Monday 19 October 2015

பதிலில்லாத கேள்வி

நீ ஏன்
எப்போதும் தனியாக உணர்கிறாய் ?

நீ கேட்ட கேள்விக்கு
பதிலெதுவும் இல்லை என்னிடம்
தனியாக கைவிடப்பட்டவன்
தனியாகத் தானே இருக்கமுடியும்
என்றொரு பதிலை சொல்ல நினைத்து
எச்சில் கூட்டி விழுங்கிவிட்டேன்
நான் உன் பகடிக்கு ஆளாக விருப்பமில்லாது

நான் இக்காலங்களில்
உடையாத நிசப்தங்களின் நடுவே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
அடர்ந்த மௌனத்தில்
யாரோடும் பேசுவதில்லை நான்
உதிர்ந்த சருகை
யாருண்டிங்கே கொண்டாட

நான் மீண்டும்
வந்துன் கதவை தட்டுவேன்
என்ற உன் அனுமானங்களை
நான் பொய்யாக்கிவிட்டேன்
என் பாதை
நீண்டு வருவது
உன் வீட்டை நோக்கி அல்ல
மேலும்
இந்த உலகம் பெரியது

ஒரு பட்டுப்பூச்சி
தன் கூட்டை உடைத்துக்கொண்டு
 வெளியேறுவது போல
அழகாக வெளியேறிவிட்டேன்
வலி மொத்தமும் எனக்குத்தான்

வலி பழக்கிய
ஒன்று மட்டும் தான்
நீ எனக்கு செய்த
ஆகப்பெரிய காரியம்
மற்றபடி
நான் தனியாக உணர்வதில்
உன் பங்கென்று  ஒன்றுமில்லை

வெளியேறியதில் இருந்து
நான் நானாக இருக்கிறேன்
சர்வ சுதந்திரங்களோடும்
என் முத்தங்களை
எனக்கே கொடுத்துக் கொள்கிறேன்

இது என் பாதை
என் பயணம்
என் முடிவு
நீ எப்போதும் போல அரளிகளை
ரசித்துக் கொண்டிரு
நான் எருக்கம்பூக்களை
சூடியிருப்பவன்

1 comment: