Wednesday 7 October 2015

தூக்க மாத்திரைகளாலும் கைவிடப்பட்டவர்கள்

தூக்க மாத்திரைகளால்
கைவிடப்பட்ட
இரவு
மிக நீண்டதாய்
இருக்கிறது

விட்டு விட்டு
மிணுக்கும்
இந்த விளக்கு
அசௌகரியத்தோடு  கண்களை
பிடுங்குகிறது

உறங்குகிறவர்கள்
மிக அழகாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்

கைவிரல்களோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
கடிகார சத்தத்தில்
திடுக்கிட்டு
காலத்தின் இருப்பை
பிரக்ஞையுருகிறேன்

தீரா  கோவத்தினை
தலையணையை  கீறி கீறி
ஆற்றுப்படுத்துகிறேன்

இழந்துவிட்டவைகளை
நினைந்து நினைந்து
அழுகிறேன்
அழுகுரல் சப்தத்தில்
எழுந்துவிடுகிறது இரவு

என்னிடமிருந்து நழுவுமிந்த
காலத்திடம்
கையிற்றை இழுத்துப்பிடித்து நிற்கிறேன்
என் மரணத்தை கையளிக்காமல்
எங்கு செல்வாய்
என வழக்கு நடத்துகிறேன்

என்னிடம் பூக்கள் நீட்டும் விடியலிடம்
முகம் கொடுக்காமல்
கிழிந்த என் ஆடை இழுத்து
குறி மறைக்கிறேன்

வலிகளால் நிரம்பிய
என் வாழ்வை
இழுத்துத்திரிகிறேன்
வாதையுடன் எழுகிறது
என் சூரியன்

தூக்க மாத்திரைகளாலும் 
கைவிடப்பட்டவர்கள்
துர்பாக்கியசாலிகள்

No comments:

Post a Comment