Monday 2 December 2013

நான் வந்துவிடுவேன் செந்தூரா ...

அன்பு நிறைந்த செந்தூரா ,


உன் அண்ணன் உதயகுமார் உனக்கு எழுதும் முதல் கடிதம் . போர்க்களத்தில் தொலைந்துபோனவர்களில் ஒருவரான  உன் அண்ணனுக்கு நீ எழுதிய ஆறாவது கடிதம் கிடைக்கப் பெற்றேன் . கடிதத்தை படித்து தரையில் சாய்ந்த பொழுது கண்கள் சரஞ்சரமாய் அழுதது . 


நீ முன்பொரு முறை எழுதிய கட்டுரையில் "எனக்கும் உதயகுமாருக்கும் தீபசெல்வனுக்கும் இளவேனிலுக்கும்  கனவுகள் உண்டு . நாங்கள் கொல்லப்  படுவோம் . எங்கள் கனவுகளோடு சேர்த்தே நாங்கள் கொல்லப்  படுவோம் " என்று குறிப்பிட்டிருந்தாய் அல்லவா ...எனக்கு இப்பொழுது தோன்றுகிறது , நாம் அப்படி கொல்லப்பட்டால் தான் என்ன ? நாம் கொல்லப்  படவேண்டியவர்கள் தான் . புழுத்து நெளியும் இச்சமூகத்தில் எதன்  நிமித்தம் நாம் வாழவேண்டும் ?  நாம் செத்திருக்கவேண்டியவர்கள் . ஆனால் காலம் எப்படியோ நம்மை தப்பிக்கவைத்தது . ஆனாலும் சோதரனே நம் தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி தொங்குவதை நீயோ நானோ இளவேனிலோ தீபனோ உணராமல் இல்லை . நமக்கு மரணத்தை பற்றிய அச்சமும் எப்போதும் இருந்திருக்கவில்லை . நம்மில் ஒருவன் மரணம் எப்போதுவேண்டுமானாலும் தன் வீட்டுக்  கதவை தட்டும் என்று தெரிந்தே நாம் எவ்வளவு தடுத்தும் விமானம் ஏரினான் . சப்பாத்துக் கால்களுக்கு பயப்படுகிறவர்களாக  நம்மில் ஒருவனும் இல்லை . அப்படி ஒரு பயத்தை இன்னொருவனின் கண்ணில் பார்த்துவிட்டால் அவன் நம்மோடு இருக்க உகந்தவனில்லை என்று கூட தீர்மானித்திருந்தோம் . உண்மையில் மரணம் தான் நம்மை நெருங்க அச்சப் படுகிறது . வலியப்போய் தழுவ நினைத்தாலும் நம் உடலின் வெப்பம் பொறுக்காமல் அது விலகி ஓடிவிடுகிறது . 


நம்முடைய மரணம் இயற்கையாக இருக்காது என்பதிலும் உனக்கோ எனக்கோ மாற்றுக் கருத்து இல்லை . அன்றைக்கு தொலைபேசி உரையாடலில் சொன்னாய் தெரியுமா "திசைகள் தெரியாமல் எங்காவது பாடல்களை பாடிக் கொண்டே பயணிப்போம் , சலிக்கும் நேரத்தில் பறவைகளை போல பறந்துவிடலாம் அண்ணா " என்று ...எனக்கு அந்த தீர்மானம் பிடித்திருந்தது . ஒன்று நம்மை கொல்வார்கள்  இல்லையேல் நாமே நம்மை கொலைசெய்து கொள்வோம்  .


நான் வந்துவிடுவேன் செந்தூரா ...கலை இலக்கிய சமூக தளங்களில் இயங்கவேண்டும் என்பது நம்முடைய கனவுகளில் ஒன்றாக இருக்கிறது . வாழ்வு சலிப்பதர்க்கு முன்னதாக நாம் அழுந்த நம் தடங்களை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது . மாவீரர் துயிலும் இடங்களை பார்க்கையில் இது இன்னும் இன்னும் நமக்கு உறுதிப் பட்டிருக்கிறது இல்லையா ...கடற்கரையில் ஓடித்திரியும் நண்டுகளை பார்த்திருக்கிறாயா நீ ?  சொற்ப வாழ்விலும் அவை தன்  காலடித்தடங்களை வரைந்துவைத்துவிட்டு செல்கின்றன . நாம் விடைபெறுவதற்கு முன்னதாக இங்கே செய்யவேண்டியவைகள் இருக்கிறது என்பது நான் சொல்லி உனக்கு தெரியவேண்டியதில்லை . உன் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் "இறையாண்மையை காக்க புனிதப் படுகொலைகளை " செய்த அரசர்களின் கால்களை நக்கி பிழைப்பு நடுத்தவோ அரசிகளின் கூந்தலுக்கு சிக்கெடுக்கவோ அல்ல , வலிந்து நம் மீது திணிக்கப் பட்ட நாம்  கொஞ்சமும் விரும்பாத அடையாளங்களுக்காக அல்ல , எதன்  நிமித்தமும் யார் செருப்பையும் சுமக்கவேண்டிய கட்டாயமும் நமக்கு இல்லை . மாறாக ஒரு நாள் நாம் நம்மில் இருந்தே நெருப்பை வெளியில் எடுக்கப் போகிறோம் . இப்போதைக்கு என்னை நினைத்துக் கொண்டு சாந்தமாய் இரு என் சகோதரா ...


