Wednesday, 29 January 2014

பிரியத்தின் சில்வியா , உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன்
மாசறு அன்புடை சில்வியா , 

நண்பன்  அரவிந்தன் மூலமாக நீ  கொடுத்தனுப்பிய பதில் கடிதம் கிடைக்கப் பெற்றேன் . உன் பதில் வந்த நாளில் இருந்து அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கு எதுவும் வைத்திருக்கவில்லை . சில வரிகளில் தீயில் விழுந்த இறகு போல பொசுங்கிப்போனேன் , சில வரிகளில் காற்றில் பறக்கும் இறகைப் போல பறந்துபோனேன் . உன்மத்த அன்புடைய உதயா என்ற உன் கடிதத்தின் துவக்கமே என்னை அழவைத்துவிட்டது சில்வியா ..உனக்குத் தான் தெரியுமே , என்னால் மிக சுலபமாக செய்ய முடிந்தது அழுவது மட்டும் தானே ...

நான் உன் தோழி ஆன் செக்ஸ்டனுக்கு கடிதம் எழுதி இருந்தேன் . அவளை ஒரு முறை அறைக்கு வந்துபோகும்படி சொல்லி இருந்தேன் . என் மீது மிகுந்த பிரியம் உடையவள் . நான் கேட்டது போலவே வந்திருந்தாள் . மாலை வலுவிழந்து  இரவு கவியத் தொடங்கிய நேரம் வந்தாள் .  உன்னுடைய கடிதத்தை அவளிடமும் காட்டினேன் . படித்து முடித்தவள் கடிதத்தை முகத்தருகே கொண்டு சென்றாள் . முத்தம் கொடுக்கப் போகிறாள் என்று எண்ணினேன் . அவளோ ஆழ மூச்சிழுத்து கடிதத்தை முகர்ந்து பார்த்தாள் . என்ன செய்கிறாய் என்று வினவினேன் . ஒவ்வொரு எழுத்திலும் சில்வியாவின் வாசம் . அவள் அன்புமயமானவள் , அவளின் வாழ்வு மட்டும் கண்ணீர்த்துளிகளால் குளிப்பாட்டப் பட்டது தான் என்னால் தாங்கமுடியாத வலி என்று அழத்தொடங்கிவிட்டாள் . அவளின் தலை கோதி நெஞ்சோரம் சாய்த்துக் கொண்டேன் . அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன் . ஆசுவாசப் படுத்த எனக்கு தெரிந்த ஒரே வழி இது தான் சில்வியா . பின் நானும் அவளும் க்லென்லிவெட் அருந்தினோம் . அவளுக்கு அதன் சுவை மிகப் பிடித்திருந்தது . அன்றைய இரவை முழுக்க எங்கள்  பேச்சும் அழுகையுமே நிறைத்தது . விடியற்காலையில் சென்று விட்டாள் . மழை வந்து போன பிறகும் மண் வாசம் மிச்சமிருப்பதை போல அன்று நாள் முழுக்க  என் அறையெங்கும் ஆன் செக்ஸ்டன் மிச்சமிருந்தாள் . 

அதன் பின் மீண்டும் எனக்கு உன் நினைவு வந்துவிட்டது சில்வியா . நீ போட்ட கடிதத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன் . எனக்கு ஒரு வரி மட்டும் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது சில்வியா ..."வாழமுடியாமைக்கான சமரசம் தான் மரணம். " என்று நீ சொல்லி கேட்கும்பொழுது என்னால் அதை நம்பமுடியவில்லை . சமரசம் செய்து கொள்கிறவர்கள் கோழைகள் . நீ கோழை என நீயே சொல்லிக் கொண்டாலும் ஒருபோதும் நான் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் . மரணம் சமரசம் அல்ல . மரணம் வாழ்தலில் இருந்து பெற்றுக் கொள்கிற விடுதலை . நமது விடுதலையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் . இன்னொருவன் தந்து நாம் பெற்றுக் கொண்டால் அது அடிமைத்தனம் . நீ அடிமை இல்லை . நீ சுதந்திரமானவள் . நீ கோழை இல்லை . நீ பராக்கிரமம் உடையவள் . உன்னை பார்த்து நான் எப்போதும் பொறாமை பட்டுக் கொண்டு இருக்கிறேன் . என்னைப்பார் ....நான் சமரசம் செய்துகொண்டு வாழ்ந்தலைகிறேன் .  நான் தான் கோழை . நான் தான் அடிமை .

உனக்கொன்று தெரியுமா ...நீ இங்கிலாந்தில் எந்த மாதிரியான அடுப்பை உபயோகப் படுத்தினாயோ , இங்கே நீ பிறந்த அமெரிக்காவில் நானும் அதே போன்ற அடுப்பை தான் பயன்படுத்துகிறேன் . அந்த அடுப்பு தான் எப்போதும் எனக்கு உன் நினைவை தந்து கொண்டே இருக்கிறது . ஒவ்வொரு முறை கடக்கும்போதும்  உள்ளிருந்து நீ அழைப்பது போலவே குரல் கேட்கிறது . பல முறை அந்த அடுப்பையே வெறித்துப் பார்க்கிறேன் . ஒரு முறை அந்த அடுப்பை கீழே திறந்து உள்ளே தலை போகிறதா என்று பார்த்தேன் . தாராளமாக என் தலையும் உள்ளே போகிறது . எரிவாயுவை தடையின்றி திறந்துவிட்டால் தீர்ந்தது கதை .ஆனால் கால்கள் ஏனோ நடுங்குகிறது . ஏனென்றால் நான் கோழை . சமரசம் செய்துகொண்டு வாழவே விதிக்கப் பட்டிருக்கிறது . வெள்ளை நிறத்தில் அந்த அடுப்பின் வடிவமே ஒரு சவபெட்டிபோல மிகுந்த அழகாக இருக்கிறது சில்வியா .  

என் பவித்திர பதுமையே சில்வியா , ஒளிகளுக்கு மத்தியில் இருளில் நீந்திக் கிடக்கிறேன் என்று சொன்னாயே . எவ்வளவு பெரும்பேறு அது . இருளிலும் ஒளியிலும் மாறி மாறி அல்லல் படுகிற என்னை போல நீ இல்லாமல் மரணத்தை சுதந்தரித்தவளே ..இனி ஒரு முறை மரணம் என்பது சமரசம் என்று சொல்லாதே ...

"எந்தப்பற்றுகளும் கட்டுகளுமற்ற தனிமையில் மிதக்கிறேன். என் கவிதைகள் எதுவும் எனக்கு ஞாபகமில்லை. பெரும்பாலான என் நினைவுகள் அழிந்துவிட்டன." என்று உன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாயே சில்வியா .... அந்த நிலைக்காக தானே நீ இங்கே வாழும் நாளில் எல்லாம் ஏங்கிக் கிடந்தாய் ...

No spiritual Caesars are these dead;
They want no proud paternal kingdom come;
And when at last they blunder into bed
World-wrecked, 
they seek only oblivion.

கவிதையின் கடைசி வரியில் அந்த நினைவிழந்த நிலைக்கு தானே  ஏங்கி  இருந்தாய் ...நீ விரும்பிய oblivion இப்போது உனக்கு கிடைத்திருக்கிறதே ...அதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா ...உன் மரணம் கவித்துவமற்றது என்று நீ சொல்லலாம் , ஆனால் உன் கவிதையில் நீ எவைகளை புதைத்து வைத்தாயோ அவைகளை உனக்கு மீட்டுக் கொடுத்து அகற்றவியலாத மனதின் வடுக்களை , உதிரம் சொதசொதத்து இருந்த ஆறாத காயங்களை அம்மரணம் இல்லாமல் செய்திருக்கிறது ...இல்லையா சில்வியா ?

