Monday, 30 December 2013

காற்றில் கலந்துவிட்ட இயற்கை காதலன் நம்மாழ்வார்இயற்கையை நேசிக்கிறவன் இன்பமாக வாழுகிறான் . அவனுக்கு பரமானந்தம் இங்கேயே வாழும் காலத்திலேயே கிடைத்துவிடுகிறது என்பதை இயற்கை  விஞ்ஞானி  நம்மாழ்வாரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளலாம் .

"செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும்." என்ற அவரின் கூற்று எத்தனை உண்மையானது . ஆனந்தவிகடனில் ஒரு முறை இதை படித்துவிட்டே நான் சென்னையில் தங்கி இருந்த வீட்டின் பால்கனியில் தொட்டிச் செடிகளை வளர்க்க ஆரம்பித்திருந்தேன் . வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு "தொட்டிச் செடிகள் " தானே விதிக்கப் பட்டிருக்கிறது . காலையில் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , சில நேரங்களில் அவைகளோடு பேசுவது என நம்மாழ்வார் சொன்னது போல செடி ஒன்றை வளர்ப்பது மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியை விதைக்க வல்லது .

வேளாண் துறையில் பட்டம் பெற்று நம்மாழ்வார் ஒரு அரசு பணியில் சேர்ந்தாலும் , பொருளீட்ட அல்ல நான் படிப்பை படித்தது என வேளாண் சார்ந்த விவசாய விழிப்புணர்வுக்கு  தன்னை அர்ப்பணித்தவர் . நம்மாழ்வார் இல்லாமல் போயிருந்தால் , வேப்பிலை நமக்கு உரிமையானது இல்லை . ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வேப்பிலைக்கான  காப்புரிமையை நமக்கு மீட்டுக் கொடுத்தவர் நம்மாழ்வார் .

திருக்குறளை விவாசய விழிப்புணர்வுக்கு இவர் அளவுக்கு வேறொருவர் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள் . திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் , அரசியல் இலக்கியம் என்று மட்டுமில்லாமல் அது மக்களின் வாழ்க்கைமுறைக்கும் உணவு முறைக்குமான இலக்கியமாக அடையாளப் படுத்தியதில் நம்மாழ்வாரின் பங்கு மிகப் பெரியது . 

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை’

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்’  

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்."

என்றெல்லாம் இவர் எடுத்தாண்ட திருக்குறள்களின் மூலமாக தான் சொல்லவருகிற செய்தி எவ்வளவு முக்கியமானது என ஆதாரப் பூர்வமாக நிறுவ விரும்பியவர் நம்மாழ்வார் . 

காடும் , அதன் வழியாக பெருகும் நீருமே  மக்களுக்கு முக்கிய பாதுகாப்பு . ஆனால் மரங்களை வெட்டி காட்டை அழித்து வெறும் ரோடு போட்டே முன்னேறிவிடலாம் என்று சொல்கிற இம்மக்கள் முட்டாள்கள் என்று சொன்ன நம்மாழ்வாரின் வாதம் அசட்டயானது அல்ல . 

தன் செயல்பாடுகள் மூலமும் , விழிப்புணர்வு மூலமும் எத்தனையோ இளைஞர்களுக்கு விவாசயத்தின் மீது காதல் வர காரணமாயிருந்தவர் . அனேக விவசாயிகளை இயற்கை வேளாண் பக்கம் திருப்பியவர் . என் முப்பாட்டன் முடிதிருத்தும் தொழில் செய்தார் . என் பாட்டன் அதையே பின்பற்றினார் . அப்பா படித்து அரசாங்க வேலையில் கிடந்தார் . இப்படியான விவாசயத்தின் பக்கம் தலைவைத்திராத என்னை போன்றவர்களை கூட "நான் சொல்வதை கேளுங்கள் ..." என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் . விவசாயத்திர்க்கென கைப்பிடி நிலம் இல்லாத நான் நம்மாழ்வாரின் "உழவுக்கும் உண்டு வரலாறு " , "தாய் மண்ணே வணக்கம்" , "நோயினைக் கொண்டாடுவோம்" , "எந்நாடுடையே இயற்கையே போற்றி " , "களை எடு " என அவர் எழுதிய புத்தகங்களை காதலோடு வாங்கிப் படிக்க வைத்தவர் .  இவைகளை பற்றி நண்பர்களோடு அனேக கூட்டங்களில் விவாதிக்கவும் செய்திருக்கிறோம் .  

நம் மண்ணில் விளைகிற பொருட்களே நம் உடம்புக்கு ஏற்றது என தெளிவாக சொல்லிப் போனவர் . ஆப்பிளை காட்டிலும் கொய்யாக் கனிகளே நம் உடம்புக்கு இனிய நண்பன் என்று நம்மாழ்வார் சொல்லும்போது மண்டையில் ஏறியது . நெல்லிக்காய்களில் இல்லாத ஊட்டச்சத்துக்கலையா பிற இறக்குமதி செய்யப் பட்ட பழங்களில் கண்டுவிட்டீர்கள் என்று இவர் சொன்ன பிறகு நம் மண்ணில் காய்கனிகள் நமக்கு அருமருந்து என்பது புரிந்தது . ஆலிவ் எண்ணைக்கும் நம் மண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? எள்ளில் இருந்து நாம எடுக்கிற நல்லெண்ணெய்  போன்ற வரபிரசாதம் கிடைத்தும் நாம் அவைகளை புறந்தள்ளி விளம்பரங்களில் மோகம் கொண்டு பொய்யான கவுரவத்துக்கு உணவு முறைகளை மாற்றிக் கொள்கிறோம் என்று நம்மாழ்வார் சொன்ன போது மனம் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டது . 

இங்கே ஆயிரம் அரசியல் வாதி செய்ய முடியாததை நம்மாழ்வார் சாதித்துக் காட்டினார் . மெத்த படித்த மேதாவி பிரதமர் ஒருவர் "விவாசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ள வேண்டும் " என்று சொன்ன பொழுது , விவசாயத்தை கைவிடுகிற நாடு தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று சம்மட்டியால் அடித்தார் .  தொழிற்சாலைகளுக்கு விலை நிலங்களை அரசுகள் ஒதுக்கீடு செய்த பொழுது , "கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும். மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கும் தவிர, வேறு எதற்கும் கிராமத்தின் நிலத்தை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், வேறு ஏதோ ஆதாயம் கருதி செய்கிறார்கள் என்று அர்த்தமே தவிர நாட்டு நலனுக்காக செய்வதற்காக அல்ல"  என்று துணிச்சலாக ஆளுகிறவர்களின் மக்கள் விரோத போக்கை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் .  கூடங்குளம் அணு உலை வருவதே தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்றத்தான் என சில "திடீர் விஞ்ஞானிகள்" ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேட்டியாய் கொடுத்துக் கொண்டிருந்தபொழுது , "இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றி மக்கள் தலைக்கே நீங்கள் கொல்லி வைக்கப் போகிறீர்கள் " என இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக நின்ற போராளி நம்மாழ்வார் ..

வெளிநாட்டு விதைகளை , வெளிநாட்டு பூச்சிக் கொல்லி மருந்துகளை எல்லாம் "பசுமை புரட்சி" என்ற பெயரில் இந்தியாவுக்குள் கொண்டுவந்தவரை கொண்டாடிய அரசுகள் விருது கொடுத்து கவுரவித்த அரசுகள் எங்கள் நம்மாழ்வாரை மட்டும் தொடர்ந்து புறக்கணித்தது . தன பாக்கெட்டுக்கு ஆதாயம் இல்லாமல் இது வரை எந்த அரசுகள் இன்னொருவரை அங்கீகரித்திருக்கிறது ? அதிலும் "இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?"  என்று சட்டையை பிடித்து கேள்விக் கேட்கிற விஞ்ஞானியை  எந்த அரசுகள் தான் விருதுகளால் கௌரவப்படுத்தும் ? மரபணு மாற்றம் செய்யப் பட்ட "பிடி கத்திரிக்காய்களுக்கு" இந்தியா தன் கதவுகளை அகலமாக திறந்து விட்ட பொழுது  , "அந்த விதைகள் நம் குடலுக்கும் ஏற்றதில்லை , நம் நிலத்துக்கும் ஏற்றதில்லை " என விவசாயிகளுக்கு புரியவைத்து அவர்களை ஒன்று திரட்டி போராட்ட களத்துக்கு கூட்டி வந்தவரை அரசுகளுக்கும் முதாளித்துவ முதலைகளுக்கும் எப்படி பிடிக்கும் ..?  இவர்கள் விருதுகளை கொடுப்பதற்கு பின்னணியில் எல்லாம் மிகப் பெரிய அரசியல் இருக்கிறது என்பது நமக்கு தெரியாதா என்ன ?  

சச்சின் டெண்டுல்கர் செய்தது எவ்வளவு பெரிய சாதனை . இந்த மண்ணை மக்களை தன் ரன் குவிப்பால் எவ்வளவு மெருகேற்றி இருக்கிறார் . அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க இங்கே எத்தனை விவாதங்கள் , நாடாளுமன்றமே கூடி ஒரு நாள் விவாதிக்கிறது . அவருக்கு விருது கிடைக்கவும் அவரை MP ஆக்கி மக்களுக்கு உழைக்கவும் !?!? வாய்ப்பு கொடுத்த அரசாங்கங்கள் , நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானியை அவர் தன் வாழ்வு முழுக்க  இந்த மண்ணுக்காக மக்களுக்காக குரல் கொடுத்த விடயங்களை காதில் வாங்கிக் கொள்ள கூட தயாராக இல்லை என்பது தான் பெருத்த வேதனைக்குரிய விடயம் .   மத்திய அரசு "ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்" என்ற தனியார் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து கொண்டு காவிரி படுகை நிலத்தில் மீத்தேன் வாயுவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டதும் , " இது மட்டும் நடந்தால் , காவிரிப் படுகை உப்பளமாக மாறும், வங்கக் கடல் நீர் விவசாய நிலத்தை ஊடுருவும்  " என்று தள்ளாத வயதிலும் தெருவில் இறங்கி போராடினார் . எங்கள் மண்ணின் மூத்த விஞ்ஞானிக்கு போதிய அங்கீகாரத்தை அரசுகள் வழங்கவில்லையே என நாம் கவலைபடுகிறோமே  ஒழிய ,  நம்மாழ்வார் விருதுகளை எதிர்நோக்கி எப்போதும் காத்திருந்ததில்லை . மக்கள் நலன் சார்ந்து மண் நலன் சார்ந்து தன் காலத்தை  எல்லாம் கரைத்து ஆய்வு செய்து தான் வைத்திருக்கும் திட்டங்களுக்கு கொஞ்சம் செவி சாயுங்கள் என்பது தான் நம்மாழ்வாருக்கு இந்த மத்திய மாநில அரசுகளிடம் இருந்த அதிகபட்ச எதிர்பார்ப்பு .ஆனால் மனிதம் போற்றும் இவ்விஞ்ஞானியை எப்போதும் அரசுகள் செவி கொடுத்து கேட்டதில்லை என்பது எவ்வளவு துரதிர்ஷ்ட்டமானது . 

"உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு"  என்ற பாரதியின் வரிகளை இன்னும் இன்னும் சத்தம் போட்டு பாடி விவாசய பெருங்குடிகளுக்காக வாழ்நாளெல்லாம் வருத்தப் பட்ட  மகோன்னத  ஆன்மா  இன்றைக்கு  காற்றில் கரைந்துவிட்டது . "இங்கே எப்போதும் எளிய மக்களுக்கு எதிராக அநீதியை கட்டவிழ்விக்கவே பணம் படைத்தவன் அதிகாரம் கொண்டவன் தன் வாழ்நாளை செலவு செய்கிறான் " என இன்றைய சமூகத்தின் கசப்பான உண்மையை கிராமங்களில் வேர்கொண்ட மனிதர்களுக்கு புரியவைக்க வாழ்வெலாம் பாடுபட்ட எங்கள் இயற்கை நேசன் இயற்கையோடு சேர்ந்துவிட்டார் .  

நம் மண்ணுக்கும் ,மரம் செடி கொடிகளுக்கும்  , வாயில்லா பிராணிகள் அத்தனைக்கும் ,  மக்களுக்கும் ஈடுசெய்யவே முடியாத பெரிய இழப்பு , நம்மாழ்வாரின் மரணம் . இறந்தவர்களை "இயற்க்கை அடைந்தார் " என்று சொல்கிற வழக்கம் உண்டு . எனக்கென்னவோ அந்த வாக்கியம் அது நம்மாழ்வாருக்கு இன்னும் கச்சிதமாக அர்த்தத்தோடு பொருந்துவதாக தோன்றுகிறது .

நம்மாழ்வார் இயற்கையை அடைந்திருக்கிறார் . சோற்றில் கைவைக்கும்போதேல்லாம் உம்மை நினைத்துக் கொள்வோம் எங்கள் மண்ணில் விளைந்து எங்கள் மண்ணுக்கே உரமான ஆழ்வாரே .....


வெறும்  கண்ணீர்த்துளிகளையும் சம்பிரதாய இரங்கல் கூட்டங்களையும் , அடையாள மலர்வளையங்களையும்  அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் .மரங்களையும் மண்ணையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றிப் பாதுகாப்பதே இந்த அரசும் மக்களும் நம்மாழ்வாருக்கு செய்யவேண்டிய உண்மையான அஞ்சலி . 

--க.உதயகுமார் 

Monday, 23 December 2013

இப்போது எப்படி உணர்கிறாய் சில்வியா ....பிரியத்திற்குரிய  சில்வியா , 


நீ விடுதலை அடைந்த பிறகு இப்போது எப்படி உணர்கிறாய் ?  


என்ன இவன் நலன்களை விசாரிக்காமல் எடுத்த உடனேயே கடிதத்தை இப்படி துவக்குகிறான் என்று நினைக்கிறாயா ? உனக்கோ எனக்கோ அவைகளை  பற்றி பேசி என்ன ஆகப் போகிறது .  நீ முன்பொரு முறை உன் காரை வேகமாக ஓட்டிச்சென்று மோதி தற்கொலைக்கு முயன்றாயே அதன் பிறகு உன்னை நான்  மருத்துவமனைக்கு வந்து பார்த்தேன் . "சில்வியா நீ நலமாக இருக்கிறாயா ?" என்று கேட்டபொழுது உன் உதடுகள் வறண்டு சுருங்கிக் கிடந்தன . உன் கண்களில் எந்த ஒளியுமின்றி அவை என்னை வெறித்துப் பார்த்தது . அதிலிருந்தே உன்னிடம் "நீ நலமாக இருக்கிறாயா " என்று நான்  கேட்பதில்லை . 


எப்படியாவாது சாவை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று சதா முயன்று கொண்டிருக்கிறவளை , வாழ்தலின் கணங்கள் கழுத்தை நெரிப்பதாக தூக்கத்தில் அலறிதுடிக்கிறவளை  நான் "நலமாக இருக்கிறாயா " என்று கேட்பதைவிட ஒரு அபத்தம் உண்டா .... நீ நலமாக இருக்கிறாயா என்று எப்போதும் கேட்கமாட்டேன் சில்வியா . 


உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை . அப்போது நீ மயக்கத்தில் இருந்தாய் . உனக்கு இருபது வயதிருக்கும் அப்பொழுது . நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு சாவகாசமாக உன் வீட்டின் நிலவறைக்கு சென்று படுத்துக் கொண்டாய் . நான் அப்போது உன்னை பின்தொடர்ந்தேன் . மிகுந்த அழகோடு நீ இருந்தாய் . சாவதற்கு முன்னால்  அழகு மிளிரும் என்று எனக்கு தோன்றியது . நான் உன் அருகில் தான் இருந்தேன் . எனக்கு விடுதலை வேண்டும் விடுதலை வேண்டும் என்று தான் கடைசியாக நீ முனகிய வார்த்தைகள் . உன் தலையை எடுத்து என் மடி மீது கிடத்திக் கொண்டேன் . உன் முகத்தில் வியர்வைகள் பூக்கத்தொடங்கியபோழுது அவைகளை துடைத்துவிட்டு நானுனக்கு ஒரு பாடல் பாடினேன் ....


லா லா லா லா லா லா பூவொன்று உடல் உதிர்ந்து பூமியை நீங்கும் பின்னொருநாள் நானும் பின்தொடர்வேன் சில்வியா லா லா லா லா லா லா 


நான் பாடிக்கொண்டிருந்தபொழுதே  நீ வாந்தி எடுத்தாய் . எனக்கு அப்போதே தெரிந்தது நீ பிழைத்துக் கொள்வாய் என்று ...


ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ நீ துர்பாக்கியசாலி சில்வியா நீ துர்பாக்கியசாலி சில்வியா லா லா லா லா லா லா 


என்று நான் மீண்டும் பாடத் தொடங்குகையில்  உன்னை கண்டுபிடித்துவிட்டார்கள் . அவர்கள் உன்னை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிய பொழுது எனக்கு என்னவோ அவ்வளவு அழுகையாக வந்தது . உன் வலி இன்னதென்று எனக்கு புரிந்திருந்தது சில்வியா ...நான் முகத்தில் அறைந்து கொண்டு தரையில் விழுந்து அழுதேன் . உனக்கு இது நினைவிருக்காது . நீ அப்போது மயக்கத்தில் இருந்தாய் . நான் எப்போதும் உன்னிடம் நலமாக இருக்கிறாயா என்று கேட்கவே மாட்டேன் சில்வியா ....அந்த கேள்வியை எதிர்கொள்வது உனக்கு கூடுதல் சித்ரவதையாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்தானே ...


