Thursday, 1 October 2015

உரையாடல்

பொழுது புலர்ந்து
செங்கால் நாரைகள்
எங்கோ பறந்து செல்கின்றன
அவை ஒன்றோடொன்று
கீச் கீச்சென
பேசியபடி பறக்கின்றன

நானும்
ஒரு குழந்தையை போல
வரையறைகள்  இல்லமால்
உன்னிடம் பேசிக்கொண்டே
இருக்க ஆசைப்பட்டேன்
நீயோ
கண்டிப்பான குரலில்
ஓரிரு சொற்களில்
உரையாடலை முடித்துக் கொண்டாய்

இந்த உலகம் எவ்வளவு பெரிது
பேசத்தான் எவ்வளவு இருக்கிறது
இசையை பற்றி
அழகழகான மலர்களை பற்றி
மனதை மயக்கும் கடலலை பற்றி
பேசித்தீரா இலக்கியம் பற்றி
நம் காதல் பற்றி
உடலை கிளர்த்தும் காமம் பற்றி
நாம் பேசத்தான்
எவ்வளவு இருக்கின்றன ......

நீயோ
கச்சிதமான வார்த்தைகளால்
துடைத்தெரிகிறாய்
எனது  உரையாடலின் மீதான வாஞ்சையை 

இப்பொழுதெல்லாம்
எனக்கு நானே பேசிக்கொள்கிறேன்
நீடிக்கும் இந்த
ஒருவழிப்பாதை உரையாடல்களில்
நேற்றொரு வண்ணத்துப்பூச்சி
வந்து போனது
அது ரம்மியம்

யாருமில்லையெனில்
யாராவது வந்துபோக


அனுமதிக்கத்தான் வேண்டி இருக்கிறது

No comments:

Post a Comment