Monday 26 October 2015

காற்றோடு போவேன்

பகலின் சுவரில்
வெயில் ஒழுகி ஒழுகி ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறது வெறுமையான பகல் நேரம் சூன்யமானது அது நினைவுகளை கிளர்த்தி கிளர்த்தி நெஞ்சினை கொல்லும் நேற்று பேருந்து பயணத்தில் பார்த்திருந்தேன் ஒரு குழந்தை சிரிக்கிறது கை நீட்டுகிறது முகத்தை பொத்திக்கொள்கிறது பின் மீண்டும் சிரிக்கிறது ஒரு குழந்தையாக இருத்தல் அவ்வளவு சுலபமில்லை வளர்ந்தபிறகு அந்தக் குழந்தை உன்னை நினைவுபடுத்த தவறவில்லை நீ குழந்தை தான் என் முத்தத்திற்கு அடம்பிடித்த வேளையில் பசிக்கிறது என என் அடிவயிற்றை கட்டிக் கொண்ட பொழுதுகளில் உறங்கும் போது கால்களை என் மேல் படர்த்தி உறங்குகையில் எல்லாம் நீ குழந்தையாகத் தான் இருந்தாய் பின் எப்போது நீ துரோகம் பயின்றாய் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை சலனமேயின்றி அன்றொருநாள் கேட்டாய் "நீ யார் இன்னும் என்னோடு இங்கிருக்க " நான் பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினேன் எனக்கு உயிர் வரை வலித்தது நான் அழுதபடி வெளியேறிய அந்த இரவு இன்னும் கரைந்துவிடாத கனவாக என்னை இன்னமும் அழவைக்கிறது நீ காற்று வெளிகளில் கேசம் உலர்த்துகையில் நான் கண்ணீர் உலர்த்தினேன் நீ விடியலின் மீதேறி சூரியன் பார்க்கையில் நான் இரவுக்குள் அமர்ந்தபடி நட்சத்திரங்களோடு அழுதிருந்தேன் நீ மேட்டிமையானவைகளோடு புழங்கிக்கொண்டிருக்கையில் நான் என்னிலும் தாழ்ந்தவற்றோடு சிநேகிக்க தொடங்கினேன் எனக்கு இப்படி இருக்க பிடித்திருக்கிறது ஒரு கனவினை போல நீ என்னை மூடியிருந்த காலம் பழங்கதையாகிவிட்டது ஒரு மாமழை போல நீ என்னை நனைத்திருந்த பொழுதுகள் ஈரம் உலர்ந்துவிட்டன ஒரு பெரு வெள்ளம் போல நீ என்னை சூழ்ந்திருந்த நிமிடங்கள் மிச்சமின்றி வடிந்துவிட்டன இனி நம் உறவில் என்ன இருக்கிறது வெற்றிடங்களை தவிர உதிர்ந்த இடத்தில் மீண்டும் பூக்குமா என்ற அச்சத்தோடு நடுங்கியபடி நிசப்தம் நிலவும் என் நுரையீரல் வலியோடு சுவாசிக்கிறது ஒன்று மட்டும் சொல்கிறேன் என்றாவது ஒரு நாள் என் நிழல் தேடுவாய் அன்று நிச்சயம் உன் கைக்கு சிக்காமல் காற்றோடு போவேன் நான் காற்றோடு போவேன்

No comments:

Post a Comment