Friday 23 October 2015

மழை நாள்



மழை  தூவும்
நாளில் 
எல்லாமுமே
அழகாகிவிடுகின்றன
 
ஈரத்தோடு பறக்கும்
குருவிகளுக்கு
தன்  உடலொன்றும்
பாரமில்லை
 
பறவையின் சிறகு
சுமந்து அலைகிறது 
துண்டு  மேகத்தை
 
 
கொடிகளில் அமர்ந்தபடி
உடல்களை
சிலுப்பும்
மாடப்  புறாக்களின்
உடல்  மொழியில்
ஆயிரமாயிரம்  ஓவியங்கள்
 
இலைகளில்
ஒட்டியிருக்கிறது
திட்டு  திட்டாய்
மேகம் 
 
ஈரமான  தார்சாலைகளில்
உதிர்ந்துகிடக்கும்
மலர்களில்
மிளிர்கின்றன கூடுதல்  அழகு
 
மழையில் நனைந்திடாத
பூக்களில் 
என்ன எழில் 
இருந்துவிடப்போகிறது ?
 
கண்ணாடி சன்னல்களில்
ஒழுங்கற்ற கோடுகளாய்
பொழியும் மாரிக்கு
மனதை  கொடுக்கலாம்
 
மழைக்கு
பிந்தைய வானம்
தன்  அடையாளம் இழந்தாலும் 
அழகாக்கிவிடுகின்றது
அவனியில் அனைத்தையும்
 
மழை  நாளை
போல 
எல்லா  நாளும்
இருந்துவிட்டால்
இந்த  வாழ்வை
ஏன்  நமக்கு பிடிக்காது 
 
தூவும்  வானத்தின்
சரங்களை
தாவிப்பிடித்து
வானம்  போய்விட ஆசை  தான்
என்னை  போல் ஒருத்தனை
ஏற்றுக்கொள்ளுமா
மழைவானம்

No comments:

Post a Comment