Wednesday 14 October 2015

...................................

ஈரமற்று இருக்கிறது
காற்று

நமதிடையே
நெருக்கமற்ற இச்சூழலின்
வெம்மை
இந்நாளை
ரணமாக்குகிறது

பிளந்து விழும்
கிரண ஒளியில்
முகம் பார்த்து அமர்ந்திருக்கும்
என் இந்த
தனிமை பொழுதை
பற்றி
நீ என்ன நினைக்கிறாய்

உனது அவமதிப்பென்னும்
சர்ப்பம்
தீண்டிய பின்
நான் இப்படித்தான் அமர்ந்திருக்கிறேன்
ஒரு பைத்தியக்காரனின்
அறிகுறிகளோடு

நீ என்னை தவிர்க்க முயன்றதை
நான் கண்டு கொண்டேன்
அதன் நிமித்தம்
என் பொழுது
தனித்தொரு பொழுதாய்
அமைந்துவிட்டது

என் உடலெங்கும்
நெளியும்
பச்சை பாம்புகளென
உனது புறக்கணிப்புகள்
உள்ள போதும்
எனக்கெனவும் மிணுக்குகிறது
தூரத்தே ஒரு சிவப்பு நட்சத்திரம்
நிச்சயம் அது உன் சாயலில் இல்லை

உன் அருகாமையில்
அன்றொரு நாள்
எல்லா வசந்தங்களும்
இருந்தது
திடுமென
விழுந்த இடியென
மாறிப்போனது காலம்
இப்பொழுது
எதுவும் இல்லை என்னிடம்

சலனங்கலேதுமின்றி
எனது
தனிமைத் துயரங்களை
கடந்து போகும்
பறவைகளுக்கு
தெரியுமா
முன்பந்த வசந்த காலத்தில்
நீ எனக்கு கொடுத்த முத்தம்

நீ புறக்கணித்துவிட்ட பின்னால்
இப்போதேல்லாம்
உனக்காகவேனும்
வாழ நினைக்கிறேன்
உனக்கெதிராக
நானில்லையென்றாலும்
உன் முகம்
வாடிப்போகும் படியாய்
வாழ்ந்துவிடுவேன்

No comments:

Post a Comment