நக்கி ருசிக்க நாக்கை தொங்கபோட்டு அலைந்தார்களோ , எந்த உடலின் சந்துகளில் குடி இருக்க இவர்கள் ஆசைபட்டார்களோ அந்த உடல் வாங்க ஆளில்லாமல் பிணவறையில் மூன்று நாட்கள் கிடந்திருக்கிறது . மெர்லின் என்கிற சதை பிண்டத்தில் ரத்த ஓட்டம் இருந்தபோது அவளுக்காக எதையும் செய்ய தயார் என சொன்னவர்கள் , ரத்த ஓட்டம் உறைந்த போது இவளின் பிணத்தை பெற்று இறுதி அஞ்சலி செலுத்தகூட தயாராக இருக்கவில்லை என்கிற செய்தி தான் என்னை அறுத்தது .

மெர்லின் யாரோ ஒரு முகம்தெரியாத  நடிகரோடு  வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடும் பதினைந்து நிமிட கருப்புவெள்ளை காட்சி 2006  இல் 1 .5 மில்லியன் டாலருக்கு விலை போனது . ஆனால் அந்த சதைக்கு பின்னால் ரத்தமும் வலியுமாய் உணர்ச்சிகள் இருந்தது என்பதை உணரத்தான் இங்கே ஆளில்லை . வெறும் காட்சியை காசு கொடுத்து வாங்கிய உலகம் , இவள் உடலை பெற்று இறுதி மரியாதை கூட செய்ய துணியவில்லை .


தந்தை யாரென தெரியாது , தாய் பைத்தியமாகிபோனாள், வளர்த்த தந்தையாலேயே  வன்புணர்ச்சிக்கு ஆளானாள், காலத்தின் கடைசி அத்தியாயம் வரை  ஆண்களால் கடித்து குதறபட்டாள், வாழ்வு முழுக்க வலி வலி வலி என இருந்தவள்  அதிகப்படியான வலி நிவாரணிகளால் இறந்துபோனாள் என்பது என்னால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை .

மெர்லின் படிக்கபடாமல் கிழிக்கப்பட்ட பொருள் பொதிந்த கவிதை . வாசிக்கபடாமல் உடைத்தெறியபட்ட  இசையின் யாழ் . ஒரு பாடகியாக , ஒரு இலக்கியவாதியாக இவள் உருவாகி இருக்க வேண்டியவள் . இவள் அழகாய் பிறந்து தொலைத்தாள், அதனாலேயே தன் வாழ்வை வெறும் 36  வயதில் தொலைத்து கண் மூடி மண்ணுக்கு இரையாகிப்போனாள் . இனியும்  இவள் வெறும் காமத்தின் குறியீடு , கவர்ச்சியின் பதுமை என எனக்கு சொல்ல தோன்றவில்லை .

மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு "டாடி" அழுகிறான் .!

"ஒட்டடை படிந்த என் இளமையின் மீது , நேற்றிரவு ஒரு  நாய் வந்து மூத்திரம் பெய்ததது " என நான் ஒரு சூன்ய காலத்தில்  கிறுக்கிய வரிகள் உன் வாழ்க்கைக்கு பொருந்திப்போவது  எனக்கு வேதனை அளிக்கிறது  மெர்லின் .

மீளாத்துயில் கொள்ளும் எழில் தேவதையே , வலி நிறைந்த வாழ்வில் கிடைக்காத அமைதி , உன் மரணத்தில் கிடைத்திருக்கும் என்று மட்டும் ஆறுதல் கொள்கிறேன் .


-- க.உதயகுமார்


குறிப்பு : இந்த கட்டுரை எழுதப்பட்ட தேதி அக்டோபர் 15 , 2011 . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

5 comments:

 1. மாக்கள் அவியினும் வாழினும் என்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி தோழர் !!!

   Delete
  2. அழகாய் பிறந்தது தான் அவள் குற்றமா .வாசிக்கும் போது கலங்கி விட்டன கண்கள். இச்சைதனை மட்டும் நோக்கும் இழி மக்கள் இருக்கும் வரை பெண்களின் சாபம் இது ..இனிய உங்கள் மனம் போல நலமுடன் வாழ்ந்திடுக உதயகுமார் .

   Delete
 2. சபிக்கப்பட்டது மர்லின் மன்றோ மட்டுமா? மர்லினை இப்படியான அநீதிக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் குறியீடாகவே நான் பார்க்கிறேன்.

  கவிதைத்தனமான வரிகளுடன் நெகிழ்ச்சியான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அவளின் துயில் இல்லா இரவுகளில் எப்போதுமே அவளுக்கான ஒரு ஆண் என்பவன் இருந்திருக்க வாய்ப்பில்லை....

  ReplyDelete