Thursday, 1 October 2015

உனது திமிரும் எனது போதாமையும்

ஒட்டடை படிந்துவிட்ட
உருவுகளுக்குள்
உறங்கிக்கொண்டிருகிறோம்
இருவரும்

இருவரின் கையிலும்
பளிச்சிடுகிறது கொலைவாள்

நம்மில்
யாரேனும் ஒருவர்
கொலையாகும் சாத்தியத்துடனே தான்
நீடிக்கிறது
நமதிந்த உறவு

இப்படி ஏன் 
நீடிக்க வேண்டும் இது

கொடுங்கசப்புடன் நீ
என்னை எதிர்கொள்ளும்போதெல்லாம்
உடைகளுக்குள்
உடைந்து சிதறுகிறேன்

உன் சொல்லுக்கு கீழ்படியும்
என்னை
உன்  விருப்பத்திற்கு வளைத்திருக்கிறாய்
படுக்கையில்
எனதுடல் நோக்கி நீளும் உன் கரங்களை
நான் தட்டியதே இல்லை
என் நிர்வாணம்
உனக்கொரு  பொம்மை மட்டுமே

இணைந்திருக்கக்கூடாத இருவர்
இணைந்திருக்கிறோம்
என்னை பற்றிய
உனது அனுமானங்களோடு
நீ தனியே விலக  யோசிப்பதில்லை
ஏனெனில்
உன் அதிகாரத்தை
செலுத்த
எப்போதும் உனக்கொரு
உடல் தேவை

அது என்னுடையதாய் போனது தான்
துரதிர்ஷ்டம்

வெளுத்துவிட்ட வானத்தில்
ஒற்றையாய் சுற்றித்திரியும்
பறவையை பார்க்கையில் எல்லாம்
எச்சில் கூட்டி விழுங்கிக் கொள்வேன்


எனது  சிறகின்மையை நினைத்து

No comments:

Post a Comment