Friday 16 October 2015

உன் திரும்புதலற்ற வானின் கீழ்

பளிச்சிட்டு பிராகாசிக்கிறது
அந்தி
பறவைகள்
சாம்பல் மினுங்கும் வானின் கீழ்
திரும்பி வருகின்றன

உன் திரும்புதலுக்கான
உத்திரவாதங்கள்
ஏதும் இல்லை
என்னிடம்

என் மீதான
அக்கறையின்மைகளோடு
நீ எங்கோ சென்றுவிட்டதாகவே
நான்
சுவர் பல்லிகளிடத்தில்
சொல்லி இருக்கிறேன்

நீ
தனித்தொன்றும்
சென்றிருக்கவில்லை
முடிவற்ற
முடிவேயற்ற
எனது வாஞ்சைகளோடு
சென்றிருக்கிறாய்

நீயில்லாது போனதால்
கூட்டினுள்
எனதுடல்
ஒட்டடை
படியத்துவங்கி இருக்கிறது
உனக்கது தெரியுமா ?

எனது
அறையெங்கும்
எனது
படுக்கையெங்கும்
உனது
சுவடுகளின் மிச்சம்
அவைகளோடு
நான் என்ன செய்வேன் ?

எந்த புள்ளியில்
தொடங்கிற்று
நம்திந்த பயணம்
எனக்கு நினைவில்லை
உனக்கு நினைவிருக்கிறதா
மேலும்
எந்தப் புள்ளியில்
இது
நிறைவுரப்போகிறது
உனது திரும்புதலுக்கான
சாத்தியங்கள் இல்லாத போது
நான் இதை தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்

ஒருவேளை
நீ திரும்பி வந்தால்
அந்த அதிசயம்
நடந்தே விட்டால்
இருவரில் ஒருவர்
கொலையாகும்
சாத்தியமும் இருக்கிறது

இந்த
வாழ்க்கை
எண்ணற்ற துரோகங்களால்
வனையப்பட்டிருக்கிறது
இல்லையா

எனது கனவினில்
ஒட்டடைகள்
ஓவியம் போல
பின்னிக் கிடக்கின்றன
தனித்த மாலைப்பொழுதினில்
யாரோ விட்டுச் செல்லும்
அதிர்வுகள்
எனை
துடிக்கச்செய்கின்றன

யாருமில்லாத
எனதறையினுள்
இன்னும் திரும்பிவராத
உனை
நினைந்து நினைந்து
பெருகிச்சிதருவேன்
தூங்கும் ஒரு இளவரசனின்
கனவைப் போல

1 comment: