Thursday, 1 October 2015

துர்பாக்கியம்


உன்னிடம் சொல்லமுடியாதவைகளால் 

நிரம்பியிருக்கிறேன்
உன்னைப்பற்றிய வருத்தங்களோடு 
ஒரு மழைக்கால தும்பி போல 
எளிதாக என்னால் 
எழும்பிப் பறக்க இயலவில்லை 
நீ என் சுவாசத்தை 
கடினமாக்கியிருக்கிறாய் 

நான் பாவம் 

சுவரில் ஒட்டி இருக்கிற 
வண்ணத்துப்பூச்சிகளைப்போல 
என்னால் பறக்க முடியாது 
நீயோ பரிகசிக்கிறாய் 
துயரத்துக்கு வாக்கப்பட்டவன் 
எல்லாவற்றையும் சகிக்கிறேன் 

ஏதொன்றையும் நீ 

என்னிடம் பகிர்வதில்லை 
உனக்கது தேவையுமில்லை 
இது தான் நம் உறவின் 
சிக்கல் என்பது 
புரிந்ததா உனக்கு 

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது 

நான் உனக்கு தேவையில்லை என்றும் 
ஒரு தலையாய் என் அன்பை உறிஞ்சி 
நீ கொழுத்து போனாய் என்றும் 

ஒரு இரும்பு அரண் அமைத்து 

என்னை நானே 
பூட்டிக்கொண்டேன் 

இனி என்னை 

நீ 
நெருங்கவே முடியாது 

உன் குரலுக்கு 

என் கதவுகள் 
தாழ் திராது 


பலவந்தமாக 

என்னிடம் எதையும் நீ 
பரிக்கமுடியாதபடி  
நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் 

என் வாசலில் நீ கத்துவது 

இரைச்சலாக இல்லை 
என் அமைதியை 
நான் உருவாக்க தெரிந்துகொண்டேன் 
என் தனிமையில் 
ஏகாந்தமாய் இருக்கிறேன் 
இப்போது 
என்னிடம் எதையுமே 
நீ பெறமுடியாது 

ஒரே ஒரு துர்பாக்கியம் 

அழுத்திச்சாத்தப்பட்ட கதவுகளால் 
இன்னும் பிற 
பறவைகளும் 
திரும்பிபோகக்கூடும் 
இருக்கட்டுமே 
நீ வரமால் இருந்தால் நிம்மதி 

No comments:

Post a Comment