நடு நிசிக்கு
பிந்தைய
இரவுகளில்
பயணிக்கிறேன்
பாதாளத்திற்கு
கருமையடைந்த அதன்
சுவர்களோ
எனை அச்சப்படுத்துகின்றன
மீண்டு வருகிறேன்
நிசி தாண்டி பகல் பொழுதிற்கு
அங்கே
காத்திருப்பதோ
விசுவாசமற்ற
உனதுறவு
அதன் திசைகளில்
வியாபித்திருப்பதோ
சூழ்ச்சிகளும்
ஈரமற்ற காட்சிகளுமே
நான்
நடுங்கிக்கிடக்கிறேன்
அதை
நீயோ
அல்லது
இந்த வாழ்வோ
சட்டை செய்ததாய் தெரியவில்லை
என்னை மீறி
வேகமாக
எங்கோ கடந்து போய்கொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை
நீ வினவுகிறாய்
விசுவாசமாய்
இருத்தல் என்றால் என்ன என்று
நான் உனக்கு எப்படி விவரிப்பேன்
உண்மையாய் இருக்கும் நிலையை
என் முகத்துக்கு நேரே
பேசு
என் கண்களை பார்த்து
சிரி
எல்லா நிலையிலும்
எனை நம்பு
நீரள்ளி அருந்தசொன்னால்
குடி
நெருப்பள்ளி தின்னசொன்னால்
தின்று தீர்
வலிக்கிறது என்று நான் சொல்லுமுன்பே
என் வலியுணர்
வழியும் என் கண்ணீரை
உண்மையென நம்பி
உள்ளங்கையில் பொத்திக்கொள்
என் உடல்சூட்டில்
துளி துளியாய் நம்பி கரைந்துவிடு
என் காலடிசுவடுகளின்
பாதையை தேடிவந்து
ஒழுக்கத்தை சந்தேகிக்காதே
ஒருபோதும்
எனது நிர்வாணத்தில்
களங்கம் காணாதே
நான் அழுதிருக்கும் வேளையில்
எனது விரல்களுக்குள்
உனது
விரல்களை நுழைத்து
இறுக்கி அணை
உண்மையாய் இருப்பதை
வேறெப்படி நான் விவரிக்க
இது தான்
இப்படி இப்படியாக இருப்பது தான்
விசுவாசம்
நான்
விசுவாசித்திருந்தேன்
உனது
உறவை
உனது
ஆன்மாவை
மற்றும்
உனது
கண்ணீரை
ஆனால்
நீயோ
என்னிடம் வேண்டியது
மிரட்டல் தொனியில்
சில உத்திரவாதங்களை
மற்றும் சில சந்தேகங்களை
எப்படி
பொருந்திப்போகமுடியும்
இப்படியொரு உறவுக்குள்
உனதுறவு
எனக்கு
பூட்டிவிட்ட சிறகுகளை
நான்
இரக்கமின்றி துண்டித்துக்கொண்டேன்
உன் மீதான
எனது விசுவாசங்களை
காற்று வெளிதனில் பறக்கவிட்டுவிட்டேன்
நான் இப்போது
உணர்வதோ
கனமற்ற ஒரு மேகத்தை போல
No comments:
Post a Comment