உனக்கு இன்னொன்று தெரியுமா சில்வியா உன் மகன் நிக்கலஸ் தூக்கிட்டுக் கொண்டான் . என்னிடம் அவன் காரணம் எதையும் சொல்லவில்லை . எப்போதும் மன அழுத்தத்தில் இருந்தான் . அவனுடைய சடலத்தை கீழிறக்கும் போது அவனும் அத்தனை அழகாக இருந்தான் . ஒரு குளிர்காலத்தில் இரவில் நான் அவனுக்கு காப்பிப் போட்டு கொண்டுவந்தேன் . இந்த காப்பி இனிக்கிறது எனக்கு கசப்பாக போட்டுக் கொடு உதயா என்று கேட்டான் . சரி என நானும் கசப்பை கூட்டி தயார்செய்து கொடுத்தேன் . ஆனால் நிக்கலசோ இன்னும் கசப்பை கூட்டு கசப்பை கூட்டு என்று அழத் தொடங்கிவிட்டான் .  எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை . சமயலறையில் இருக்கும் கத்தியில் என் கையை கிழித்து இரண்டு சொட்டு ரத்தம் கலந்தேன் . அப்போது நிக்கலசுக்கு அந்த காப்பி மிகவும் பிடித்திருந்தது . ருசித்து ருசித்து குடித்தான் . உன் மகன் நிக்கலஸ் உன்னைபோலவே கசப்பு சுவை விரும்புகிறவனாகவே இருந்தான் . ஆனால்  எப்போதும் மன அழுத்ததிர்க்கான காரணத்தை அவன் என்னிடம் சொல்லவே இல்லை . அவன் மரணித்த பிறகு தாயின் தற்கொலை தான் நிக்கலசை கொன்றது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் . நான் அதை கிஞ்சித்தும் நம்பவில்லை சில்வியா .... 


நிக்கலஸ் இறந்த பிறகு நான் அந்த வீட்டுக்கு போகவில்லை . நீ போயிருந்தாயா சில்வியா ..? சரி எப்போதாவது போனால் நிக்கலஸின் படுக்கைக்கு வலப்புறமாக ஒரு காகிதத்தில் என்னவோ வரைந்து ஒட்டி வைத்திருக்கிறான் . அது எனக்கு இன்னதென்று  புரியவே இல்லை . நீ பார்த்து எனக்கு விளக்கம் சொல் சில்வியா . நீரற்ற ஒரு நதி . அதில் கவிழ்ந்துகிடக்கிற ஒரு படகு . படகின் மீதெங்கும் ரத்தம் வழிகிறது ....அவன் என்ன தான் அந்த வரைபடத்தில் சொல்ல வருகிறான் என்று எனக்கு புரியவே இல்லை . உன் மகனின் ஓவியம் உனக்கு நிச்சயம் புரியும் . நீ பார்த்து எனக்கு சொல் . நிக்கலஸ் என்னிடம் சொல்ல நினைத்ததை புரிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது .


என்னவோ கேட்க வந்து எதைஎதையோ பேசிக் கொண்டிருக்கிறேன் இல்லையா .....சரி சொல் ...நீ விடுதலை அடைந்த பிறகு இப்போது எப்படி உணர்கிறாய் ?  


உனக்கு எப்படி அப்படி தோன்றியது ....? அடுப்பை திறந்து உள்ளே தலையை வைத்துக் கொண்டு எரிவாயுவை திறந்து மெல்ல மெல்ல மரணத்தை உள்ளிழுத்துவிடவேண்டும் என்று உனக்கு எப்படி தோன்றியது ? நான் அன்றைக்கு உன்னோடு அங்கிருந்திருந்தால் உன் இறுதிக் கணங்களை பார்த்திருப்பேன் . உன்  வலிகளை  எல்லாம் பார்த்திருந்தவன் நீ விடுதலை அடையும் நிமிடங்களை தவறவிட்டேன் என்பது எனக்கு மிகுந்த அழுகையை தருகிறது . அப்போது உனக்கு வலித்ததா சில்வியா . கார்பன் மோனோ ஆக்சைட் நறுமணம் எப்படி இருந்தது ? உனக்கு பிடித்திருந்ததா ...இல்லை நுரையீரலில் வலியுணர்ந்தாயா ....வலித்திருந்தாலும்  அது வாழ்தலின் வலியை  விட குறைவாகத்தான் இருந்திருக்கும் இல்லையா 


இப்போது எப்படி உணர்கிறாய் சில்வியா ....நீ விரும்பிய மரணத்தை எப்படியோ தழுவிவிட்டாய் . உனக்கு பிடிக்கவே படிக்காத வாழ்தலின் பக்கங்களை கிழித்து கிழித்து காற்றில் வீசி மகிழ்ச்சியோடு தீர்ந்துவிட்டாய் ...இப்போது எப்படி உணர்கிறாய் ....


உன்னிடம் யாரேனும் இப்போதும் சொல்கிறார்களா "ஏன்  சில்வியா மகிழ்ச்சியான கவிதைகளையே நீ எழுதுவதில்லை " என்று ..? நீ பாக்கியசாலி வாழ்கையில் இருந்து தப்பிக்கும்பொழுது அப்படியான கேள்விகளிடமிருந்தும் தப்பிச் சென்றுவிட்டாய் ... நான் உன்னிடம் சொன்னதே இல்லை ...எனக்கு நீ எழுதியதில் மிகப் பிடித்த கவிதை எது தெரியுமா ..? உன் கணவனை கொலை செய்ய வேண்டும் என்று எழுதி இருப்பாயே  அது தான் இப்போதும் என் விருப்பத்திற்குரிய கவிதை ...நான் சமீபத்தில் பாஸ்டன் நகரத்திற்கு போயிருந்தேன் ..காற்றெங்கும் உன் வாசனையாகத் தான் இருந்தது ... ஒரு கருகிய பூவின் வாசனை போன்ற அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..பிறகு அழுதுவிட்டேன் சில்வியா ...


நான் உன்னை சந்திக்க வரும்நாளில் உனக்கும் மிகுந்த கசப்போடு ஒரு காப்பி போட்டு கொண்டுவருகிறேன் ... நிக்கலசுக்கு பிடித்த  அதே சுவையில் ... அதற்கு முன் நீ இப்போது எப்படி உணர்கிறாய் என்பதை எனக்கு கடிதமாக எழுது . 


நான் காத்திருப்பேன் என் பிரியத்திற்குரிய  சில்வியா ..... நிக்கலசுக்கு என் அன்பான முத்தங்களை தெரியப் படுத்து .க.உதயகுமார்
29-Nov-2013

Thursday, 19 December 2013

..........................

நான் கடலேறிப்போய் 
அதற்கப்பால் ஒரு கானகம் புகட்டுமா...
ஏதோ ஒரு மரம் 
ஏதோ ஒரு நதி 
எனக்கே எனக்கென அங்கிருக்காதா 
எனக்கென ஒரு ஊர்குருவி 
அங்கந்த பாடலை இசைக்காதா 
நதியில் மிதக்கும் இலையில் 
சேர்ந்தென் 
ஆவி போக்கட்டுமா 
என்னை கேள்விகேட்காத மலரின் இதழ்களில்
முத்தமிட்டு மரிக்கட்டுமா
என்னை சந்தேகிக்காத மானொன்றோடு
களித்து நடனமிட்டு
உயிர் நீங்கி உய்க்கட்டுமா

எனக்கென்ன இருக்கிறது இங்கே
புரிந்துகொள்ள யாருமற்ற ஊரைவிடவும்
புரிந்த காடொன்று உசிதமில்லையா

Wednesday, 4 December 2013

வேறென்ன கேட்டுவிடப் போகிறேன்

அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை .
நேசம் ததும்ப ஒரு சொல் 
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை 
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம் 
இது தான் 
இவ்வளவே தான்

Monday, 2 December 2013

நான் வந்துவிடுவேன் செந்தூரா ...

அன்பு நிறைந்த செந்தூரா ,


உன் அண்ணன் உதயகுமார் உனக்கு எழுதும் முதல் கடிதம் . போர்க்களத்தில் தொலைந்துபோனவர்களில் ஒருவரான  உன் அண்ணனுக்கு நீ எழுதிய ஆறாவது கடிதம் கிடைக்கப் பெற்றேன் . கடிதத்தை படித்து தரையில் சாய்ந்த பொழுது கண்கள் சரஞ்சரமாய் அழுதது . 


நீ முன்பொரு முறை எழுதிய கட்டுரையில் "எனக்கும் உதயகுமாருக்கும் தீபசெல்வனுக்கும் இளவேனிலுக்கும்  கனவுகள் உண்டு . நாங்கள் கொல்லப்  படுவோம் . எங்கள் கனவுகளோடு சேர்த்தே நாங்கள் கொல்லப்  படுவோம் " என்று குறிப்பிட்டிருந்தாய் அல்லவா ...எனக்கு இப்பொழுது தோன்றுகிறது , நாம் அப்படி கொல்லப்பட்டால் தான் என்ன ? நாம் கொல்லப்  படவேண்டியவர்கள் தான் . புழுத்து நெளியும் இச்சமூகத்தில் எதன்  நிமித்தம் நாம் வாழவேண்டும் ?  நாம் செத்திருக்கவேண்டியவர்கள் . ஆனால் காலம் எப்படியோ நம்மை தப்பிக்கவைத்தது . ஆனாலும் சோதரனே நம் தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி தொங்குவதை நீயோ நானோ இளவேனிலோ தீபனோ உணராமல் இல்லை . நமக்கு மரணத்தை பற்றிய அச்சமும் எப்போதும் இருந்திருக்கவில்லை . நம்மில் ஒருவன் மரணம் எப்போதுவேண்டுமானாலும் தன் வீட்டுக்  கதவை தட்டும் என்று தெரிந்தே நாம் எவ்வளவு தடுத்தும் விமானம் ஏரினான் . சப்பாத்துக் கால்களுக்கு பயப்படுகிறவர்களாக  நம்மில் ஒருவனும் இல்லை . அப்படி ஒரு பயத்தை இன்னொருவனின் கண்ணில் பார்த்துவிட்டால் அவன் நம்மோடு இருக்க உகந்தவனில்லை என்று கூட தீர்மானித்திருந்தோம் . உண்மையில் மரணம் தான் நம்மை நெருங்க அச்சப் படுகிறது . வலியப்போய் தழுவ நினைத்தாலும் நம் உடலின் வெப்பம் பொறுக்காமல் அது விலகி ஓடிவிடுகிறது . 


நம்முடைய மரணம் இயற்கையாக இருக்காது என்பதிலும் உனக்கோ எனக்கோ மாற்றுக் கருத்து இல்லை . அன்றைக்கு தொலைபேசி உரையாடலில் சொன்னாய் தெரியுமா "திசைகள் தெரியாமல் எங்காவது பாடல்களை பாடிக் கொண்டே பயணிப்போம் , சலிக்கும் நேரத்தில் பறவைகளை போல பறந்துவிடலாம் அண்ணா " என்று ...எனக்கு அந்த தீர்மானம் பிடித்திருந்தது . ஒன்று நம்மை கொல்வார்கள்  இல்லையேல் நாமே நம்மை கொலைசெய்து கொள்வோம்  .


நான் வந்துவிடுவேன் செந்தூரா ...கலை இலக்கிய சமூக தளங்களில் இயங்கவேண்டும் என்பது நம்முடைய கனவுகளில் ஒன்றாக இருக்கிறது . வாழ்வு சலிப்பதர்க்கு முன்னதாக நாம் அழுந்த நம் தடங்களை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது . மாவீரர் துயிலும் இடங்களை பார்க்கையில் இது இன்னும் இன்னும் நமக்கு உறுதிப் பட்டிருக்கிறது இல்லையா ...கடற்கரையில் ஓடித்திரியும் நண்டுகளை பார்த்திருக்கிறாயா நீ ?  சொற்ப வாழ்விலும் அவை தன்  காலடித்தடங்களை வரைந்துவைத்துவிட்டு செல்கின்றன . நாம் விடைபெறுவதற்கு முன்னதாக இங்கே செய்யவேண்டியவைகள் இருக்கிறது என்பது நான் சொல்லி உனக்கு தெரியவேண்டியதில்லை . உன் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் "இறையாண்மையை காக்க புனிதப் படுகொலைகளை " செய்த அரசர்களின் கால்களை நக்கி பிழைப்பு நடுத்தவோ அரசிகளின் கூந்தலுக்கு சிக்கெடுக்கவோ அல்ல , வலிந்து நம் மீது திணிக்கப் பட்ட நாம்  கொஞ்சமும் விரும்பாத அடையாளங்களுக்காக அல்ல , எதன்  நிமித்தமும் யார் செருப்பையும் சுமக்கவேண்டிய கட்டாயமும் நமக்கு இல்லை . மாறாக ஒரு நாள் நாம் நம்மில் இருந்தே நெருப்பை வெளியில் எடுக்கப் போகிறோம் . இப்போதைக்கு என்னை நினைத்துக் கொண்டு சாந்தமாய் இரு என் சகோதரா ...


இப்போதும் உன்னை முதன் முதலில் சந்தித்த நாள் பசுமையாக இருக்கிறது தம்பி . "ஜெய் பீம் " ஆவணத் திரைப்படத்தின் பதிவை கொடுக்க இளவேனில் வேளச்சேரிக்கு என்னை சந்திக்க வந்திருந்த பொழுது நீ அவனோடு வந்திருந்தாய் . உன்னுடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு அவ்வளவு பிடித்துப் போனது .  உன் உருவமோ இலக்கற்று காற்றில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியை போல இருந்தது . ஆனால் அந்த கண்களுக்குள் தான் எத்தனை வலிமிகுந்த வரலாற்றின் கதைகள் தளும்பிக் கொண்டிருந்தன . இரண்டாவது முறை "ஈழத் தமிழர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் " சந்தித்தோம் . இடையே "கூடங்குளம் " சம்பந்தமாக உன் "எதிர்" இதழில் எழுதச்சொல்லி என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தாய் , அதன் நிமித்தம் தொலைபேசியில் உரையாடினோம் . மூன்றாவது சந்திப்பு தான் நம்மளவில் மிக முக்கியமான சந்திப்பு . அந்த இரவை மறக்க முடியுமா செந்தூரா . என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு எப்போதும் உடன் இரு அண்ணா என்ற என் செந்தூரனோடான  அந்த இரவை என்னால் மறந்துவிட முடியுமா செந்தூரா ....  கடற்கரை சாலையில் அந்த விடுதிக்கு அருகே இருக்கும் மரத்தடி யாரை மறந்தாலும் உன்னையும் என்னையும் தீபசெல்வனையும் மறந்துவிடாது .  


ஒரு முறை நள்ளிரவில் KK  நகரில் உன்னுடைய அறையில்  நாம் விவாதித்துக் கொண்டிருந்தோம் . நான் பிரபாகரனை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் நீ சில கருத்துக்களை  சொல்லப்போய்  எனக்கு அழுகை வந்துவிட்டது . நான் வாய் விட்டு அழுதுகொண்டிருந்தேன் . நீயோ பதறிப்போய் என் கண்களை துடைத்துவிட்டு என் கன்னத்திலும் நெற்றியிலும் அழுந்த முத்தங்கள் இட்டாய் . உணவு உண்ண மறுத்த எனக்கு நீயே கெஞ்சி கொஞ்சி மன்னிப்பு கேட்டு ஊட்டிவிட்டாய் . என்னிடம் மன்னிப்பை இப்படி மானசீகமாய் வேறு யாரொருவரும் கேட்டதில்லை . நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும் இலக்கை நாம் தீர்க்கமாக தீர்மானித்திருந்தோம் . ஒருவரின் மீது ஒருவர் தாளாத அன்புடனே நாம் இதுகாறும் பயணித்துக் கொண்டிருக்கிறோம் . வாழ்வோ மரணமோ இருவருக்கும் சேர்ந்தே வருகிறதென்றால் அது எதுவென்றாலும் நாம் கொண்டாட்டங்களோடு அதை வரவேற்ப்போம் .


நேற்றைய தொலைபேசி உரையாடலில் "ஆசை முகம் மறந்து போச்சே ..." என்ற பாரதியின் பாடலை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் இல்லையா . நமதிருவருக்கும் மிக பிடித்த பாடல் இல்லையா அது . எனக்கு இன்னுமொரு பாடல் கூட பிடிக்கும் உனக்கு அதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது "அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் ..." என்று சுதா ரகுநாதனின் குரலில் அந்தப் பாடலை நீ கூட ஒரு முறை கேள் . பள்ளிப் பருவத்தில் என் அப்பா என்னை பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வைத்தார் . நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக கற்றுக் கொண்டேன் . அப்போது நடனம் ஆட என் விருப்பத்திற்குரிய பாடலாக அது இருந்திருக்கிறது . என் ஆசிரியர் ஜதிசொல்லிக் கொண்டே இந்தப் பாடலை பாடும்பொழுது நான் என்னை மறந்து கால்களில் சுழன்றிருக்கிறேன்  . "ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட .." என்னும் வரிகளில் நானே கண்ணனாகி  ஆடிக் களித்ததுண்டு . அது ஒரு காலம் செந்தூரா . நீ அந்தப் பாடலை கேட்கவேண்டும் .நீ சொன்னாயே திசைகள் தெரியாமல் பயணித்து பின்னொருநாள் பறந்துவிட வேண்டும் என்று , அன்றைய நாட்களில் பாடிக் களிக்கவென சில பாடல்களை நாம் இப்போதே சேர்த்துவைப்போம் .

நீ என்னிடம் இதழுக்கு அனுப்ப வேறொரு கட்டுரை கேட்டிருந்தாய் நேற்று . மாலை தூங்கி எழுந்தவுடன் அதை தான் எழுதவேண்டும் என்று இருந்தேன் . ஆனால் என்னவோ உன் முகம் நினைவுக்கு வரவும் உனக்கு கடிதம் எழுத உக்கார்ந்துவிட்டேன் . கவலைப் படாதே நாளைக்கு மாலைக்குள் உனக்கு அந்தக் கட்டுரை வந்துவிடும் . எழுதிவிடுகிறேன் .


நீ உன் அண்ணனுக்கு எழுதிய ஆறாவது கடிதத்தில் ஒரு பாடல் பாடி இருந்தாய் அல்லவா ...அந்தப் பாடலில் இந்த வரிகளை மட்டும் பைத்தியம் பிடித்தது போல் நானும் பாடிக் கொண்டிருக்கிறேன் ...


லா லா லா லா லா லா லா லா
கடைசியாய் எங்களை நாங்கள் பார்த்திருந்த போது
எங்கள் உடல்கள் மட்டும்-
துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு
நாய்களுக்கு உணவாய் இடப்படுகிறது.
லா லா லா லா லா லா லா லா லா லா லா


எங்கே என்னோடு நீயும் ஒரு முறை இந்தப் பாடலை பாடு என் தொப்புல்கொடியே ... 

 போருக்கு போன மகன் என்ன ஆனான் என்று தெரியாமல்  காத்திருக்கும் தாயைப் போல உன்னிடம் இருந்து தவிப்போடு  பதிலுக்காக காத்திருப்பேன் . என் தவிப்பு அந்தக் கடிதத்தில் என்ன பாடலை பாடப் போகிறாய் என்பதை பற்றியதானது .


மிகுந்து வழியும் கண்ணீரோடும் , நடுங்கிய விரல்களோடும் உன்மீதான பிரியங்களோடும் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன் .
~~க.உதயகுமார் 

Tuesday, 12 November 2013

அடர்வனத்தின் மின்மினிகள்துண்டிக்கப்பட்ட சாலையைப்  போல்
வெறிச்சோடிக் கிடக்கிற வாழ்க்கையில்
நீரூற்றிப்போகிறார்கள்
அச்சிறுவர்கள்

இதழ்களை   இறுகப் பூட்டியிருக்கும்
தடித்த சோகத்தை
மிக லாவகமாக
தங்கள் மழலையால்  திறந்து
புன்னகை ஒன்றை எடுத்துச்செல்கிறார்கள்

தோலுரிக்கும்
இவ்வெயில்  காலத்தில்
சுடுமனசை
மிகப்பாந்தமாக குளிரூட்டுகிறார்கள்

சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சியை
நினைவுப்படுத்தியபடி
அக்குழந்தைகள்
கரம் அசைத்து  கடக்கும் தருணங்களில்
மேல் சட்டையெங்கும்
வண்ணத்துகள்கள்

பிணங்களை  மிதித்தபடி
விகாரத்தில் ஓடும்
இந்நகரவாழ்க்கையில்
ஆறுதல் நிறுத்தங்கள்
மழலைகளின்  குழையும் மொழி

வலி நிறை வாழ்வு
நிறம்மாறி சிரிக்கிறது
பாசாங்கின் கறை  படியா
அந்நிலவுகளின்
வெள்ளந்திச்சிரிப்பை
எதிர்கொள்கையில் மட்டும்

சிடுசிடுக்கும்  முகங்களில்  எல்லாம்
சிரிப்பை ஒட்டியபடி பறக்கும்
அம் மின்மினிகள்
யாரையும்  விட
கற்றுவைத்திருக்கிறார்கள்
இளம்பச்சை நிறத்தில்
இவ்வனத்தை நிறைப்பது எப்படி என…..

-க.உதயகுமார்

http://www.yaavarum.com/archives/1509

Thursday, 7 November 2013

மரணம் சரணம் கச்சாமி

இறந்தவர்கள் 
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்  புகைப்படங்களில் 
உதிர்ந்த இறகின் மயிர்முகங்களில் 
பறவையை தேடிக்கொண்டிருக்கிறேன் 

இருப்பை மறுத்து  
தூக்கிட்டு மரித்தவர்  
புகைப்பட விழிகளில் 
அன்பு கசிந்து உறைகிறது 
நிலம்தொட்ட இலையின் 
புடைத்த நரம்புகளில் 
வேர்களின் சாயலை கண்டுணர்கிறேன்

நதி புதைக்கப்பட்ட மணற்குழிகளைப்போல 
இறந்தவர்களின் கைபேசி எண்களும் , முகநூல்பக்கங்களும் 
நிலையாமையை நினைவூட்டியபடி இருக்கிறது 
கடற்கரையில் காலுக்கு கீழே 
கரையும் மணலில் 
வாழ்க்கை தீர்ந்துகொண்டிருப்பதை 
சலனமற்று படித்துக் கொண்டிருக்கிறேன் 

--க.உதயகுமார்


Tuesday, 29 October 2013

நிர்தாட்சண்யம்

அறையெங்கும் நிறைந்திருக்கிறது 
அத்துவானப் பேரமைதி 
உதிர்ந்த மலரைப் போல 
மௌனம் போர்த்திக் கிடக்கிறது காலம்     
அரவமற்ற பொட்டலில்  பெய்யும் 
மாரியென கண்கள் 
நத்தையென   நகரும் 
காதலற்ற வெறும்நாட்கள்  
கூழாங்கல்லின்   அடியில் 
தேங்கிக் கிடக்கும் இருளைப் போல 
தனித்த வாழ்வு 

தானே   போட்டு  
தானே  சுவைக்கும் 
தேநீரின்   சுவை போல 
பகிரவென யாருமற்ற 
கொடும்வாழ்வின் பக்கங்கள் 
கொடும்  கசப்பென்கிறேன் 
நீங்களோ 
பைத்தியம் என்ற 
தாட்சண்யமற்ற  ஒரு வார்த்தையில் 
என் வாசலை 
கடந்து போகிறீர்கள் 

~~க.உதயகுமார்

இலையின் இயல்பற்ற இதயம்

நதிவழி நீந்தும் 
இலைபோல் 
லாவகம் வருவதில்லை 
விதிவழி வற்றும் வாழ்வில் 
ஓவியத்தின் கண்களென 
நிலைகுத்தியே நிற்கிறது 
துயர் 
சன்னமாய் விரிசல் விட்டு 
சுக்குநூறாய் உடைகிறது 
கண்ணாடி மனசு 

இலைகளுக்கு எப்படி 
இவ்வளவு எளிதாக இருக்கிறது 
தன்னை விடுவித்துக் கொண்டு 
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில் 
ஈரமாய் எழவும் 
இலையின் இயல்பற்ற இதயத்தால் 
முடிவதில்லை 

பச்சை காய்ந்து 
பழுப்பு மினுங்கும் 
பருவத்தே 
நானுமோர் இலையாவேன் 
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை 

--க.உதயகுமார் 

http://navinavirutcham.blogspot.com/2013/07/blog-post_7.html

Saturday, 26 October 2013

வழமை

ஒவ்வொரு துண்டாய்
ஒவ்வொரு துண்டாய்
சிதறித்தெறித்த என்னை
நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்

முழுமையாய் மீட்சியுற்று
நிமிர்ந்தெழுகிறேன் 
சகிக்கப்பொறுக்காமல்
மறுபடி உடைக்க
நீளும் உன் கரங்களை
சபிக்கத் தோன்றுவதேயில்லை எனக்கு

சிதறடிப்பது
உன் தொழிலாகவும்
மீட்டெடுப்பது
என் தொழிலாகவும்
நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இவ்வாழ்வில்
புதர்மண்டும் இருளுக்காக
நான் அழுதென்ன ஆகப்போகிறது ?

--க.உதயகுமார்

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25302&Itemid=265

Friday, 25 October 2013

ஒன்றுக்கென மற்றொன்று


வெறித்தபடி  நீளும்
இந்தப்பகலுக்கு
சொல்லவென
ஆறுதல்  ஒன்று
ஊர்க்குருவியிடம் இருக்கிறது

வெயிலில் நீந்திப்பறக்கும்
ஊர்குருவியிடம்
பகிரவென
இளைப்பாறுதலின் குறிப்பொன்று
நொச்சி மரக்கிளையில்  பூத்துக்கிடக்கிறது

நிழலைப் பொழியும்
நொச்சி மரக்கிளை அடியில்
சாவகாசமாய் அசை போடும்
பசுவின் மடி நுனியில்
தன் முலை முட்டும் குட்டிக்கென
சொட்டு சொட்டாய்
கசிகிறது மாகாதல்

இளங்கன்றின் நாநுனியில்
ஒரு யுகத்துக்குமான
பேரன்பின் ஈரம்


--க.உதயகுமார்

Wednesday, 23 October 2013

காலத்தை கடக்கும் ஒருவன்முடிவுறா காத்திருப்புகளின்
வெம்மையில்
அவனின்
மனச்சுவரின் பூச்சுகள்
உதிரத்தொடங்கிவிட்டன

