ஞாயப்படுத்த
முடியாதவைகளால்
நிறைந்திருக்கிறது
என் அலமாரி
என் தர்க்கங்களின் வழி
எழும்
ஞாயங்கள்
சவலைப்பிள்ளைகள்
அவைகளின்
வாக்குவாதங்கள்
இங்கே
யாருக்கும்
புரிந்ததில்லை
தர்க்க
ஞாயங்களும்
தர்ம ஞாயங்களும்
நிறைந்த
என் அலமாரியில்
ஒன்றைக்
கூட
நீங்கள்
ஞாயப்படுத்த இயலவில்லை
எவர்மீதும்
குறுக்கீடு செய்யாத
பாவனைகளுடன்
நீளும்
எனது ஞாயங்கள்
உங்களுக்கு
அசௌகரியங்களை தருவது பற்றி
எனக்கு
கவலையொன்றுமில்லை
என் அந்தரங்கத்தின்
வழி பயணிக்கும்
ஞாயங்களின்
மீது மட்டும் அதிக கவனமுடன்
இருக்கிறதுங்கள்
துலாக்கோல்
எனது ஞாயங்களின்
கழுத்தை
நான் தடவிக்கொடுக்கையில்
எங்கிருந்தோ
முளைக்கிறது
உங்களுக்கு
கொடுங்கசப்பு
நான் வஞ்சிக்கப்படுதல்
பற்றி
உங்களுக்கு அக்கறையில்லாத பொழுது
இது யாருடைய கரு
என்ற அக்கறையில்லாத பெண் போலவே
நான் இருந்துவிட்டுப் போகிறேன்
உங்கள்
தயவுகள் வேண்டாத
என் ஞாயங்களின் துணையோடு
எல்லா
நேரத்திலும்
ஞாயங்கள்
வேண்டுவதில்லை
தனக்கொரு
விளக்கத்தை
மேலும்
தனக்காக
ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலை
No comments:
Post a Comment