Thursday, 15 October 2015

யாருக்காக

நிறைவேரிடாத ஆசைகளோடும் 
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளோடும்
நீளும் இந்த வாழ்வு
யாருக்காக 

ஆட்களற்ற பூங்கா நாற்காலியில்
ஒற்றையாய்  உதிர்ந்திருக்கும்
மஞ்சணத்தி மலர்
யாருக்காக

ஊரே உறங்கும்
நடுநிசியில்
அடித்து பொழியும்
மழை
யாருக்காக

கேட்பவர் உண்டோ
என்ற தகவலேதும் அறியாமல்
இந்த மாலையில்
ஓயாமல் இசைக்கிறதே குயில்
யாருக்காக

மொட்டும்  பூவுமாய்
நிறை மாத கர்பிணியின்
அழகோடு
தென்றலில் தலையசைக்கும்
பூவரச மரம்
யாருக்காக

ஆட்கள் இறங்கிய
இரயில் பெட்டியில்
நிலவும் நிசப்தம்
யாருக்காக

யாருமற்ற ரயில்மேடையில்
தனியனாய் அமர்ந்திருக்கிறேனே
யாருக்காக

இலக்கற்று
வரையறையேதுமின்றி
எழுதிய இந்தக் கவிதை
யாருக்காக 

No comments:

Post a Comment