தன் உதிரத்தின்
புளித்த சுவை
அவனுக்கு
இப்போது பிடிக்கவே இல்லை

முகத்தில் துப்பிச்சென்ற
உண்மைகள் அனைத்தையும்
நக்கி முடித்தாகிவிட்டது

மிடறு மிடறாய்
குடிக்க
வலியெதுவும்  புதிதாய் இல்லை

வாழ்தளற்ற வாழ்தலில்
நடுங்கி நடுங்கி
நீளம் கடக்க
இதோ நுழைகிறான்
நிச்சயமற்ற  இரவிற்குள்


--க.உதயகுமார்

Tuesday, 22 October 2013

ஞாலத்தின் மாணப் பெரிது


பாலையின் நடுவே
தகித்தலையும் நெடும்பயணத்தின் கால்களுக்கு
உன் குழந்தைமை போன்றதொரு
அன்பின் முத்தத்தை
என் ரணங்களில் ஒத்திவிடும்
தலைக்கு மேல் நிலைகொண்ட பறவையின்  நிழல்
நின்னை நினைவூட்டுகிறது
அது என் பாதங்களுக்கு
போதவே போதாத  நிழலென்றாலும்

Monday, 21 October 2013

நமதிடைவெளியில் நெளியும் கவிதைஉனதன்பின்  தீண்டலறியா  இந்நாட்களில்
உள்ளுறங்கும் வேதனையை
பகிரவியலாத மனதின் சுவர்களில்
சதை நெகிழ்ந்து
உதிரம் வெளிறி
பிடிப்பற்ற மல்லிக்கொடிபோல்
நான் அலைபாயுதல் கண்டாயா ....

மாமழை ஒன்று மறுதலித்தப் பின்னால்
வெட்டாந்தரையாயிருக்கும்  இவ்விரவின்  பக்கங்களில்
மசித்துளி போல்  உனதன்பைச்சொட்டி
எதையாகிலும் எழுதிப்போயேன்.....

~~க.உதயகுமார்

Saturday, 19 October 2013

கிளியோபாட்ரா இல்லாத சீசரின் அந்திமக்காலம்உறைந்த நைல் நதியென
வாழ்வின் முற்றத்தில்
அமர்ந்திருக்கிறான் சீசர்

அவனெதிரே ஒரு கோப்பை
இருக்கிறது
கிளியோபாட்ரா இல்லாத
சீசரின் ரோமைப் போல
ததும்பும் வெறுமையோடு

முன்பந்த சுகந்தகாலத்தில்
அவன் உதட்டில்
எப்போதும் ஒட்டி இருந்த
கிளியோபாட்ராவின் எச்சில்
இப்போது உலர்ந்துபோய்விட்டது

ஒற்றையாய் நிற்கும்
ஆலிவ் மரங்கள்
சபிக்கப் பட்டவை
என புலம்பித்தீர்க்கிறான்
தான் போர்வீரன் என்பதை மறந்து

தூரத்தில் பறக்கும்
எகிப்திய கழுகு கொத்திச்செல்வது
அலெக்சாண்ட்ரியா காற்றில் மிதந்த
இவனின் காதலைத்தான்
என்று விசும்புகிறான்
பின் பெருங்குரலெடுத்து
ஒப்பாரி வைக்கிறான்
அவன் போர்த்தழும்புகளில்
ஒழுகுகிறது
காதல்

கிளியோபாட்ராவின் அந்திமக்கால
மரணக்கனவுகளில் தீண்டிய
அதே சர்ப்பம்
சீசரின் கனவுகளிலும் இப்போது நெளிகிறது .
இல்லாமல் போன கிளியோபாட்ராவைப்போல்
தன்னை
ரோமின் குறிப்புகளில் இருந்து நீக்கும்படி
அதனிடம் மன்றாடுகிறான் .

மன்றாட்டுகள் எப்போதும் கேட்கப்படுவதில்லை
என சலிப்புற்ற சீசர்
ப்ரூட்டஸ்ஸைத் தேடுகிறான் ......

எனதருமை ப்ரூட்டஸ் !!!
நானொன்றும் சாக்ரடீஸ் இல்லை தான்
பரவாயில்லை
கொஞ்சம் கருணையோடு
ஹெம்லாக் ஊற்று ..

வெறுமை கரைந்து
துளித்துளியாய் நிறைகிறது
சீசரின் கோப்பை

 -க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6108

Friday, 18 October 2013

ஆதலால் காத்திருக்கிறேன்வாதையை விடவும் அனத்துகிறது
நின் பிரிவின் சூடு
புறக்கணிப்பின் சிலுவையில்
ரத்தம் சொட்ட சொட்ட
என்னை ஏன் கைவிட்டாய் 

நீ அலட்சியப்படுத்தும் என்னை
சுமப்பது
எனக்கு வலிக்கிறது
உதிர்காலத்தின் இலையென
நெஞ்சம் கனத்து விழுகிறேன்
நீயற்ற முகட்டிலிருந்து

வழிதவறிய  எறும்பென
பரிதவித்து
உன்சாயலொத்த அன்பை
தேடித் தேடி களைத்துப் போகிறேன்

உன் நேசத்தின் மழையைத் தவிர
வேறெதிலும் நனைய விருப்பமில்லை
ஊடலின் மேகம் உடைந்து
நீ பொழிந்தென்னை சிநேகிக்கும்  நாள் என்னாளோ

~~க.உதயகுமார்

மௌனத்திரைக்குப் பின்னால் ...மெழுகுள்ளம்  என்று தெரிந்தே
தீயிலிட்டு  சிரிப்பது
வன்மம் என்கிறேன் நான் ...
கவனக்குறைவு  என்கிறீர்கள் நீங்கள்

 பரிகசித்து
கைகொட்டி ஆர்ப்பரிப்பது
பகடி வதை என்கிறேன் நான் ...
வதையூட்டிய  காயத்தின்  கண்ணீரெல்லாம்
நீலிக்கண்ணீர் என்கிறீர்கள்  நீங்கள்

விடமொத்த  வார்த்தைகளை  துப்பிச்செல்வது
வீறிடும் வலி என்கிறேன் நான்
அடவுகட்டி நடிக்கிறான் என
அப்போதும் விடாமல் துப்புகிறீர்கள்

மென்மனசை கசக்கி எரிவது
சித்ரவதை  என்கிறேன் நான்
இதற்கெல்லாமா கோவிப்பாய்...?
உன் மனநலம்   சரியில்லை என சான்றளிக்கிறீர்கள்

புரிவதே இல்லை
என்  மொழி உங்களுக்கும்
உங்கள் மொழி எனக்கும்

சில நேரங்களில்
மொழியை மௌனமாக்கி
மௌனத்தை மொழியாக்குவது
எனக்கு  வசதியாக இருக்கிறது

Wednesday, 16 October 2013

வக்கற்று வாழ்தல்யாதொரு  பிடிப்புமற்ற
மல்லிக்கொடியொன்று
காற்றில் அலைந்தபடி
நீட்டித்துக்கொள்கிறது
தன்  உயிர் வாழ்தலை

என்ன செய்ய
வாழ்ந்துதொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது
வக்கற்ற நிலத்தில்

-க.உதயகுமார் 

Tuesday, 15 October 2013

பாழடைந்த வீடு


எல்லா ஊரிலும்
ஒரு பாழடைந்த
வீடு நிற்கிறது

முடிந்துபோன ஒரு வாழ்க்கையின்
மிச்சமாக ,
அடைக்கப்பட்டோ
உடைக்கப்பட்டோ இருக்கும்
கதவுகள் .....

வீட்டின் மேல்தளம் எங்கும்
தலைகீழாய்த் தொங்கும்
முன்னம் வாழ்ந்த நினைவுகள் ....

பிரசவமும் மரணமும்
மாறி மாறி
பார்த்துக்கிடந்த
சுவரெங்கும்
சிலந்திக்கூடு .....

காயப்போட எதுவும் இல்லை ,
காத்தாடி விட
அந்த சிறுவனும் இல்லை ,
மொட்டையாய் நிற்கும்
மொட்டைமாடி ....

பிரார்த்தனைகளைத்  தின்று ,
கரையான் புத்தாகிப்போன
துளசி மாடம் ....

ஒருத்தியின்  வளவியோசையை
இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கும்
ஈரம் அற்றுப்போன
கிணத்து ராட்டை ....

எத்தனை முத்தங்கள்  உதிர்க்கப்பட்டது
எத்தனை கூடல்கள் வெற்றியடைந்தது
என கணக்குவைத்திருக்கும்
அறுந்துபோன
அந்த கயிற்றுக்கட்டில் ......

சாயம் வெளுத்து
திட்டுதிட்டாய்க் கிடக்கும்
ஒரு பெருமாட்டியின்
வெற்றிலை எச்சில் ....

வாழ்ந்த   வாழ்க்கையின்
நினைவுச்சின்னம்
சிதலமாகி நிற்கிறது
எல்லா ஊர்களிலும் .....

என் வீடும்
ஒரு நாள்
பாழடைந்துபோகுமோ ?


