Monday, 28 December 2015

எஞ்சிய பிரியங்களோடு

நீ அருகில்லாத  வேளை
எப்படியோ
வந்துவிட்டன
சில வலிகளும் வருத்தங்களும்நீ எனக்கு
கொடுத்திருக்கும்
தண்டனைக்கு
நான் தகுதியற்றவன்என் நெஞ்சம்
வலியால்
நிறம்பித் தளும்புகிறது
நீயோ பொய்களை கொண்டு
குழலூதிக்கொண்டிருக்கிறாய்என் பதற்றமிக்க மௌனம்
உடைந்துசிதறும்
நொடிக்காக காத்திருக்கிறாய்
உனக்கு வேண்டியதெல்லாம்
பிசுபிசுப்பான
என் சொற்களின் குருதிநீண்ட காத்திருத்தல்களுக்குப்பின்
வந்து விழும்
ஒற்றை சொல் போல்
என் பிரியங்கள்
மதிப்பு வாய்ந்தவை
நீயோ
அவைகளை
போகிறபோக்கில்
உடைத்து சிதறடிக்கிறாய்என் பிரியத்தின்
பிரமாண்டத்தை
உனக்கு பிரித்துக் காட்டும்
அவகாசம் எனக்கு கொடுக்கப்படாமலேயே
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவுஒரு கனவை போல
பிறிதொருநாள்
நீ என்னை கடக்க நேர்ந்தால்
அப்போதும் பகிர்வேன்
எஞ்சிய என் பிரியங்களை நீ பெற்றுக்கொள்ளாத
மீதமான என் பிரியங்களை
கொண்டு
கட்டி எழுப்புவேன்
நமக்கே நமக்கென
சில கவிதைகளை 

Sunday, 27 December 2015

அவமதிப்பு

சட்டையை கழற்றி
அணிவது போல
உனக்கு
மிக சுலமாக இருக்கிறது
என்னை அவமானப்படுத்துதல்நீ என்னுள்
உருவாக்குகின்ற
பதற்றம்
என்னை பற்றிய அவநம்பிக்கையை
கட்டிஎழுப்புகிறதுசின்ன முகச்சுளிப்பில்
சுக்குநூறாய்
உடைத்தெறிகிறாய்
மனதைஉன் அவமதிப்பின் நகம் கீறி
வழியும் குருதியில்
பின்னப்பட்டிருப்பது
என் ஒழுக்கமான நடத்தையும் தான்கண்டும் காணதது போல
என் கதறலை
நோக்கமறுக்கிறாய்
கேட்டும் கேளாதது போல
என் கேவலை
உதாசீனப்படுத்துகிறாய்நான் உனக்கு கையளித்த
பிரியங்களை
வேண்டாமென உதறிவிட்டாய்
உனக்கு பிரியங்களை
பிடிக்கவில்லையா
அல்லது
பிரியமாய் இருப்பவர்களையே பிடிக்கவில்லையா ?குழந்தை மனசுனக்கு
எப்போதுதான்
புரிந்திருக்கிறது
கால்பந்தினை போல்
எளிதில் எட்டியுதைக்கிறாய்எனக்குள்
தேங்கிக்கிடக்கும்
அழித்தகற்றவியலாத
உன் புறக்கணிப்பின் சித்திரங்கள்
என்றென்றைக்குமாய்த்
என் தனிமையின் துயரங்களை
தின்றபடி இருக்கும்

Wednesday, 16 December 2015

பிரிவோம்

உன்னோடிருந்த
கடந்த கால நாட்களை
நினைத்துகொள்கையில்
நினைவுக்குள்
வலி பீறிடுகிறது

 
எவ்வளவு பொய்கள்
அத்தனையும் பொருத்திருந்தேன்
கேட்கச்சகிக்காத எத்தனையோ
சொற்களை
கேட்டிருந்திருக்கிறேன்சிக்கல் மிகுந்ததாய்
மாறிப்போன உறவுக்குள்
உன் நிமித்தம்
நான் நீடித்திருந்தேன்இத்தனைக்குப்  பிறகும்
நீ என்னை நிராகரித்திருப்பது
என் நெஞ்சை வலியால் நிரப்புகிறதுஇவ்வளவு பாசாங்கை
எப்படி இத்தனை நாளாய்
உள்ளுக்குள் மறைத்துவைத்திருந்தாய்

 
கனக்கும் உன்
அழுகிய சொற்கள்
மனதை சிதைவுறசெய்கின்றன


என் கேவல் மொழியை
உனக்கு தெரியவில்லை
என் துருவேறிய மௌனம்
உனக்கு புரியவில்லை
இப்போதும்
என்னிடம் உன்னால்
எப்படி புன்னகைக்க முடிகிறதுநீ நீயாகவும்
நான் நானாகவும்
அவர் அவர் நிலைக்கு
மீள்வோம்
நமதிடையே எதுவுமே
நிகழாதது போலஎந்த சலனமுமின்றி
கைகுலுக்கி பிரிவோம்
அழுகிய நாற்றத்தோடு  சேர்ந்திருப்பதைவிடவும்
பிரிந்துவிடுவது உத்தமம் இல்லையா
Tuesday, 15 December 2015

தொடரமுடியாத வாழ்வு

நான் விரும்பும் தொலைவிற்கு
என்னால் வெளியேரிச்செல்லமுடியவில்லைமுரணான
இந்த வாழ்வின்
எதிர் எதிர் திசைகளில்
பயணப்படும்
என் மனம்
ஒடுங்கி மீள்கிறது
திடுக்கிடவைக்கும் உன் நிராகரிப்பால்நீ என்னுள் பிரவேசித்த
நாளின் ஞாபகம்
வெற்றிடங்களை உருவாக்கத்தவறவில்லைஇன்னும் கூட
மீதமிருக்கின்றன
என் மீதான்
உன் வெறுப்பின் மிச்சங்கள்என் நினைவில்
நெடுங்காலமாய் புதையுண்டிருக்கிறது
நீ இல்லாமல் போய்விட்ட துயரம்யாருமில்லாத வெளியில்
யாரோ விட்டுச்சென்ற
அலைக்கழியும் குரலென
நான் சோர்ந்துபோய்விட்டேன்எனதிந்த தனிமையுடன்
மிக நிராதரவான நிலையில்
ஒதுங்கிக்கிடக்கிறேன் 
இங்கிருந்து வெளியேறும்
வழிகளை ஆராய்ந்தபடிஎனது தனிமையின்
நிறம்
ஆகாயத்தின் கரையலாம்எனது தனிமையின்
முடிவு
மரணத்தில் சேரலாம்நீ இல்லாமல் போய்விட்ட
எனதிந்த தனிமையைவிடவும்
மரணம்
பற்றிக்கொள்ள ஏதுவானது எனக்கு

 
பாதியில் தடைபட்டுவிட்ட
கனவினைப்போல
தொடரமுடியவில்லை
இந்த வாழ்வைகொஞ்சம் கொஞ்சமாக
நைந்து கிழிந்துபோகக்கூடும்
நீ இல்லாத
எனதிந்த வாழ்வுஎன்னிடமிருக்கும் சிறகுகள்
பறப்பதற்கில்லை

நிலாவினில் கிடப்போம்


நேற்று

நாம் இருந்தோம்

பொதிகையின் மடியினிலே

 

உனக்கு பிடித்தமானவைகள்

எனக்கும் பிடித்திருந்தது

உனக்கு ஆகாதவைகள்

எனக்கும் அப்படியே ஆயின

 

பிரியங்களால்

ஒருவரையொருவர்

தழுவிக்கிடந்தோம்

சிந்திய முத்தங்களில்

வண்டுகள் ரீங்கரித்தன

 

உனது பயணம்

எனது பயணம் ஆனது

உனது பாதை

என்னை நோக்கி நீண்டது

 

 

இன்று

நாம் இருக்கிறோம்

பிரிவின் கரங்களிலே ...

 

தள்ளி நின்று

சொல்கிறாய்

என் அன்பு அபத்தமென்று

 

பிரிவின் நகம் கீறி

வழியும் குருதியை

நக்கி ருசிக்கிறாய்

 

நானோ வலிக்கிறது என்கிறேன்

நீயோ

என் கேவல்

உனக்கு கேட்கவில்லை என்கிறாய்

 

நமதிடைவெளியில்

எதுவுமே நடக்காதது போல

வெகு இயல்பாக

நேற்று தொலைபேசினாய்

எனக்கோ

பிரிவின் துயர் வாடை

மூச்சை நிறுத்தியது

 

உன் நலம் விசாரிப்புகள்

என்னை

காயப்படுத்தின

உரையாடலின் இறுதியில்

நீ உதிர்த்த புன்னகை

என் மீது

நீ செலுத்திய வன்முறை

 

என்னால்

எளிதில் உன்னை

மறக்கமுடியவில்லை

முன்பு பகிர்ந்த

முத்தத்தின் தடயங்கள்

வியர்த்து வழிகிறது

 

உன் நினைவின் தாழ்வாரத்தில்

அரளியென வேர்பிடித்திருக்கிறேன்

நீயோ

உன் அசட்டையான பார்வையால்

வெந்நீர் ஊற்றுகிறாய்

 

நமக்கு ஏன்

இப்படி ஆனது

நான் 

தூக்கம் தொலைத்து

துயரம் கொண்டது

உன் அவமதிப்பால் தானே

 

நான்

தரை மோதி அழுகிறேன்

குலுங்கி உடைகிறது கண்ணீர்

 

என்றாவது ஒருநாள்

நீ என்னை புரிந்துகொள்வாய்

என்ற என் நம்பிக்கை

என் புவனத்தை சுழற்றுகிறது

 

கேவியழுது கேட்கிறேன்

என்

அன்புனக்கு வேண்டாமா ?

 

 

எனக்கு நம்பிக்கை இருக்கிறது

மீண்டும் நாம் இருவரும்

நிலாவினில் கிடப்போம்

அன்று

வானின் நட்சத்திரங்கள்

நம் இருவரின் மீதும்

கவி பாடும்

உன்னை அடைதலென்பது ....

தேடித் தேடி
ஏமாற்றங்களோடு  திரும்புதலென்பது
இந்நாட்களில்
எனக்கு
இயல்பாகி இருக்கிறதுநீ இருக்கும்
திசைகளை
எனக்கு திறக்க தெரியவில்லைஒரு பறவையென
உன் கிளையினில்
வந்தமரும்
கொடுப்பினை எனக்கில்லைதுயரடர்ந்த இந்த வாழ்வின்
முடிச்சுகளை
அவிழ்க்கத்தெரியாத
நான் எப்படி
உடையும் உன் மௌனத்தை
மொழிபெயர்ப்பதுஎன்னை தவிர்க்க முயலும்
உன் குரலை
பற்றிக்கொள்ள விழையும்
நடுங்கும் என் கரங்களுக்கு
ஏதொன்றும் வாய்ப்பதில்லைநீ கைநழுவிப்போவாயோ
என்ற
தாளவியலாத பதற்றத்தில்
சீர்குலைகின்றன
என் தவிப்புகள்நிராகரிப்பின் விஷம் தீண்டிய
என்னை
யாருக்கு அடையாளம் தெரியாவிட்டாலும்
உனக்கு தெரியுமில்லையா ?பிரவேசிக்க முடியாத
காலத்தின் ரகசியம் பொதிந்தது
என் வெளியாராலும்
எளிதில் நெருங்கிவிட இயலாத
தூரத்தில்
இருக்கிறது
நீ எனக்கு பரிசளித்திருக்கும்  தனிமைதனிமையில் இருப்பது என்பது
வெறுமனே 
தனித்து இருத்தல் மட்டுமல்ல

Friday, 11 December 2015

எஞ்சிய நம்பிக்கைகள்

கைபேசியில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும்
உனது தொலைபேசி இலக்கம்
வேறெதையெதையோ நினைவுறுத்தியபடி
என்னைத் தவிர்க்க முயல்கிறதுஉன்னிடமிருந்து அழைப்பு
இன்று வரும்
இன்றில்லையேல் நாளை
நாளையும் இல்லையானால்
பிறிதொருநாள்
என்று எஞ்சிய
என் நம்பிக்கையில்
நகர்கிரதென் வாழ்வுஉன் குரல் கேட்டிடாத
ஒவ்வொரு கணமும்
நான் நானாக உணர்வதில்லைஎன் ஏனைய
பகல் பொழுதின் தவிப்புகளிலிருந்து
உனது ஒற்றை சொல் மட்டுமே
விடுவிக்க இயலும்நான் உனக்கு வேண்டாம்
என்று நீ முடிவெடுத்தபின்னால்
புறக்கணிப்பின் விஷம் தீண்டிய
எனக்கு துணையிருப்பது
உன் பெயர் சுமந்த கைப்பேசிமட்டுமேபகல் பொழுதிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட இரவு
கொண்டுவருகிறது
எல்லா துயரங்களையும்
அவ்விரவில்
எனக்கு துணையிருக்கும்படி
மன்றாடுகிறேன்
தூங்கிவிட்ட தொட்டிச்செடியிடம் 

 
உன் நினைவாக என்னிடம்
இருக்கும் மேல்சட்டை 
உயிர்ப்பின் வெம்மையோடு
என் அலமாரிக்குள்
உன் நினைவுகளை
அடைகாக்கிறது நீ எப்பொழுது என்னை அழைப்பாய் ?
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது உன் குரல் கொண்டென்னை தீண்டுவாய் ?
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது என் தவறுகளை மன்னித்து
நெஞ்சோடு அணைத்துக்கொள்வாய்
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது
தீப்பிடித்துக் கொண்ட என் ஆகாயத்தில் நீரூற்றுவாய்
எனக்கு தெரியாதுஆனால்
எனக்கு ஒன்று தெரியும்
நான் உன்னை முகம்முகமாய்
சந்திக்க நேர்ந்தால்
எழில் புன்னகையோடு
ஒரு பறவையை போல
என் தோளில்வந்தமர்வாய்
என்ற நம்பிக்கை மட்டும்
புத்தகத்தினுள் மயிலிறகாய்
எனக்குள்  ஒளிந்திருக்கிறது