Sunday, 22 September 2013

பால்ய கால நண்பன்

அன்பிற்கினிய ஆனந்தராஜ்  ....

எப்படி இருக்கிறாய் .... நாம் பார்த்து பேசி சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது . நம் நண்பன் பிரதீப்பின் திருமணத்திற்கு  நீ நிச்சயம் வருவாய் , உன்னை சந்தித்து விடவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது . ஆனால் உன்னுடைய தாய் தந்தையரை மட்டுமே சந்திக்க முடிந்தது .

காலம் எப்போதும் தன் வேலையை செவ்வனே செய்கிறது . எதன் பொருட்டும் காலச்சக்கரம் நிற்பதே இல்லை . ஒவ்வொரு வருடமாய் உருட்டிக் கொண்டே இருக்கிறது . துயரோ இழப்போ வலியோ மகிழ்ச்சியோ காலத்திற்கு இருப்பதில்லை . மனிதர்களை போல அல்லாமல் அது  எப்போதும் மாறாத நித்திய குணங்களோடு இருக்கிறது .

நிறைய நிறைய நண்பர்கள் இருந்தாலும் , என் பால்யமென்னும் நினைவோடையின் ஆழத்தில் ஒரு கூழாங்கல்லை  போல  வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத மௌனத்தோடு நீ கிடக்கிறாய் . நம் சிறுபிராயத்தில்  நீ இருந்த நாப்பாளைய தெருவும் நானிருந்த சர்வேசன் தெருவும் பிரதீப் வாழ்ந்த ATS காலனியும்   அங்கேயே தான் இருக்கின்றன . ஆனால் நாம் தான் எங்கெங்கோ பயணப் பட்டு ஆளுக்கொரு  மூலையில் கிடக்கிறோம் . ஊரும் தெருவும் எங்கும் போவதில்லை . தளும்பும் நினைவுகளோடு அவை அங்கேயே இருக்கின்றன . புழுதி பறக்க தன்னோடு விளையாடிய சிறுவர்களை அவை மறப்பதும் இல்லை . ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் தனித் தனியே நினைவுகள் உண்டு .

அரை கால் சட்டை காலத்தில் அறிமுகம் ஆகும்போது உனக்கோ எனக்கோ தெரிந்திருக்கவில்லை . நாம் தொடரும் எல்லா காலத்திலும் நண்பர்களாக இருக்கப் போகிறோம் என்று . LKG யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம் , பின் ஆறிலிருந்து  பத்து வரை நீ ஒரு பள்ளியிலும் நான் ஒரு பள்ளியிலும் பிரிந்திருந்தோம் . பின் மேல்நிலை படிப்பில் ஒன்றாக மீண்டும் இணைந்து படித்தோம் . எனக்கு நினைவிருக்கிறது ..ஒரு நாள் வெயிலெரிக்கும் மதிய நேரத்தில் சிவன் கோவில் அருகே உன்னை சந்தித்தேன் . நான் ராமகிருஷ்ணா பள்ளியில் சேரப்போவதாக சொன்ன பொழுது நீ  அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாய் . காரணம் நீயும் அதே பள்ளியில் சேரவிருப்பது பின்னர் எனக்கு தெரியவந்தது .

என் மீதான உன் மதிப்பீடுகள் எப்போதும் உயரத்தில் தான் அக்காலங்களில் இருந்திருக்கிறது . எனக்கான அடையாளம் என அக்காலத்தில் ஒன்றும் இருந்ததில்லை . மிகுந்த கூச்ச சுபாவம்  உடையவன் , பிறரோடு அதிகம் பேசுவதை அறவே அன்றைக்கு தவிர்த்திருக்கிறேன் . நண்பர்கள் என எனக்கிருந்த வட்டம் மிக மிக சிறியது . ஆனால் நீ எப்போதும் என் மீது அளப்பெரிய அன்போடு இருந்திருக்கிறாய் . பிறர் என்னை கிண்டல் செய்யும்போது கூட நான் முணுக்கென முகம் வாடி கோவித்துக் கொள்வேன் . அப்படியான   ஒரு அசௌகர்யம்  கூட நீ எனக்கு தந்ததில்லை .

நீ எனக்கு நேரெதிர் . உன் கையெழுத்து இன்னமும் எனக்கு கண்ணை  மூடினால் இமைகளுக்கு கீழ் வந்து போகும் . முத்து முத்தாக அவை அழகுடைய எழுத்துக்கள் . படிப்பில் பல சமயங்களில் நீ முதல் . சேவியர் பள்ளியில் நட்சத்திர பேட்ஜ் பெரும்பாலும் உன் சட்டையில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது . நண்பர்கள் குழுவில் எப்போதும் நீ பிறர் கவனம் அன்பை  ஈர்ப்பவன் . சுவையோடு விஷயங்களை பேசுகிறவன் .  உன்னை யாரும் வெறுத்தவரில்லை  .

எல்லோரை விடவும் நீ என் மீது அக்கறையும் கவனமும் கொண்டவன் . உன் வீட்டில் இருக்கும்போது எனக்கு இன்னொருவர் இல்லத்தில் இருக்கிறோம் என்ற எண்ணமே வந்ததில்லை . உன் பெற்றோரும் சகோதரர்களும் அதற்கொரு காரணம் . உனக்கு நினைவிருக்கிறதா .? வண்டிமேட்டில் உங்கள் வீடிருந்த பொழுது , உன் வீட்டின் தண்ணீர் தொட்டி மீது நீண்ட நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம் . பெரும்பாலும் நம் தனியான பேச்சுக்கள் திரைப் பாடல்களை பற்றியது . நாம் சில பாடல்களை கூட பாடிக்காட்டிக்கொள்வோம் . முதன் முதலில் பாடல்களில் நான் வரிகளை கவனிக்க தொடங்கியது உன்னால் தான் . "முகிலனங்கள்  அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ ..." என்று நீ உன் குரலில் பாடும்பொழுது எனக்கு அது அவ்வளவு பிடிக்கும் . அக்குரல் எனக்கு இப்போதும் செவிப்பறை சுவர்களில் தனித்து அடையாளம் தெரிகிறது . உனக்கிந்த பாடலின் வரிகள் அவ்வளவு பிடிக்கும் . முகிலனங்கள்   என்றால் என்ன என்று கூட எனக்கு அன்றைக்கு தெரியாது . நீ விளக்கம் சொன்னாய் . பிறகு ஒவ்வொரு பாடலிலும் வரிகளை கவனிக்கத் தொடங்கினேன் . இப்போதெல்லாம் பாடல்களில் நான் பிரதானமாக கவனிப்பது இசையை அல்ல , வரிகளைத்  தான் ...

நீ புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது , என்னை ஒரு முறை அங்கே அழைத்திருந்தாய்   . நான் அப்போது கல்லூரி எதிலும் சேராமல் சும்மா இருந்த வருடம்அது .அக்கல்லூரியின் பிரம்மாண்டத்தை எனக்கு ஒவ்வொன்றாக சுற்றிக் காட்டி விவரித்ததாய் ...உன் விடுதியின் நண்பர்களுக்கு என்னை "புலவன்" எனை கேலியாக அறிமுகப் படுத்தி வைத்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது . என்னை ஒரு முறை கூட உன்னுடைய சொற்கள் புண்படுத்தியதே  இல்லை . நான் கல்லூரி எதிலும் சேராமல் இருந்தது அன்றைக்கு எனக்கு மனதளில் ஒரு வித சோர்வை கொடுத்திருந்தது . என்னோடு பேசுகிற பலர் அதை சுட்டிக் காட்டியே விமர்சித்தார்கள் . ஆனால் உன்னை காண நான் உன் கல்லூரிக்கு வந்த பொழுது என்னோடு நீ பேசியவைகள்   எனக்கு என் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்கவே செய்தது . கைச்செலவுக்கு   பணம் கொடுத்து அன்றைக்கு நீ என்னை வழியனுப்பியபொழுது உன்னோடு படித்திருக்கலாம் ,  உன்னோடு படிக்கவேண்டும் என மனம் தவித்து கலங்கியது . எப்போதும் உன் அருகாமை அற்று இருப்பது எனக்கு அப்படித்தான் இருந்திருக்கிறது .

எல்லோரும் கல்லூரி சேர்வதற்கான கலந்துரையாடலுக்கு தன் பெற்றோரோடு செல்வார்கள் இல்லையேல் உறவினரோடு செல்வார்கள் . ஆனால் நானோ உன்னை அழைத்தேன் . நீ கல்லூரிக்கு விடுப்பெடுத்துக்   கொண்டு எனக்காக புதுச்சேரியில்   இருந்து சென்னை வந்தாய் . எனக்கு முக்கியமான  வாழ்வின் திருப்பங்களில் நீ என்னோடு  இருந்தால் என் முடிவுகள் சரியாக இருக்கும் என்று திடமாக நம்பினேன் . எப்போதும் .

ஆனந்த் , எனக்கு கவிதைகள் எதுவும் எழுதத்தெரியாத   காலகட்டத்தில் நீ தான் எனக்கு தெரிந்த கவிதை எழுதும் முதல் நண்பன் . உனக்கு நினைவிருக்கிறதா ..? சில அதிருப்திகளால் கருத்து வேறுபாடுகளால் கொஞ்சம் மாதம் நான் உன்னோடு பேசவில்லை .அந்த இடைவெளியை தகர்க்கும் பொருட்டு ஒரு புதிய வருடத்தின் முதல் நாள் ஒரு வாழ்த்து அட்டையில் ஒரு கவிதை எழுதி என் வீட்டிற்கு கொண்டுவந்தாய் . மிகச்சரியாக 14 ஆண்டுகளுக்கு முன் , எனக்கு இன்னும் அந்த கவிதையின் வரிகள் நினைவிருக்கிறது ஆனந்த் ...
"நம் நட்பின் வேர்கள்
என் நெஞ்சில் உள்ளதால்
கிளையொன்று மறைந்தாலும்
புதுக்கிளையாய் மலர்ந்திடுமே ..."  இப்படி அந்தக் கவிதை முடியும் .
இந்த வாழ்த்து அட்டையை நான் எப்போதும் என்னோடு வைத்திருக்கிறேன் . ஓசூர் ,மைசூர் , பெங்களூரு , சென்னை , அமெரிக்கா  என என் வாழ்க்கையை நடத்த நான் எங்கெல்லாம் பயணித்தேனோ அங்கெல்லாம் என்னோடு வந்திருக்கிறது அந்த வாழ்த்து அட்டை .