--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 12, 2011 இல் உயிரோசையில் வெளியான கவிதை . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4500

Monday, 14 October 2013

ஆதாமின் துணையற்ற வனம் 
நினைவு நதியில்
பளீர் பளீரென வெட்டும்
ஏவாளின் பிம்பக்கீற்றுகளை
யாமத்தில் எதிர்கொள்வது
அவ்வளவு எளிதாய் இல்லை ஆதாமிற்கு 

அம்மகிழ்காலங்களை
புணர்கையிலெல்லாம்   
உயிர் நரம்பை அறுக்கிறது வலி

வாழ்வாங்கு வாழ்வோம்
என 
வார்த்தையில் கட்டிவைத்த  கோட்டையில்
அவன் மட்டும் உலவித்திரும்புகையிலெல்லாம்
உதிரம் பிசிபிசுக்கும்
காயங்களோடே கரையொதுங்குகிறான்

அந்நாட்களில் தின்னக்கொடுத்த
அவள் பேரன்பின் மதுரத்தை
இந்நாளில்
பசுவைப் போல அசைபோடுதல்
கண்ணீரில் முடிகிறது

மலர் நிகர்த்த ஏவாளை 
ஊழ்விதி உதிர்த்தபின்னே
பச்சையற்ற வனமென  
வெளிறிக்கிடக்கிறது ஆதாமின் வாழ்வு

ஏவாளின் தீஞ்சுவை நேசமெல்லாம்
தீயோடு போனபின்னே
அகால இரவில் அழுவது மட்டுமே
துணையற்ற அவ்வனத்தில்
ஆதாமிற்கு தொழிலாக இருக்கிறது

--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 30 ,2013 அன்று உயிரோசையில் வெளியானது . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5805

Friday, 11 October 2013

அமிலச்சொல்


மிகுந்த கசப்பான
உரையாடலுக்குப்பின்
செம்பிழம்பாய்
கொதிக்கும் இம்மனம்
அவமானத்தில்
கதறி அழுவது
சகிக்கப் பொறுக்கவில்லை

பின் ஏன்
இவ்விதயம் இன்னும்
துடிப்பதை நிறுத்தவே இல்லை ...

வெறுமையாக நீளும்
ஒவ்வொரு மணித்துளியும்
விஷம் என விழுந்த வார்த்தைகளை
நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது

புரிதல்கள் கோணலான
எல்லா உறவுமே
இப்படித்தான்
துடிக்க துடிக்க
கழுத்தறுக்கப்படுகிறதா..?

எல்லா பழியையும்
காலத்தின் மீதேற்றி
இலகுவாக திரிய
எனக்கொன்றும்
காகித கால்கள் இல்லையே
நன்மைகள் கழித்து மிஞ்சும் தீதை
நானே ஏற்கிறேன்

அன்பை
அளவு பார்த்து பரிமாறும்
நுணுக்கம் அறிந்திராத என்னை
தூற்றிக் கொண்டே இருப்பதைவிடவும்
ஒரு கூர் வாள் கொணர்ந்து
இதயப்பகுதியில்
மொத்த வன்மத்தையும் செலுத்து
உன் கால்களில் தெண்டனிட்டு
சட்டென விடுதலையடைகிறேன்

இனி ஒரு அமிலச்சொல் வேண்டாம்
ரயிலேறிரிக்கடந்த முண்டம் போல்
உதிரம் உதறி
துடிக்கிறதென் உடலம்

--க.உதயகுமார்


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25148&Itemid=265

Wednesday, 9 October 2013

கொடும் விதி

போக்கிடம் உள்ள நதிகள்
நகர்ந்துகொண்டே இருக்கின்றன
நின்ற காலில் வெறிப்பதைத் தவிர
வக்கற்ற குட்டைகளுக்கு
வேறென்ன விதிக்கப் பட்டிருக்கிறது

- க.உதயகுமார்

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25129:2013-10-09-02-20-35&catid=2:poems&Itemid=265

Saturday, 5 October 2013

ஏவாளைத் தொலைத்த ஆதாமின் இரவு


இச்சைகள் மேலிட
பார்வைகள் மேயும்
படுக்கையறை வனாந்தரத்தில்
துணையற்ற இப்பருவத்தின் காமம்
கொடிதினும் கொடிது


நட்ட நடு நிசியில்
பாலையென காந்தும் இவ்வுடலம்
ஒவ்வாத உணர்ச்சிகளைக்
கசியவிடும் தருணம்
பெருஞ்சாபம்


யாமத்தின் இடுக்குகளில்
துழாவும் காமத்திற்கு
பசலை போர்த்திய
இப்பருவத்தின் அடுக்குகளில்
பெருமூச்சைத் தவிர
வேறென்ன கிடைத்துவிடப்போகிறது


துக்க வீட்டில்
களியாட்டாம் கொண்டாடுதலைப் போல
பொருத்தமற்ற
மற்றும் இரக்கமற்ற
இக்காமத்தை என்ன செய்யலாம்


பசிக்கும் வயிற்றைத்
தண்டிப்பதை போல
ஒரு எதேச்சாதிகாரம்
தலைதூக்குகிறது
அடங்கா காமத்தை அறுத்தெறிய


பின்
உடலிடும் ஒப்பாரியில்
கரைகிறது மனசு
கத்தியைத் தவறவிட்டு

.
.
.

இறைஞ்சியும் கிடைக்காமல்
ஏமாற்றத்தில்
விம்மி வேர்த்தழும் தோலுக்கு
வேடிக்கை காட்டவென
சுவரில்
ஏவாளின் சித்திரம் வரைகிறான்
ஆதாம்க.உதயகுமார்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5556

குறிப்பு   : April 30, 2012 அன்று எழுதியது .

Sunday, 29 September 2013

துள்ளு தமிழ் வாலி !!!
வாலி !!!

பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ   தான் என்று நினைத்துகொள்வேன் .

விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது  எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத்  தான்  முதல் அறிமுகம் . அந்த பருவத்துக்கே உரிய குறுகுறுப்பு . அந்த பாடலை முழுசா கேட்டுடணும் என்ற ஆவலில் அந்தப் பாடலை ஆராய்ந்தால் பாடல் முழுக்கவே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது .ஓஹோ இவர் இப்படியான பாடல் எழுதுகிற கவிஞர் போல என்று தான் அன்றைக்கு நினைத்தேன் .

பின்னாளில் தான் தெரியவந்தது . வாலி என்ற கவிஞர் தொட்டு எழுதாத சந்தங்களே  இல்லை என்று . இன்றைக்கும் கிராமங்களில் "எம்ஜியார் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ..?"  என்று மேற்கோள் காட்டுகிற பாடல்கள் முழுக்க வாலி எழுதியவயாகத் தான் இருக்கிறது .

இன்றைக்கு வரைக்கும் எனக்கு மிக பிடித்த பாடல் , எம்ஜியார் வாயசைத்து வாலி எழுதிய பாடல்களான "கண் போன போக்கிலே கால் போகலாமா " மற்றும் "தரை மேல் பிறக்க வைத்தான் " . 

பணம் படைத்தவன் திரைப்படத்தில் எம்ஜியார் மிடுக்காக கையில் 'பெல்லோஸ்' என்ற இசைக்கருவியோடு  வாயசைத்து பாடுவார் . அமரர் T .M .S இன் குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும் . வாலியின் வரிகளோ சகலத்தையும் விஞ்சி இருக்கும் .

"பொய்யான  சிலபேர்க்கு  புது  நாகரீகம்
புரியாத  பல  பேர்க்கு  இது  நாகரீகம்
முறையாக  வாழ்வோருக்கு   எது  நாகரீகம்
முன்னோர்கள்  சொன்னார்கள்  அது  நாகரீகம்  "

கண் போன போக்கிலே பாடலில் எனக்கு மிக மிக பிடித்த வரிகள் இந்த வரிகள் . இதே  பாடலில் வரும் இன்னும் ஒரு பத்தி நெஞ்சுக்கு நெருக்கமானது

"நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .."

எனக்கு நானே அடிக்கடி பாடிக்கொள்ளும் வரிகள் . குறிப்பாக ஏகாந்த இரவுகளில் .  சுய ஆற்றுப்படுத்துதல் என்று உளவியல் மருத்துவம் சொல்கிறதே , அப்படி எனக்கு இவ்வரிகள் உதவி இருக்கிறது , உதவிக் கொண்டிருக்கிறது ....

"செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது ...இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக  செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு .

"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."

டி.எம்.எஸ் குரல் உயர்த்தி  "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும் ...

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."

என்று கவிஞர் வாலியை  விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர்  பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ...

திருவான்மியூரில் குப்பம் கடற்கரை செல்லும்  சாலையில் கொஞ்ச நாள் குடி இருந்தேன் . அப்போது இரவுகளில் குப்பம் கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது வழக்கம் . அங்கே மீனவர் குடியிருப்பு  உண்டு .அதில் மீனவப் பெரியவர்  ஒருவர் தினமும் குடித்துவிட்டு வேத பாடம்  போல இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பார் . உடைந்த  குரலில் அந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அவருக்கு ரசிகனாகவே ஆகிவிட்டேன் . மீனவ  நண்பன் என்று எம்.ஜி.யாரை இன்றும் சென்னையில் சொல்லுவார்கள் , எனக்கென்னவோ வாலியை அப்படி சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது .

"மறுபடியும்"  என்று ஒரு திரைப்படம் . அதில் "எல்லோரும் சொல்லும் பாட்டு .." என்று SPB  பாடிய பாடல் . எழுதியது கவிஞர் வாலி . அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு அத்துப்படி . நீண்ட நாட்களாக என் கைபேசியில் அழைப்பு பாடலாக அது தான் இருந்தது .  

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஷேக்ஸ்பியர் சொன்ன   பெருந்தத்துவம் இந்த நாளே  வரிகளில் அடக்கி சொல்லிவிட்டார் வாலி .

எனக்கு ஆச்சர்யம் ."பக்கம் வந்த மாமா,இதுக்கு பேரம் பேசலாமா?பாக்குப்பாய போட்டு, நீயும் பயாஸ்கோப்பு காட்டு" என்றெல்லாம் எழுதிய வாலியால் எப்படி இப்படியும் எழுத முடிகிறது ? என்று அதிசயமாக இருக்கும் , கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கும் . ஆனால் பின் வாலியே "நான் காசுக்கு பாட்டெழுதவந்தவன்" என்று சுயவாக்குமூலம் கொடுத்த பின்னால் , என் மனம் அவர் நிலைப்பாட்டில் அதிக மூக்கை நுழைத்தெல்லாம் ஆராய்ச்சி  செய்ய விரும்பியதில்லை .

அந்த பாடலில் எனக்கு எல்லா வரிகளும் பிடிக்கும் என்றாலும் , சிலப்பதிகாரத்தின் சாரத்தை இரண்டு வரிகளில் எழுதி இருப்பார் வாலி .அது தான் மிகுந்த வியப்பு எனக்கு

"கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று"

அட ..என்று கேட்பவரை ரசிக்க வைக்கும் அவ்வரிகள் ...

வாலியின் சினிமா பாடல்களை எடுத்து சிலாகிக்க வேண்டுமென்றால் , ஒரு புத்தகம் தான் எழுதவேண்டும் . ஊர் உலகம் அறிந்த விஷயம்  இது .

எல்லா சினிமாப் பாடல்களையும் விட , வாலி எழுதிய கவிதை ஒன்று . எனக்கு மட்டுமில்லை தமிழர்  யாருக்கும் அது பிடிக்கும் . தமிழ் சமுதாயம் முழுமைக்கும்  அவ்வரிகள் மிக உன்னதமானது ..என்ன கவிதை என்று யோசிக்குறீர்களா..?

தமிழர் தலைவர் பிரபாகரனை பற்றி வாலி எழுதிய வரிகள்

"முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? "

மேலும் அதே கவிதையில்

"நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!

எனக்கு படிக்க படிக்க சிலிர்க்கும் . வாலியை கையெடுத்து கும்பிட தோன்றும் இவ்வரிகளை படிக்கும்போதெல்லாம் . எவ்வளவு பொருத்தமான  வரிகள் ...

கலைஞருக்கு  நடந்த பாராட்டு விழாக்களில் கவியரங்கம் இசைப்பது , எதன் பொருட்டும் அவர்களை விமர்சிக்க வாய் திறக்காதது போன்ற விடயங்கள் எனக்கு பல சமயங்களில் பெரியவர் மீது வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது . நண்பர்களிடத்தில் மனம் வருந்தி பேசி இருக்கிறேன் . ஆனால் என்னவோ "கவிஞர்" என்ற வாலியை என்னால் விட்டுக் கொடுக்கவே முடியவில்லை . கலைஞரோடு இருந்தாலும் , பார்வதி தாயார் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரத்தில் அரசை சாடியும் கவிதை எழுதிய விதத்தில் வாலி தன் நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார் என்பதை  புரிந்துக் கொண்டேன் .

சகோதரி செங்கொடி உயிரை ஈகித்து வீரமரணம் அடைந்த பொழுது , வாலி அய்யா எழுதிய கவிதை எனக்கு அன்றைக்கு மேலும் அழுகையை கூட்டியது .

"கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்டு-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!"  என்று மகளை  இழந்த தந்தையின் பரிதவிப்பை இந்த கவிதையில் பார்க்க முடியும் .

 இதோ மிக சமீபத்தில் புலிக்குட்டி பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து பெரியவர் வாலி  எழுதிய கவிதையும் அத்தனை  நெகிழ்சியானது .

"முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்…
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?

என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!"

என்று பெரியவர் வாலி எழுதிய இரங்கல் கவிதை தமிழர் நெஞ்சில் வலியோடு பதிந்துபோனது .

காசுக்கு பாட்டெழுதுகிறவன் என்று அவரே சொல்லிக் கொண்ட பொழுதும் , படைப்பாளிக்கே உரிய சமூக கோவத்தோடு பேனா பிரித்து தோலுரிக்கவும் தவறியதில்லை வாலி . தமிழின் துணைகொண்டு  தனக்கே உரித்தான மிடுக்கோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் பெரியவர் வாலி .

அகவை எண்பதை கடந்த பொழுதும் , இவரின் வார்த்தைகளில் மட்டும் முதுமை தெரிந்ததே இல்லை .

 "தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே...
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்...." என்று காதல் செய்யும் யாரும் கேட்ட மாத்திரத்தில் கிறங்கி மயங்கும் பாடல் இது . இதை எழுதும் பொழுது வாலி எண்பதை கடந்துவிட்டார் . தமிழ் திரையுலகம் கண்ட கவிஞர்களில் இந்த வரம் கண்ணதாசனை விடவும் வாலிக்கே மிக அதிகமாய் கிடைத்திருந்தது என்பது என் கருத்து .

கம்பராமயணத்தில் வானர அரசன் வீரன் வாலியை பற்றி கம்பன் எழுதியப் பாடல் . இலக்கியவாதிகள் எல்லோருக்கும் மிக பரிட்சயமான  ஒரு ராமாயணப்   பாடல் உண்டென்றால் அது வாலியை மெச்சி கம்பன் எழுதிய

"கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில்; "  என்ற பாடல் .

காற்று கூட வாலியின் வேகத்தின் முன்னால் தோற்றுப் போய்விடும் , முருகனின் வேல் கூட வாலியின் மார்பில் செல்லாது  என்றெல்லாம் கம்பன் வாலியை புகழ்ந்தான் . இது கவிஞர் வாலிக்கும்  ஒப்புப் படுத்திப் பார்க்கிறேன் . காற்றின் வேகத்தை விடவும் தமிழ் வார்த்தைகளை புதிதுபுதிதாக கோர்த்து பாடல் எழுதுவதில் வாலி ஒரு அதிசயம் தான் . வாலியை யாரோ ஒருவர் வம்புக்கு இழுத்த பொழுது மேடையிலேயே வாலி சொன்னாராம் "டேய் நான் மாமிசம் திங்குற பாப்பான் , என்கிட்டே வச்சிக்காத " என்று .  போலியாக வாழாமல் நான் இப்படித்தான் என்று ஊருக்கு உரைத்த விதத்தில் உறுதியான நெஞ்சம் தான் கவிஞர் வாலிக்கும் .


எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

என்று எழுதிய வாலி , மண்ணை விட்டு கிளம்பி விட்டார் . விதியின் வாய்க்குள் எல்லோரும் ஒரு நாள் விழத்தான் போகிறோம் . கவிஞர் வாலி காலத்தால் மறக்க முடியாத பாடல்களை  எழுதி  அழியாப் புகழ் பெற்று பூரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு இறுதி யாத்திரை கிளம்பி இருக்கிறார் . "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் .." என்று எழுதிய வாலியையும் அவர் திரையிசை பாடல்களையும் தமிழ் நெஞ்சங்கள் என்றைக்கும் மறக்க முடியாது .

அவர் பெரிதும் விரும்பி சேவித்த ரங்கராஜனை நானும் வேண்டிக் கொள்கிறேன் . அந்த வெண்தாடி கவிஞன் , ரங்கனின் திருவடியில் ஆழ்ந்த இளைப்பாறுதல் பெறட்டும் . "என் வெற்றி என்பது என் வலிமையில் வந்தது இல்லை , தமிழின் வலிமையால் வந்தது" என்று சொன்ன வாலி , தமிழுள்ள வரையிலும் புகழ் தழைத்திருப்பார் .


ஆண்டாண்டு காலம்
தொன்மையுடைத்த
தெள்ளு தமிழ்
உம் விரல்களின் வழியே
துள்ளு தமிழானது
வாலி ..!
உங்கள்
தமிழ்த் திரையிசைப் பாடல்கள்
எங்கள் சந்ததிக்கும்  ஆகுமோர்  
தூளி !!


ஆழ்ந்த இரங்கல்
க.உதயகுமார்
குறிப்பு : இந்தப் பதிவு கவிஞர் வாலி அவர்கள் மறைந்த மறுநாள் (ஜூலை 19,2013) எழுதிய இரங்கல் கட்டுரை .