நீ அருகில்லாத
வேளைகளில்
என்னுள் பற்றிப் படர்கின்றன
உன் நினைவுகள்
எனதறையில்
நிறையும்
வெயில் போல
அனுதினங்களின்
கொடுங்கசப்புகளை
விழுங்கிச்செரிக்கவும்
எங்கோ தூரத்தில் நிகழும்
துர் மரணத்தின் நெடியை
இல்லாமல்
செய்வதும் கூட
உன்னுடைய நினைவுகள் தான்
பின்னிப் பிணையும்
சர்ப்பங்கலென
உன் நினைவுகள்
எனக்குள்
கிளர்த்துகின்றன
ஆயிரமாயிரம் மோகத்தின் முடிச்சுகளை
அனலென தகிக்கும்
என் தாபத்திற்கு
உன் நினைவுகளும்
போதுமானதாக இல்லை
உனது நினைவினில்
அந்தியில் தோட்டத்துக்கு வந்து சென்ற
ஊர்க்குருவியை
பார்க்காமல் போனதில்
எனக்கு வருத்தங்களில்லை
எனது அசௌகரியமான
பயணங்களில்
கீதமிசைத்து
இலகுவாக்குவது
உன் நினைவுகலன்றி வேறென்ன
எனது ஆற்றொனா பெருந்துயரங்கள்
ஆறுதலடைவது
உனது பிரியங்களின்
அருகாமையில் தான்
உனது நினைவுகளின் வழியே
பாயும்
என்
ஜீவ நதிக்கு
இருகரைகளும் நீ மட்டுமே தான்
இந்த இரவில்
இரக்கமின்றி காயும் நிலவு
உண்டாக்குகிறது
கொடும் தனிமையை
நான்
அதை
உன் நினைவின் துணை கொண்டு
நிரப்பப் பார்க்கிறேன்
ஆயினும்
அது போதுமானதாயில்லை
No comments:
Post a Comment