Monday 12 October 2015

நீயும் உனது தத்துவமும்

நீ நைச்சியமாக
நழுவப்பார்க்கிறாய்
தத்துவத்தின் துணைகொண்டு

தத்துவத்தை
நக்கி நக்கி
விளையாடுவது
உனக்கு விருப்பமாக இருக்கிறது

தத்துவம்
உன் வீட்டு நாய்க்குட்டி என்று
நினைத்து கொள்கிறாய்
தத்துவமும்
அவ்வப்பொழுது
உன்னிடம் அப்படித்தான்
நடந்து கொள்கிறது

தத்துவத்தின்
தாடையை பிடித்து கொஞ்சுகிறாய்
தத்துவமோ
உன் செய்கைக்கேற்ப
சிரித்து வைக்கிறது

தத்துவத்தை பிடித்து
பறவையென
பறக்கவிடுகிறாய்
தத்துவமோ
மீண்டும்
உன்னிடமே
வந்துவிடுகிறது

பொட்டிட்டு பூச்சூடி
அலங்கரிக்கிறாய்
தத்துவத்தை
அதுவும்
புதுப்பெண்னென
உன் முன் தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறது

உன்னைப்போலத்தான் இருக்கிறது
தத்துவமும்
தத்துவத்தை போலத்தான் இருக்கிறாய்
நீயும்
எனக்கு
இருவரையும் பிடிபடவேயில்லை

தத்துவத்தின் கால்கள்
உன்னுடைய கருணை
இரண்டும்
என்னிடம் சிக்குவதேயில்லை

தத்துவமும் நீயும்
எனக்கு ஆகாதவர்களானதில்
வியப்பொன்றுமில்லை
இருவரின் வாயும்
நீட்டி முழக்குவது
உண்மையையல்ல
சமயத்தில்
உண்மையை போன்றதொரு பொய்யை

No comments:

Post a Comment