Saturday, 31 October 2015

புழுக்கம்

போர்வை வேய்ந்த
என் உடல் புழுக்கத்தின்
வெப்பத்தினை
மின்விசிறியின் துணைகொண்டு
வெளியேற்றுவேன்

மழைக்கிட்டாத ஏமாற்றங்களோடு
இளவேனிர்காலத்து வெயிலிடம்
இல்லை
எனக்கு எந்த குற்றசாட்டுகளும்

புழுங்கி வழியும்
வேர்வையின் பிசுபிசுப்பில்
காலநிலையின் பிரதிபளிப்பு

நீ இல்லாத
இவ்வேளைதனில்
உள்ளே புழுங்கிடும்
மனப்புழுக்கத்தை
யாரிடம் சொல்வேன் நான்

எனது பருவத்தின் மீது
திரண்டு பெருகும்
வெயில்
நினைவுக்குள் நுழைந்துகொள்கிறது
நீயாக

வெகு அமர்த்தலாக
காயும் இந்த சூரியனிடம்
கிழிபடும்
என் மழைக்கால பக்கங்கள்
இந்த அசௌகரியங்களுக்கு
பழகிவிட்டேன் நான்

பின்னிரவின் மூடுபனி
ஏற்படுத்திய
உதட்டு வெடிப்புகளில்
பகலின் புழுக்கத்தை பூசிவைத்து
காத்திருக்கிறேன் உனக்காக 

நீ வராமல்
போனதில்
எனக்கேற்பட்ட 
சங்கடங்களினால்
நான் வெயில் போல
காய்ந்து விடுவிப்பேன்
அனல் மூச்சினை
அதில் கருகி  முடியும்
காலம் 

என்றாலும்
புழுக்கங்களை  தவிர
என்னிடம் இல்லை
யாரிடமும் சொல்ல
ஒரு செய்தியும்

Thursday, 29 October 2015

வாழ்க்கை

தொடரவியலாத வாழ்க்கையை
தொடரத்தான் வேண்டியிருக்கிறது
சில நிர்பந்தங்களினால்


இங்கே
முழுக்க சரியென்றும்
முழுக்க தவறென்றும்
எதுவுமில்லை

பூரணமில்லாத வாழ்வில்
எதை கொண்டு
நிறைக்க

சிறகிழந்து
வெறும் தடயங்களோடு
வாழ்பவனுக்கு
போக்கிடம் தான் ஏது

புதிதாக
எதையுமே கொண்டுவருவதில்லை
சமயத்தில்
இந்த வாழ்க்கை
ஆயினும்
வாழ நேர்கிறது
அது எல்லோர்க்கும்
நிகழும்
விசித்திரம்

எதை எதையோ
நினைவூட்டி
அச்சமூட்டிடும்
வாழ்விடம்
நாம் அடங்கி தஞ்சமடைய
வலுவான காரணங்கள்
இருப்பதில்லை

சாகப் பயந்தவர்களுக்கு
வாழ்க்கையொரு வேதாளம்
சாகத்துணிந்தவர்களுக்கு
வாழ்க்கை வெறும் கால் தூசு
சாவை அறியாதவர்களுக்கோ
வாழ்க்கையொரு  பெரும்புதிர்

வெற்று  சமாதானங்களாலும்
புலம்பல்களாலும்
நிரப்பப்பட்ட
குப்பைதொட்டிதானே
வாழ்க்கை

இதோ
பக்கத்தில் இருக்கிறது மரணம்
ஆயினும்
தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது
மாய  வாழ்க்கையை

வாழ்க்கை
பொய்
மரணம்
நிஜம்

வாழ்வு சுமையாகும்
தருணங்களில்
மரணம்
கனவாகிறது 

இறுதியில்
எல்லோரும்
சாகத்தான்
வாழ்கிறோம்

இறந்துபோதல் என்றால்
எல்லாவற்றையும் விட்டு
எங்காவது நீங்கிப்போதல் இல்லையா

இங்கிருந்துகொண்டிருக்கிறேன்
என்பது எவ்வளவு பொய்
இனி இங்கிருக்கமாட்டேன் என்பது தான்
எவ்வளவு நிஜம்

தொடரவியலாதபோதும்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
வாழ்க்கை
அதன்
ஆயிரமாயிரம் புதிர்களோடும்
எண்ணிக்கையற்ற மற்றும் பதில்களற்ற கேள்விகளோடும்

வலி
வாதை
கேவல்
கண்ணீர்
இவையனைத்தும்
உள்ளடக்கியது
நிதர்சனம்

நான் என்பது
நிஜமற்ற பொய்
மரணம்
மெய்யான உண்மை

எது எதில்
தொலையப்போகிறது

Wednesday, 28 October 2015

ஆலகால பட்சி


ஒரு வழிபோக்கனின் புன்னகையை விடவும்
எளிமையாக   இருந்தது
நேற்று இறுதியாக
நீ வன்மம் மறைத்து சிரித்தது


சுலபத்தில்
சரித்து விடுகிறாய்
கோட்டைகளை
இடிந்து விழுகின்றன
நம்பிக்கைகள்

உன் விழிகளின்
மொழி புரிவதில்லை
பாவை  அலைவுறும்  விசை 
அதிவேகமாக இருக்கிறது
இக்காலங்களில்
அது கொலை பழகுகிறது

நேற்றுன்னை
வேண்டாவெறுப்பாய் ஸ்பரிசிக்கையில்
நீலம் பாரித்த உடலை கண்டு
தோழி கேட்டாள்
சர்ப்பங்களோடும்  நீ  புணர்வாயோ
என்று

நீ விஷமாகிவிட்டாய்
சொற்களும் சிரிப்பும்
கூட
விஷம் பூசுகின்றன
என்னை போன்ற
மந்தையில் இருந்து தொலைந்த ஆடுகளையும் விடுவதில்லை
அது


நீ
ஆலகால பட்சி

நானின்றி ...

எப்போதும்
நான் இல்லாமலேயே
நிகழ்ந்துவிடுகின்றன
என் குறித்த
எல்லா காரியங்களும்

நான் தொடுவதற்கும்
ஸ்பரிசித்தது முடிப்பதற்கும்
முன்பே
காரியங்கள்
சித்தி அடைந்திவிடுகின்றன

என்றாகிலும்
நான் உடனிருக்க
முயல்கிறேன
எனை தவிர்த்தே
அரங்கேறுவதில்
அத்தனை முனைப்பு

நானின்றி
நிகழ்கிறது
என் சுவாசம்

நானின்றி
நிகழ்கிறது
என் காலம்

நானின்றி
நிகழ்கிறது
என் வாழ்வு

நானின்றி
விரிகின்றன
என் திசைகள்

நானின்றி
உதிக்கிறது
என் சூரியன்

நானின்றி
சிவக்கிறது
என் அந்தி

எனக்கும்
ஏனயவைகளுக்குமான
இடைவெளியில்
இருக்கும்
உலகோ
மிகப்பெரிது

நான்
அனுமதித்து
கொண்டுதான் இருக்கிறேன்
என் காலம்
நான் இன்றி சுழல்வதை
மற்றும்
என் சுவாசம்
நானின்றி நிகழ்வதை

Tuesday, 27 October 2015

உனது நினைவின் வழி

நீ அருகில்லாத வேளைகளில் என்னுள் பற்றிப் படர்கின்றன உன் நினைவுகள் எனதறையில் நிறையும் வெயில் போல அனுதினங்களின் கொடுங்கசப்புகளை விழுங்கிச்செரிக்கவும் எங்கோ தூரத்தில் நிகழும் துர் மரணத்தின் நெடியை இல்லாமல் செய்வதும் கூட உன்னுடைய நினைவுகள் தான் பின்னிப் பிணையும் சர்ப்பங்கலென உன் நினைவுகள் எனக்குள் கிளர்த்துகின்றன ஆயிரமாயிரம் மோகத்தின் முடிச்சுகளை அனலென தகிக்கும் என் தாபத்திற்கு உன் நினைவுகளும் போதுமானதாக இல்லை உனது நினைவினில்
அந்தியில் தோட்டத்துக்கு வந்து சென்ற ஊர்க்குருவியை பார்க்காமல் போனதில் எனக்கு வருத்தங்களில்லை எனது அசௌகரியமான பயணங்களில் கீதமிசைத்து இலகுவாக்குவது உன் நினைவுகலன்றி வேறென்ன எனது ஆற்றொனா பெருந்துயரங்கள் ஆறுதலடைவது உனது பிரியங்களின் அருகாமையில் தான் உனது நினைவுகளின் வழியே பாயும் என் ஜீவ நதிக்கு இருகரைகளும் நீ மட்டுமே தான் இந்த இரவில் இரக்கமின்றி காயும் நிலவு உண்டாக்குகிறது கொடும் தனிமையை நான் அதை உன் நினைவின் துணை கொண்டு நிரப்பப் பார்க்கிறேன் ஆயினும் அது போதுமானதாயில்லை

Monday, 26 October 2015

காற்றோடு போவேன்

பகலின் சுவரில்
வெயில் ஒழுகி ஒழுகி ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறது வெறுமையான பகல் நேரம் சூன்யமானது அது நினைவுகளை கிளர்த்தி கிளர்த்தி நெஞ்சினை கொல்லும் நேற்று பேருந்து பயணத்தில் பார்த்திருந்தேன் ஒரு குழந்தை சிரிக்கிறது கை நீட்டுகிறது முகத்தை பொத்திக்கொள்கிறது பின் மீண்டும் சிரிக்கிறது ஒரு குழந்தையாக இருத்தல் அவ்வளவு சுலபமில்லை வளர்ந்தபிறகு அந்தக் குழந்தை உன்னை நினைவுபடுத்த தவறவில்லை நீ குழந்தை தான் என் முத்தத்திற்கு அடம்பிடித்த வேளையில் பசிக்கிறது என என் அடிவயிற்றை கட்டிக் கொண்ட பொழுதுகளில் உறங்கும் போது கால்களை என் மேல் படர்த்தி உறங்குகையில் எல்லாம் நீ குழந்தையாகத் தான் இருந்தாய் பின் எப்போது நீ துரோகம் பயின்றாய் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை சலனமேயின்றி அன்றொருநாள் கேட்டாய் "நீ யார் இன்னும் என்னோடு இங்கிருக்க " நான் பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினேன் எனக்கு உயிர் வரை வலித்தது நான் அழுதபடி வெளியேறிய அந்த இரவு இன்னும் கரைந்துவிடாத கனவாக என்னை இன்னமும் அழவைக்கிறது நீ காற்று வெளிகளில் கேசம் உலர்த்துகையில் நான் கண்ணீர் உலர்த்தினேன் நீ விடியலின் மீதேறி சூரியன் பார்க்கையில் நான் இரவுக்குள் அமர்ந்தபடி நட்சத்திரங்களோடு அழுதிருந்தேன் நீ மேட்டிமையானவைகளோடு புழங்கிக்கொண்டிருக்கையில் நான் என்னிலும் தாழ்ந்தவற்றோடு சிநேகிக்க தொடங்கினேன் எனக்கு இப்படி இருக்க பிடித்திருக்கிறது ஒரு கனவினை போல நீ என்னை மூடியிருந்த காலம் பழங்கதையாகிவிட்டது ஒரு மாமழை போல நீ என்னை நனைத்திருந்த பொழுதுகள் ஈரம் உலர்ந்துவிட்டன ஒரு பெரு வெள்ளம் போல நீ என்னை சூழ்ந்திருந்த நிமிடங்கள் மிச்சமின்றி வடிந்துவிட்டன இனி நம் உறவில் என்ன இருக்கிறது வெற்றிடங்களை தவிர உதிர்ந்த இடத்தில் மீண்டும் பூக்குமா என்ற அச்சத்தோடு நடுங்கியபடி நிசப்தம் நிலவும் என் நுரையீரல் வலியோடு சுவாசிக்கிறது ஒன்று மட்டும் சொல்கிறேன் என்றாவது ஒரு நாள் என் நிழல் தேடுவாய் அன்று நிச்சயம் உன் கைக்கு சிக்காமல் காற்றோடு போவேன் நான் காற்றோடு போவேன்

Sunday, 25 October 2015

கைவிடப்பட்டவர்களின் கதிஎன் தோட்டத்து மரத்தில்
வந்தமர்ந்த குருவி
என்னை பொருட்படுத்தியேயிராதபோதும்
இல்லை ஒரு வருத்தமும்

வாஞ்சையோடு அழைக்கையில்
முகம் திருப்பிக் கொண்ட
பூனைக் குட்டியோடு
இல்லை ஒரு பிணக்கும்

காற்று வேண்டி
தோட்டத்தில் அமர்ந்திருக்கையில்
என்னை நிரகரிக்கும்படியாக
ஆடாது அசங்காது
நின்ற மரங்களின் மீது
இல்லை ஒரு கோவமும்

நான் தூங்கும்போது பொழிந்திருந்துவிட்டு
கண்விழித்ததும் காணமல் போன
மழையின் மீது
இல்லை ஒரு குற்றச்சாட்டும்

என் வருத்தமெல்லாம்
என் ஏக்கமெல்லாம்
நீ என்னை பொருட்படுத்தாததும்
நீ என்னை நிராகரித்ததும் தான்
உயிர் வலிக்க
தரையடித்து அழச்செய்கிறது

காற்றில் தன்போக்கிர்க்கு
பறந்துபோகும்
உதிர்ந்த இலையென ஆனேன்
கைவிடப்பட்டவர்களின்  கதியெல்லாம் இதுதானே

எனது கவிதை

காற்றும் மழையும் 
நான் கொஞ்சி மகிழ்ந்த அணிலும் 
அறியும் எனது கவிதையை 

எதிலிருந்தும் 
எழுதாமல்
என்னிலிருந்து
தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்
என் கவிதைகள் அறியும் என்னை

எனக்கும் கவிதைகளுக்கும்
இடையே ஒன்றுமில்லை
நேசமாய் தழுவிக்கொள்ளும்
காற்றைத் தவிர

உனக்கோ
என்னையும் தெரியவில்லை
என் கவிதைகளையும் தெரியவில்லை

கண்ணீர் தொட்டு
காற்று எழுதும்
என் கவிதைகள்
எப்போதும் சரணடையாது உன்னிடம்
என் கவிதைக்குள்
நான் என்பது நான் மட்டுமே
நீ ஒருபோதும்
அதன் உலகமாகமாட்டாய்

Friday, 23 October 2015

உனது விசுவாசம்

நடு  நிசிக்கு
பிந்தைய
இரவுகளில்
பயணிக்கிறேன்
பாதாளத்திற்கு
கருமையடைந்த  அதன்
சுவர்களோ
எனை அச்சப்படுத்துகின்றன

மீண்டு வருகிறேன்
நிசி தாண்டி பகல் பொழுதிற்கு
அங்கே
காத்திருப்பதோ
விசுவாசமற்ற
உனதுறவு

அதன் திசைகளில்
வியாபித்திருப்பதோ
சூழ்ச்சிகளும்
ஈரமற்ற காட்சிகளுமே

நான்
நடுங்கிக்கிடக்கிறேன்
அதை
நீயோ
அல்லது
இந்த வாழ்வோ
சட்டை செய்ததாய் தெரியவில்லை

என்னை மீறி
வேகமாக
எங்கோ கடந்து போய்கொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை

நீ வினவுகிறாய்
விசுவாசமாய்
இருத்தல் என்றால் என்ன என்று
நான் உனக்கு எப்படி விவரிப்பேன்
உண்மையாய் இருக்கும் நிலையை

என் முகத்துக்கு நேரே
பேசு
என் கண்களை பார்த்து
சிரி 

எல்லா நிலையிலும்
எனை நம்பு

நீரள்ளி  அருந்தசொன்னால்
குடி

நெருப்பள்ளி தின்னசொன்னால்
தின்று தீர்

வலிக்கிறது என்று நான் சொல்லுமுன்பே
என்  வலியுணர்

வழியும் என் கண்ணீரை
உண்மையென நம்பி
உள்ளங்கையில் பொத்திக்கொள்

என் உடல்சூட்டில்
துளி துளியாய்  நம்பி கரைந்துவிடு

என் காலடிசுவடுகளின்
பாதையை தேடிவந்து 
ஒழுக்கத்தை சந்தேகிக்காதே
ஒருபோதும்
எனது நிர்வாணத்தில்
களங்கம் காணாதே

நான் அழுதிருக்கும் வேளையில்
எனது விரல்களுக்குள்
உனது
விரல்களை நுழைத்து
இறுக்கி அணை
உண்மையாய்  இருப்பதை
வேறெப்படி நான் விவரிக்க

இது தான்
இப்படி இப்படியாக இருப்பது தான்
விசுவாசம்

நான்
விசுவாசித்திருந்தேன்
உனது
உறவை
உனது
ஆன்மாவை
மற்றும்
உனது
கண்ணீரை

ஆனால்
நீயோ
என்னிடம் வேண்டியது
மிரட்டல் தொனியில்
சில உத்திரவாதங்களை
மற்றும் சில சந்தேகங்களை

எப்படி
பொருந்திப்போகமுடியும்
இப்படியொரு உறவுக்குள்

உனதுறவு
எனக்கு
பூட்டிவிட்ட சிறகுகளை
நான்
இரக்கமின்றி துண்டித்துக்கொண்டேன்
உன் மீதான
எனது விசுவாசங்களை
காற்று வெளிதனில்  பறக்கவிட்டுவிட்டேன்

நான் இப்போது
உணர்வதோ
கனமற்ற ஒரு மேகத்தை போல

மழை நாள்மழை  தூவும்
நாளில் 
எல்லாமுமே
அழகாகிவிடுகின்றன
 
ஈரத்தோடு பறக்கும்
குருவிகளுக்கு
தன்  உடலொன்றும்
பாரமில்லை
 
பறவையின் சிறகு
சுமந்து அலைகிறது 
துண்டு  மேகத்தை
 
 
கொடிகளில் அமர்ந்தபடி
உடல்களை
சிலுப்பும்
மாடப்  புறாக்களின்
உடல்  மொழியில்
ஆயிரமாயிரம்  ஓவியங்கள்
 
இலைகளில்
ஒட்டியிருக்கிறது
திட்டு  திட்டாய்
மேகம் 
 
ஈரமான  தார்சாலைகளில்
உதிர்ந்துகிடக்கும்
மலர்களில்
மிளிர்கின்றன கூடுதல்  அழகு
 
மழையில் நனைந்திடாத
பூக்களில் 
என்ன எழில் 
இருந்துவிடப்போகிறது ?
 
கண்ணாடி சன்னல்களில்
ஒழுங்கற்ற கோடுகளாய்
பொழியும் மாரிக்கு
மனதை  கொடுக்கலாம்
 
மழைக்கு
பிந்தைய வானம்
தன்  அடையாளம் இழந்தாலும் 
அழகாக்கிவிடுகின்றது
அவனியில் அனைத்தையும்
 
மழை  நாளை
போல 
எல்லா  நாளும்
இருந்துவிட்டால்
இந்த  வாழ்வை
ஏன்  நமக்கு பிடிக்காது 
 
தூவும்  வானத்தின்
சரங்களை
தாவிப்பிடித்து
வானம்  போய்விட ஆசை  தான்
என்னை  போல் ஒருத்தனை
ஏற்றுக்கொள்ளுமா
மழைவானம்

Wednesday, 21 October 2015

விடுவித்துகொள்ளல்

எல்லா நேரமமும் இரைந்து கொண்டிருக்கிறது அருவி சத்தங்களில் இருந்து என்னை கொஞ்ச நேரமேனும் விடுவித்துக்கொள்ள அந்த்தப் பாடலை இசை நான் இந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்து செல்ல விரும்புகிறேன் துரோகங்களில் இருந்தும் வஞ்சங்களில் இருந்தும் வழி மாறி வேறெங்காவது சென்றுவிட விரும்புகிறேன் இசையை தவிர எனக்கு வேறு சப்தங்களை பிடிக்கவில்லை மௌனங்களுக்குள் பிரவேசித்து பதுங்கிகொண்டுவிட்டால் பாதுகாப்பாய் இருப்பேன் என்றுணர்கிறேன் மழை சத்தம் பிடிக்கிறது சன்னல் கண்ணாடிகளில் மோதி உடையும் மழையின் சத்தம் ஒரு துளிக்கும் மறு துளிக்கும் இடையே நான் ஜீவிக்க விரும்புகிறேன் துளிகளோடு சேர்ந்து உடைந்தாலும் மேல் மழையோடு சிதறுதல் பேரெழில் மழையினது சன்னதத்தில் மனங்குளிர நனைந்திருத்தல் மற்றெல்லாவற்றயும்விட எனக்கு முக்கியம் மனிதர்களிடத்தில் என்ன இருக்கிறது ? மழையிடத்தில் எல்லாம் இருக்கிறது நான் மனிதர்களிடமிருந்து தப்பி மழையினது கருப்பையில் சூல் கொள்ள விரும்புகிறேன் மீண்டும் புதுத் துளியாய் பிறந்தால் புதுராகம் இசைப்பேன் மண்வாசம் துளிர்க்க

எனக்கு தேவையெல்லாம்
இங்கிருந்து
தப்பிக்க வேண்டும்

Tuesday, 20 October 2015

......................................................

யாரோ வருகிறார்கள் 
யாரோ போகிறார்கள் 
நான் வெறும் சாட்சியாக 
நீண்டநாட்களாக இங்குதானிருக்கிறேன் 

எனை வெறுக்கவோ
நேசிக்கவோ
ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கிறது

இந்நாட்களில்
நான் பழகுவதெல்லாம் மௌனம்தான்
மேலும்
இங்கில்லாமல் போவது எப்படியென

என் பெயர் கேட்டவுடன்
அழைப்பை துண்டிக்கும்
இத்தனை புறக்கணிப்பை
இவ்வளவு நாளாக
எங்குமறைத்துவைத்திருந்தாய்

இத்தனை கசப்பை
உள்ளுக்குள் வைத்திருந்தா
என்னோடு சிரித்துப் பேசி
என் முத்தம் தின்றாய் ?
உடலதிரச்செய்கிறது உன் பாசாங்கு

கரையவே கரையாத சொற்களை
நீரின் ஆழத்தில் ஒளித்துவைத்திருந்து
இத்தனை நாளும் எப்படி
உன்னால் நேசித்தல் போல
நடிக்க முடிந்தது

கல்லெறிந்த குளத்தின்
மேற்பரப்பென
சலனமுற்றிருக்கிறேன்
நீ இன்னமும் கல்லெறிவதை நிறுத்தவில்லை

என்றாவதொரு நாள்
எதேச்சையாக சந்திக்க நேர்ந்தால்
அப்போதும் சிரித்தபடி கைகுலுக்குவாய்
நான் நன்கு அறிவேன்
வெறுப்பை மறைக்கும் சாத்தியமற்ற உன் முகத்தை

எதுவுமே நிகழாதது போல
நீ இருக்கிறாய்
தொட்டியில் இருந்து வெளியே குதித்துவிட்ட
மீனைப் போல நான் துடிக்கிறேன்
நீயோ கொள்ளை அழகென்று சிலாகிக்கிறாய்

நான் உனக்கு
சொல்ல விரும்புவதெல்லாம்
இன்றைய வானிலை
இப்படியே நீடித்துவிடாது

Monday, 19 October 2015

மீளுமோ இனி

காற்றில்
எருகஞ்செடி மெல்ல படபடக்க ...

எங்கோ கேட்கிறது
துயர்நிறைந்த பாடலொன்று

இனி எப்போதும் சந்திக்கப் போகிறோம்
என்ற உத்திரவாதங்கள் ஏதுமற்று
பிரிந்தோம் அன்றொரு நாள்

முகமுகமாய் பார்த்துக்கொள்ளவோ
விரல் கோர்த்து பின்
விடிவிக்கவோ
மெல்ல விசும்புகையில்
என் கண்ணீர் துடைத்து முத்தமிடவோ
அன்பொழுக ஏதொன்றும் செய்யாமல் தான்
அன்று பிரிந்தோம்

யாதொரு வலியுமில்லை
என நீயும்
எல்லாவித வலியும் தருகிறது
என நானும்
நம் பிரிவை பற்றிக்கொன்று நிற்கின்றோம்

காற்றில் சலசலக்கும்
குளத்தின் மேற்பரப்பு
சற்று நேரத்தில் அடங்கிவிடும்
என்றல்லவா நினைத்திருந்தேன்
இறுதியில்
எப்போதும் அலையடிக்கும்
கடலாகிப்போனேனே

இன்னமும் காற்றில் ஆடுகிறது
எருகஞ்செடி
காற்றோய்ந்தால் நீ வந்தென்னை
அள்ளிக்கொள்வாயா

பதிலில்லாத கேள்வி

நீ ஏன்
எப்போதும் தனியாக உணர்கிறாய் ?

நீ கேட்ட கேள்விக்கு
பதிலெதுவும் இல்லை என்னிடம்
தனியாக கைவிடப்பட்டவன்
தனியாகத் தானே இருக்கமுடியும்
என்றொரு பதிலை சொல்ல நினைத்து
எச்சில் கூட்டி விழுங்கிவிட்டேன்
நான் உன் பகடிக்கு ஆளாக விருப்பமில்லாது

நான் இக்காலங்களில்
உடையாத நிசப்தங்களின் நடுவே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
அடர்ந்த மௌனத்தில்
யாரோடும் பேசுவதில்லை நான்
உதிர்ந்த சருகை
யாருண்டிங்கே கொண்டாட

நான் மீண்டும்
வந்துன் கதவை தட்டுவேன்
என்ற உன் அனுமானங்களை
நான் பொய்யாக்கிவிட்டேன்
என் பாதை
நீண்டு வருவது
உன் வீட்டை நோக்கி அல்ல
மேலும்
இந்த உலகம் பெரியது

ஒரு பட்டுப்பூச்சி
தன் கூட்டை உடைத்துக்கொண்டு
 வெளியேறுவது போல
அழகாக வெளியேறிவிட்டேன்
வலி மொத்தமும் எனக்குத்தான்

வலி பழக்கிய
ஒன்று மட்டும் தான்
நீ எனக்கு செய்த
ஆகப்பெரிய காரியம்
மற்றபடி
நான் தனியாக உணர்வதில்
உன் பங்கென்று  ஒன்றுமில்லை

வெளியேறியதில் இருந்து
நான் நானாக இருக்கிறேன்
சர்வ சுதந்திரங்களோடும்
என் முத்தங்களை
எனக்கே கொடுத்துக் கொள்கிறேன்

இது என் பாதை
என் பயணம்
என் முடிவு
நீ எப்போதும் போல அரளிகளை
ரசித்துக் கொண்டிரு
நான் எருக்கம்பூக்களை
சூடியிருப்பவன்

Friday, 16 October 2015

உன் திரும்புதலற்ற வானின் கீழ்

பளிச்சிட்டு பிராகாசிக்கிறது
அந்தி
பறவைகள்
சாம்பல் மினுங்கும் வானின் கீழ்
திரும்பி வருகின்றன

உன் திரும்புதலுக்கான
உத்திரவாதங்கள்
ஏதும் இல்லை
என்னிடம்

என் மீதான
அக்கறையின்மைகளோடு
நீ எங்கோ சென்றுவிட்டதாகவே
நான்
சுவர் பல்லிகளிடத்தில்
சொல்லி இருக்கிறேன்

நீ
தனித்தொன்றும்
சென்றிருக்கவில்லை
முடிவற்ற
முடிவேயற்ற
எனது வாஞ்சைகளோடு
சென்றிருக்கிறாய்

நீயில்லாது போனதால்
கூட்டினுள்
எனதுடல்
ஒட்டடை
படியத்துவங்கி இருக்கிறது
உனக்கது தெரியுமா ?

எனது
அறையெங்கும்
எனது
படுக்கையெங்கும்
உனது
சுவடுகளின் மிச்சம்
அவைகளோடு
நான் என்ன செய்வேன் ?

எந்த புள்ளியில்
தொடங்கிற்று
நம்திந்த பயணம்
எனக்கு நினைவில்லை
உனக்கு நினைவிருக்கிறதா
மேலும்
எந்தப் புள்ளியில்
இது
நிறைவுரப்போகிறது
உனது திரும்புதலுக்கான
சாத்தியங்கள் இல்லாத போது
நான் இதை தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்

ஒருவேளை
நீ திரும்பி வந்தால்
அந்த அதிசயம்
நடந்தே விட்டால்
இருவரில் ஒருவர்
கொலையாகும்
சாத்தியமும் இருக்கிறது

இந்த
வாழ்க்கை
எண்ணற்ற துரோகங்களால்
வனையப்பட்டிருக்கிறது
இல்லையா

எனது கனவினில்
ஒட்டடைகள்
ஓவியம் போல
பின்னிக் கிடக்கின்றன
தனித்த மாலைப்பொழுதினில்
யாரோ விட்டுச் செல்லும்
அதிர்வுகள்
எனை
துடிக்கச்செய்கின்றன

யாருமில்லாத
எனதறையினுள்
இன்னும் திரும்பிவராத
உனை
நினைந்து நினைந்து
பெருகிச்சிதருவேன்
தூங்கும் ஒரு இளவரசனின்
கனவைப் போல