கைப்பேசிகள் நம் தமிழ்நாட்டில் வந்திராத  காலகட்டம் . நீ புதுச்சேரியிலும் , நான் ஓசூரிலும் , பிரதீப் வேலூரிலும் இருந்த சமயத்திலும் நாம் பேசிக்கொள்ளாமல்   இருந்ததே  இல்லை . கடிதம் எழுதிக் கொள்வோம்  . எனக்கு கடிதம் எழுதுவது மிக பிடித்த ஒன்று . நீ எனக்கு எழுதிய கடிதங்களும் , பிரதீப் எனக்கு எழுதிய கடிதங்களும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது . அமெரிக்கா வரும்பொழுது அவைகளையும் எடுத்துவந்தேன் . இதுவரையில் அவைகளை எத்தனை முறை படித்திருப்பேன் என்றே எனக்கு தெரியவில்லை . இன்று மாலை கூட படித்துக் கொண்டிருந்தேன் . வாழ்வில் சில கட்டங்களை இப்படியே நீடித்தால் என்ன என நாம் பிரியப்படுவோம் . ஆனால் அவை அப்படி நீடிப்பதில்லை . மாலை நேர வானை போல தங்கமென ஜொலிக்கிற வானம் , திடுமென இருட்டியும் விடுகிறது .

பெங்களூரில் என் வாழ்வில் ஏற்பட்ட அனேக விஷயங்கள் , நான் என் உடல் நலத்தை வலிந்து கெடுத்துக் கொண்ட விதத்தில் உனக்கு அதிருப்திகள் இருந்தது . என்ன செய்ய ..எல்லாம் என் கைமீறி நடந்துவிட்டது . கண்ணை மூடி நினைத்துப்  பார்த்தால் எனக்கு மிகுந்த
வலி தருவதாகவே இருக்கின்றன  வாழ்வின் சில பக்கங்கள் . நீ மிகுந்த உன்னத இலட்சியங்களோடு பயணிக்கிறவன் . இச்சமூகத்தின் மீதான உன்னுடைய அக்கறை அதன் பொருட்டு நீ செய்து  கொண்டிருக்கும் சேவை இவை என்னை பிரமிப்படைய வைத்திருக்கிறது . அப்படியான உன்னை சில மாதம் என் பொருட்டு கலங்கவிட்டிருக்கிறேன் . என் மீதான அதிருப்தி உனக்கு அப்போது தான் நிலைகொள்ளத் தொடங்கியது ..இல்லையா ..?

நான் இப்போது நலமாக இருக்கிறேன் நண்பா.....உன்னை தொந்தரவு செய்யக் கூடாது  என்றே தள்ளியே இருந்தேன் . உன்னுடைய அர்த்தமிகுந்த நேரங்களை இனி எபோதும் என் பொருட்டு நான் சில மணித்துளிகளையும் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை . உன் கைபேசி எண் கிடைத்தும் பல  முறை அழைக்க நினைப்பேன் . பின் அப்படியே விட்டுவிடுவேன் .

இன்று மாலை பழைய கடிதங்களை பிரட்டிக் கொண்டிருந்தேன்  . அப்படியே பழைய பால்யத்தையும் . நண்பா உனக்கின்று   பிறந்தநாள் இல்லையா ..செப்டம்பர் பதினைந்து எப்போதும் மறந்ததில்லை நான் .

நண்பா , மனசின் அடியாழத்தில் இருந்து வாழ்த்துகிறேன் , நீ மிக சிறப்பாக இருப்பாய் . எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்த் .

இன்றுன்னை கைபேசிக்கு அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது ,. ஆனால் என் மனத்தடையை மீறி அழைப்பேனா என்று இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும்  இந்த வினாடி வரை எனக்கு தெரியவில்லை . ஆனால் ஒன்று ....உன் மீதான என் மதிப்பீடுகளோ பிரியங்களோ அன்போ என்றைக்கும் குறையப் போவதில்லை ., அது எனக்கு மிக தீர்க்கமாக தெரியும் .

தீராப் பிரியங்களோடு,
க.உதயகுமார்

2 comments:

  1. உங்கள் எழுத்துநடை அருமை....கண்டிப்பாக உங்கள் நண்பரிடம் பேசுங்கள்.ஏனோ பெண்களால் தான் நட்புக்களை கடைசிவரை கொண்டு செல்ல முடிவதில்லை....தெரியவில்லை என்பது கூட காரணமோ என்னவோ.....ஆண்களைப் பார்த்து நான் பொறாமைப்படும் ஒரே விசயம் அவர்கள் நட்பை பாதுக்காக்கும் விதம். உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிரேன். உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete