அது ஒரு சுப தினமாய் இருந்தது
உன்னை விட்டு நீங்கும்
முடிவை
நான் எடுத்த தினம்
நீங்குதளுக்கான காரணம்
சொல்ல வேண்டுமில்லையா
நீ
என்னிடம்
ஏற்படுத்தாத
மனச்சோர்வேதுமில்லை
எல்லா வேளையிலும்
உன்னை நினைத்திருந்தேன்
நீயோ
முணுமுணுப்புகளோடு என்னை புறக்கணித்தாய்
ஆகச்சிறந்த
என் அலாதி அன்பை
உனக்கே உனக்கென
விட்டு வைத்தேன்
ஒரு பூனையின் பாதம் கொண்டு
நீயும் பருகிவிட்டு
போட்டுடைத்தது என் மனதை அல்லவா
உன்னோடு இருக்கவே
பிடிக்கும் என்றேன்
ஒரு நடு நிசியில்
எனை ஆகாதவன் போல்
தள்ளிவைத்தாய்
சம்பங்கி மலர்களை
பிடிக்கும் என்றேன்
அவைகளை பிடுங்கி கசக்கி எறிந்தாய்
புல்லாங்குழல் இசைப்பது
இஷ்டம் என்றேன்
குழலை உடைத்து சிதைத்து சிரித்தாய்
உனக்கு வேண்டியதெல்லாம்
எனது விருப்பங்களை
இல்லாமல் செய்வது
பின் எப்படி உன்னோடு
நான் நீடிக்க
நானே எனக்கு
போதுமானதாக இருக்கிறேன்
எனது ஏகாந்தம்
எனக்கு இனிதாக இருக்கிறது
எனது வாசலில்
உனது கால்தடங்களை
நான் விரும்பவில்லை
எனது கூரையின் மேல்
உனது கிரணங்களை
நான் அனுமதியேன்
போதுமா
நான் உன்னை நீங்கியதன் காரணங்கள்
நான் ஒரு சிறு குருவி
என்னை இறகு நீவி
கையில் ஏந்திக் கொண்டால்
காலம் முழுக்க அன்பை தருவேன்
உனக்கது வாய்த்திருக்கவில்லை
என்பது என் பிழையா
No comments:
Post a Comment