உன்னுடைய  கவிதைகள் உனக்கு இப்போது நினைவில் இல்லாமல் போயிருக்கலாம் சில்வியா ... நீ எழுதிய கவிதைகள் நீ சொல்ல நினைத்தைவிடவும் அதிகமாக என்னிடம் பேசுகின்றன ...இறந்தவர்களின் கவிதைகளை படிப்பது  அவ்வளவு சுலபமில்லை . ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையே இருக்கிற இடைவெளி கூட பிரிவை நினைவூட்டி கதறி அழவைத்துவிடும் . உன் கவிதைகளில்  நீ கையாண்டிருக்கிற முற்றுப் புள்ளிகள் கூட எனக்கு உன் மரணத்தையே நினைவூட்டுகிறது ....ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் புரிந்தவனாய்  நீ முன்னம் வாழ்ந்த காலத்தில் நானும்  உறைந்துவிடுகிறேன் . உன் கவிதைகளை  நான் மறப்பதற்கில்லை 

உன்  நரம்புகளையும் எலும்புகளின் மையங்களையும் அரித்துக் கொண்டிருந்த எழுத்துக்களையும், சீழ்பிடித்த உன் ரத்தத்தின் ஓடுபாதைகளில் தேங்கியிருந்த சொற்களையும் சதைகிழித்து  பிய்த்து எடுத்து  கவிதைகளாக்கிவிடவாவது  தெரிந்திருந்தது உனக்கு . அதற்கும் வக்கற்றவன் நான் ...  கழிவறைக்குள் புகுந்துகொண்டு கைக்குட்டையை கடித்தபடி அழுது தீர்க்கிறேன் சில்வியா .... இப்போதைக்கு என் சொற்களையெல்லாம் நான் அழுதழுதே தீர்க்கிறேன் ....

நீ இறந்த பின்பும் உயிரற்ற  உன் சாப உடலை பார்த்துக் கொண்டிருந்ததாக சொன்னாயே , அப்பொழுது பிதுங்கிய விழிகளின் ஓரங்களில் கசிந்த ரத்தம் உன் முகத்தில் அதி சௌந்தர்யமான ஒரு ஓவியத்தை வரைந்திருந்தது என்று நீ சொல்லக் கேட்டபின் , என் மூக்கில் எப்போதவாது வழிகிற ரத்தம் அழகிய ஓவியம் போலவே  இருக்கிறது, விளங்கிக் கொள்ளமுடியா நிக்கலஸின் அந்த ஓவியத்தில் வழிந்த குருதியை போலவே இருக்கிறது. வழியும் குருதியை துடைக்கும் பிரக்ஞயற்று நானும் அதை ரசிக்கத் தொடங்கி விட்டேன் சில்வியா  ...

பாறைகளை சுமந்தபடி பயணம் போக சொல்வது ஈரமற்ற செயல் இல்லையா சில்வியா ...அதில் உனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்பது எனக்கு தெரியும் . உன் இருண்மைக்குள் என்னையும் அனுமதிப்பாயா சில்வியா ...நினைவுகளின் நாற்றமற்ற உன் வியோமத்தில் என்னையும் அனுமதிப்பாயா சில்வியா ... நீ ஆசுவாசித்து கிடக்கிற தனிமைக்குள் என்னையும் சேர்த்துக் கொள்வாயா சில்வியா ...உனக்கு என் மீது பிரியங்கள் அதிகம் . உன் கண்களில் எப்போதும் சோகம் சொட்டுகிறது என்றே பலரும் சொல்கிறார்கள் . எனக்கென்னவோ உன் கண்கள் கருணைமயமானவை என்றே தோன்றுகிறது . என்னை உன் நிச்சலன வெளிக்குள் அனுமதிக்க உனக்கு தடையொன்றும் இருக்கப் போவதில்லை .

ஆன் செக்ஸ்டன்  என்னிடம் கேட்டிருந்தாள் . உனக்கு சில்வியா நெருங்கிய தோழியா என்று. நான் சொன்னேன் ,  எனக்கும் அவளுக்குமான  இந்த  வாத்சல்ய அன்புக்கு நாங்கள் எந்தப் பெயரையும் சூட்டி இருக்கவில்லை . அவள் எனக்கு அம்மா என்றோ , மகள் என்றோ , காதலி , தோழி என்றோ எந்த பெயருக்குள்ளும் நான் அவளை அடைக்கவிரும்பவில்லை . எங்கள் அன்பு பெயர்களை கடந்தது .

அன்பு செலுத்தவும் பெற்றுக் கொள்ளவும் பெயர் ஒரு அவசியமா சில்வியா ...? இன்னென்ன பெயர் கொண்ட உறவுக்குத்தான் நேசத்தின் அளவை கூட்டியோ குறைத்தோ பரிமாறுவோம் என்று சொல்வது எவ்வளவு அபத்தம் . ஆனால் அந்த அபத்தம் தான் இங்கே மீண்டும் மீண்டும் நிகழ்த்தப் படுகிறது . சரி விடு , அபத்தங்களையும் அனர்த்தங்களையும் மறந்து நீ ஆழ் இருளில் சஞ்சரித்துக் அனந்தலாய் கிடக்கிறாய் . உனக்கு  இம்மனிதர்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி  உன் கனவுகளற்ற சயனத்தை கலைக்க  எனக்கும் விருப்பமில்லை . 

நான் எழுதியவைகள் மட்டுமல்லாமல் நான் எழுதாதவைகளும் வாசித்தவள் நீ என்று சொல்லிக் கொண்டாய் . தப்பும் தவறுமான என்னை வாசிக்க நீ ஒருத்தி எப்போதும் இருக்கிறாய் என்பது எனக்கு தெரியும் . நீ என்னை கைவிடுவதில்லை . அழுது தீர்த்த நேரம் போக , எழுதிதீர்க்கவே விரும்புகிறேன் .நான் தொடர்ந்து உன்னை கடிதங்களில் வந்தடைவேன் சில்வியா ...அதுவரையில் என் தூய முத்தங்களை உன் தலைக்கு வைத்து உறங்கு என் நேய உயிரே சில்வியா ....


க.உதயகுமார் 
06-Dec-13 

Tuesday, 14 January 2014

பிரியத்திற்குரிய ஆன் செக்ஸ்டன் , உனக்காக நண்பன் காத்திருக்கிறேன் !பிரியத்திற்குரிய ஆன் செக்ஸ்டன் ,


நான் உதயகுமார் எழுதுகிறேன் . நேற்று தான் உன்னுடைய தோழி சில்வியாவுக்கு கடிதம் எழுதினேன் . அவளிடம் இருந்து எனக்கு இன்னும் பதில் வரவில்லை . உனக்குத் தான் தெரியுமே சில்வியா எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பாள் . அவள் சிந்தனை பரவெளியில் இருந்து கீழிறங்கி வந்தபின்னால் எனக்கு பதில் எழுதக் கூடும் .


நான் இப்போது டவுனிங்டவுன்  நகரத்தில் தான் இருக்கிறேன் . குளிர்காலம் துவங்கிவிட்டது ஆன் . மரங்களெல்லாம் உருவிழந்து போய் நிற்கின்றன . வாழ்ந்து கெட்ட குடும்பங்களை பார்ப்பதை போல பொலிவிழந்த இம்மரங்களை பார்ப்பது மிகவும் வேதனையளிக்கிறது . இன்று காலை நான் உனக்கு மிகவும் பிடித்த மார்ல்போரோ புகைத்துக் கொண்டு இருந்தேன் . வானம் இருட்டிக் கொண்டு இருந்தது .எனக்கு உன்னுடைய கவிதை வரி நினைவுக்கு வந்துவிட்டது "Oh the blackness is murderous "....  மந்தாரமான அந்த சூழல் இயல்பாகவே உன் நினைவை தருகிறது ஆன் .


உன்னோடு பேசவேண்டும் போல் இருந்தது . அதனால் தான் இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் .எனக்கு எப்போதும் உனக்கும் சில்வியாவுக்கும் ஆன ஒற்றுமையை நினைத்து வியந்திருக்கிறேன் ஆன் . மாசசூசெட்ஸ்  மாநிலத்தில் தான் நீயும் பிறந்தாய் சில்வியாவும் பிறந்தாள் . அதிலிருந்தே உங்கள் இருவருக்குமான ஒற்றுமை பல விஷயங்களில் நிகழ்ந்து உங்களின் மரண விடுதலை வரைக்கும் தொடர்ந்திருக்கிறது ...நீ அவளை தொடர்ந்தாயா இல்லை அவள் உன்னை தொடர்ந்தாளா ...?


ஒரே வித்யாசம் அவள் சிறுவயதில் இருந்தே கவிதைகள் எழுதுகிறவளாக  இருந்தாள் . நீயோ உன்னுடைய மன நல மருத்துவர் ஓர்ன் சொல்லி எழுதத் தொடங்கினாய் ...எப்படி இருந்தாலும் உங்கள் இருவரின் கவிதையிலும் விடாமல் கேட்கும் அந்த ஓலம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் ஆன் .  அதிலும் " I will kiss you when I cut up one dozen new men and you will die somewhat, again and again. " என்ற வரிகளில் ரத்தம் தெறித்து என் உதடுகளில் முத்தமிட்டதாகவே நினைத்துக்  கொள்வேன் ஆன் . 


உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும் . சில்வியாவும் நீயும் உங்களின் முதல் தற்கொலை முயற்சியை பற்றி நிறைய நாட்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று சில்வியா என்னிடம் சொல்லியதுண்டு . அப்போது சில்வியா எப்படி பேசி இருப்பாள்  என்று என்னால் யூகிக்க முடிகிறது . ஆனால் அவளின் முதல் தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததை பற்றி அவள் வருத்தமுற்று அழுதாளா ஆன் ?  எனக்கு சில்வியா அழுதால் மனசுக்கு வலிக்கிறது ஆன் . நீ அழுதாலும் ...


பேராசிரியர் லோவலின் கவிதை பட்டறையில் நீ தானே சில்வியாவை பெண்களின் பார்வையில் அவள் வாழ்வின் வலியை எல்லாம் எழுதச் சொன்னவள் . ஒரு விதத்தில் அது நீ அவளுக்கு செய்த நல்லது ஆன் . கவிதையில் அவள் ஊக்கம் பெறாமல் போயிருந்தால் இன்னும் இன்னும் அவள் துடித்து நொந்திருப்பாள் . சில்வியாவின் கவிதைகள் தான் அவள் முகம் புதைத்து அழுவதற்கான தாய் மடியாக இருந்தது இல்லையா ...நீ செய்த எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இருந்தது ஆன் . "அழுகிய உருளைக் கிழங்கு போல மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது" என்று நீ  எழுதியது வரைக்கும் நான் உன்னோடு உடன்படுகிறேன் ஆன் 


ஆனால் ஒன்றில் தான் உடன்படமுடியவில்லை . "சில்வியா என்னுடைய மரணத்தை தனதாக்கிக் கொண்டாள்" என்று சொல்லி இருந்தாயே . அதை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . அது அவளுடைய மரணம் ஆன் . சில்வியா அந்த மரணத்திர்க்காகத் தான் எத்தனையோ பாடுகளை சுமந்தாள் . அவள் நீண்டகால தேடலில் கிடைத்த அந்த மரணம் அவளுடையது தான் . அது உன்னுடையதும் இல்லை என்னுடையதும் இல்லை . உனக்கு அப்படி ஒரு காட்சிப் பிழை தோன்றியதாகவே நான் கருதுகிறேன் . ஒரு நாள் மதிய உணவிற்குப் பின் உன் அம்மாவின் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கொஞ்சம் வோட்க்காவை குடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் வோட்க்காவை உன் மீது ஊற்றிக் கொண்டு  உன் கார் நிற்கும் அறைக்குள் சென்று கதவை அடைத்து காரை இயக்கி அதில் வந்த கார்பன் மோனாக்சைடை  உள்ளிழித்து உன்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்துக் கொண்டாயே அது தான் அது மட்டும் தான் உன்னுடைய மரணம் .  சில்வியாவும் நீயும் மரணித்த விதம் கார்பன் மோனாக்சைடின் கருணை  என ஒன்றாக இருக்கலாம் , ஆனால் உங்கள் இருவரின் மரணமும் வேறு வேறு . அவளுடையதை அவள் தழுவி இல்லாமல் போனாள் உன்னுடையதை நீ தழுவி விடைபெற்றுக் கொண்டாய் .


நான் எனக்கானதை தான் எடுத்துக் கொண்டு போனேன் என்று சில்வியா எப்போதும் வருத்தத்தோடு இதை சொல்லிக் கொண்டிருந்தாள் . எனவே உனக்கும் அதை புரிய வைக்க முயற்ச்சிக்கிறேன் ஆன் .  நீ இறப்பதற்கு முன் குமினுடன் மதிய உணவுக்கு சென்றாய் இல்லையா ...அதற்க்கு முதல் நாள் நானும் குமினும் ஒரு மது விடுதியில் சந்தித்துக் கொண்டோம் . குமின் என்னிடம் சொன்னார் "ஆன் செக்ஸ்டனுக்கு சகிப்புத் தன்மையே இல்லை ...எதற்கெடுத்தாலும் கோவிக்கிறாள் " என்று ...எனக்கு மிகுந்த கோவம் வந்துவிட்டது "ஆன் எதை சகிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் குமின் . அவளை பற்றி இன்னொருமுறை என்னிடம் இப்படி பேசாதீர்கள் . அவளுடைய கவிதைகளை விமர்சியுங்கள் . அவளை விமர்சிக்க வேண்டாம் " என்று என் முன் தளும்பி இருந்த மதுகோப்பையை  சாய்த்துக் கொண்டேன் . குமின் என்னையே பார்த்திருந்துவிட்டு "உனக்கும் ஆன் செக்ஸ்டன் போலவே கோவம் வருகிறது " என்று சொன்னார் . நான் பின் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் . உன்னை சந்தித்த பொழுது குமின் என்ன சொன்னார் ..? எதை பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள் ? அவரை சந்தித்துவிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஏன் நீ உனக்கான முடிவை தேடிக் கொண்டாய் என்று எனக்கு தெரியவில்லை . என்னிடம் பேசாமலே போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் .


சரி விடு . எல்லாம் நடந்த பின்னால் அவைகளை பேசி நாம் என்ன செய்யப் போகிறோம் . நீ ஒரு முறை டவுனிங்டவுனில் இருக்கும் என் வீட்டிற்கு வா ஆன் . நான் புதிதாக நிறைய சிகிரெட்டுகளும்  க்லென்லிவெட்  மதுவும் வாங்கி வைத்திருக்கிறேன் . உன்னோடு அவைகளை பகிர்ந்துகொள்ள வென காத்திருக்கிறேன் ஆன் .  மிதமிஞ்சிய பித்தை கண்களில் சொட்டியபடி நீ புகைக்கும் தோரணையே உன் கவிதைகளை விடவும் அதிக போதை தரும் . ஒரு முறை என்னை சந்திக்க வா ஆன் . பேசுவதற்கென நிறைய இருக்கிறது . எப்போதும் சுவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கும்  சலிப்பாக இருக்கிறது . எப்போதாவது பால்கனிக்கு வருகிற அணில் குஞ்சுகள் தான் ஒரே அறுதல் . நீ ஒரு முறை வந்து போனால் எனக்கு இன்னும் ஆசுவாசமாக இருக்கும் . தோழிகளோடு மனம் விட்டு பேசுவது எவ்வளவு இனிமையானது ...


சில்வியா பதில் எழுதினால்  நான் உனக்கு தெரியப் படுத்துகிறேன் .  நீ வரும்வரைக்கும் காத்திருக்கிறேன் ஆன் . இங்கே ஊர் குளிர்கிறது , என் அறை  குளிர்கிறது , தரை குளிர்கிறது தொடுகிற பொருளெல்லாம் குளிர்கிறது , ஆனால் என் மனம் மட்டும் அனலைப் போல தகித்துக் கொண்டே இருக்கிறது ...உன்னோடு பேசினால் , உன் தோளில்  சாய்த்து அழுதால் என் மனக் கிண்ணத்தில் அனல் கொஞ்சம் தணிந்துபோகும் . எனவே காத்திருப்பேன் ஆன் . மறக்காமல் வந்துபோ ...


There was a theft.
That much I am told.
I was abandoned.
That much I know.
I was forced backward.
I was forced forward.
I was passed hand to hand
like a bowl of fruit. 

நீ வரும்வரைக்கும்  உன்னுடைய இந்தக் கவிதையில் தான்  புரண்டுகொண்டிருப்பேன் . 
என் தீராப் பிரியங்களை எப்போதும் உனக்காக பொழிந்துகொண்டிருப்பேன் க.உதயகுமார் 

Friday, 10 January 2014

தன்னியல்பு

சடசடவென பொழிகிறது
மழை

ஆங்கோர் மரத்தில் கூடிகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை

அடித்து வீசுகிறது
காற்று

மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்துவீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப்போகிறது..?

எது ஒன்றும்
அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது

யாரை குறை சொல்ல முடியும்?
வேண்டாம்
யாரையும் குறை சொல்ல வேண்டாம்

இதோ என் கூட்டின்
மரக்கதவுகளை
கூர் மூக்கால்
சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்தப் பறவைக்கு
யாரேனும் சொல்லுங்களேன்
கதவை மூடிக்கொண்டு
அழுவது என்னியல்பென

Thursday, 9 January 2014

நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்

இன்றுடைந்த  மரப்பாச்சியை
சேர்த்துவைக்கிறேன்
நாளைக்கு எப்படியாகிலும் சரி செய்ய வேண்டும்

பின்னொரு நாளில்
துளி துளியாய்
உதிரம் பூக்கும்
என் சதைக் கீறலை
அன்பொழுக நக்கிவிட
எனக்கு அம் மரப்பாச்சி தேவைப்படலாம் இல்லையா ?

உதாசீனப் படுத்தப்பட்ட பிரியங்களை
பின்னொரு நாளுக்கென
எடுத்துவைக்க வேண்டும்

ஒரு தற்கொலை முடிவு
தூக்க மாத்திரைகளை
எண்ணிக் கொண்டிருக்கும் போது
அப்பிரியங்கள்
என் மதுக் குடுவையை போட்டுடைக்கலாம் இல்லையா?

இக்கணத்தின்
அதிருப்திகளை
விஷம் ஒத்த வார்த்தைகளை
எஞ்சிய கண்ணீரை
நாளைக்கென சேமித்தால் என்ன ?
இக்கணம் வாத்சல்யமாக நீளட்டுமே
Wednesday, 8 January 2014

கேட்பாரற்ற துயரின் குரல்

ஆதிமனத்தின் புனைவாக
அக்குரல்
சன்னமாக புறப்பட்டு
பின் காற்றின் நாவால் துலக்கமடைகிறது

யுகம் யுகமாய் பயணப்பட்டும்
நீர்த்துப் போகாமல்
உயிர்த்திருக்கிறது
செதிலேரிய தொண்டையின்
அவலஒலி

மீளாவலியுற்று
நடுகைப்பொழுதில்
அலறும்
துணையற்ற ஆணொருவனின்
பரிச்சயமான குரல் போலவே
எனக்குத் தெரிகிறது
காற்றில்
அவ்வளவு வெம்மை ...

அத்தனித்த இதயத்தின்
துயர கானம்
நீண்டு நீண்டு நீளும்
மகாகாலத்தின் சுவர்களில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
உங்கள் செவிகளோ
மூடியே கிடக்கின்றன

உதிரத்தின் புளித்த சுவை
உங்களுக்கும் பிடிக்குமென்றால்
அநாதிகாலமாக நீளும்
அந்நெடுங்குரலின் மிகுதுயரள்ளி
மிடறு மிடறாய்
பருகிக் களிப்போம்
என்னோடு வருகிறீரா ?