இப்போதும் உன்னை முதன் முதலில் சந்தித்த நாள் பசுமையாக இருக்கிறது தம்பி . "ஜெய் பீம் " ஆவணத் திரைப்படத்தின் பதிவை கொடுக்க இளவேனில் வேளச்சேரிக்கு என்னை சந்திக்க வந்திருந்த பொழுது நீ அவனோடு வந்திருந்தாய் . உன்னுடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு அவ்வளவு பிடித்துப் போனது .  உன் உருவமோ இலக்கற்று காற்றில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியை போல இருந்தது . ஆனால் அந்த கண்களுக்குள் தான் எத்தனை வலிமிகுந்த வரலாற்றின் கதைகள் தளும்பிக் கொண்டிருந்தன . இரண்டாவது முறை "ஈழத் தமிழர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் " சந்தித்தோம் . இடையே "கூடங்குளம் " சம்பந்தமாக உன் "எதிர்" இதழில் எழுதச்சொல்லி என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தாய் , அதன் நிமித்தம் தொலைபேசியில் உரையாடினோம் . மூன்றாவது சந்திப்பு தான் நம்மளவில் மிக முக்கியமான சந்திப்பு . அந்த இரவை மறக்க முடியுமா செந்தூரா . என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு எப்போதும் உடன் இரு அண்ணா என்ற என் செந்தூரனோடான  அந்த இரவை என்னால் மறந்துவிட முடியுமா செந்தூரா ....  கடற்கரை சாலையில் அந்த விடுதிக்கு அருகே இருக்கும் மரத்தடி யாரை மறந்தாலும் உன்னையும் என்னையும் தீபசெல்வனையும் மறந்துவிடாது .  


ஒரு முறை நள்ளிரவில் KK  நகரில் உன்னுடைய அறையில்  நாம் விவாதித்துக் கொண்டிருந்தோம் . நான் பிரபாகரனை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் நீ சில கருத்துக்களை  சொல்லப்போய்  எனக்கு அழுகை வந்துவிட்டது . நான் வாய் விட்டு அழுதுகொண்டிருந்தேன் . நீயோ பதறிப்போய் என் கண்களை துடைத்துவிட்டு என் கன்னத்திலும் நெற்றியிலும் அழுந்த முத்தங்கள் இட்டாய் . உணவு உண்ண மறுத்த எனக்கு நீயே கெஞ்சி கொஞ்சி மன்னிப்பு கேட்டு ஊட்டிவிட்டாய் . என்னிடம் மன்னிப்பை இப்படி மானசீகமாய் வேறு யாரொருவரும் கேட்டதில்லை . நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும் இலக்கை நாம் தீர்க்கமாக தீர்மானித்திருந்தோம் . ஒருவரின் மீது ஒருவர் தாளாத அன்புடனே நாம் இதுகாறும் பயணித்துக் கொண்டிருக்கிறோம் . வாழ்வோ மரணமோ இருவருக்கும் சேர்ந்தே வருகிறதென்றால் அது எதுவென்றாலும் நாம் கொண்டாட்டங்களோடு அதை வரவேற்ப்போம் .


நேற்றைய தொலைபேசி உரையாடலில் "ஆசை முகம் மறந்து போச்சே ..." என்ற பாரதியின் பாடலை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் இல்லையா . நமதிருவருக்கும் மிக பிடித்த பாடல் இல்லையா அது . எனக்கு இன்னுமொரு பாடல் கூட பிடிக்கும் உனக்கு அதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது "அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் ..." என்று சுதா ரகுநாதனின் குரலில் அந்தப் பாடலை நீ கூட ஒரு முறை கேள் . பள்ளிப் பருவத்தில் என் அப்பா என்னை பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வைத்தார் . நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக கற்றுக் கொண்டேன் . அப்போது நடனம் ஆட என் விருப்பத்திற்குரிய பாடலாக அது இருந்திருக்கிறது . என் ஆசிரியர் ஜதிசொல்லிக் கொண்டே இந்தப் பாடலை பாடும்பொழுது நான் என்னை மறந்து கால்களில் சுழன்றிருக்கிறேன்  . "ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட .." என்னும் வரிகளில் நானே கண்ணனாகி  ஆடிக் களித்ததுண்டு . அது ஒரு காலம் செந்தூரா . நீ அந்தப் பாடலை கேட்கவேண்டும் .நீ சொன்னாயே திசைகள் தெரியாமல் பயணித்து பின்னொருநாள் பறந்துவிட வேண்டும் என்று , அன்றைய நாட்களில் பாடிக் களிக்கவென சில பாடல்களை நாம் இப்போதே சேர்த்துவைப்போம் .

நீ என்னிடம் இதழுக்கு அனுப்ப வேறொரு கட்டுரை கேட்டிருந்தாய் நேற்று . மாலை தூங்கி எழுந்தவுடன் அதை தான் எழுதவேண்டும் என்று இருந்தேன் . ஆனால் என்னவோ உன் முகம் நினைவுக்கு வரவும் உனக்கு கடிதம் எழுத உக்கார்ந்துவிட்டேன் . கவலைப் படாதே நாளைக்கு மாலைக்குள் உனக்கு அந்தக் கட்டுரை வந்துவிடும் . எழுதிவிடுகிறேன் .


நீ உன் அண்ணனுக்கு எழுதிய ஆறாவது கடிதத்தில் ஒரு பாடல் பாடி இருந்தாய் அல்லவா ...அந்தப் பாடலில் இந்த வரிகளை மட்டும் பைத்தியம் பிடித்தது போல் நானும் பாடிக் கொண்டிருக்கிறேன் ...


லா லா லா லா லா லா லா லா
கடைசியாய் எங்களை நாங்கள் பார்த்திருந்த போது
எங்கள் உடல்கள் மட்டும்-
துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு
நாய்களுக்கு உணவாய் இடப்படுகிறது.
லா லா லா லா லா லா லா லா லா லா லா


எங்கே என்னோடு நீயும் ஒரு முறை இந்தப் பாடலை பாடு என் தொப்புல்கொடியே ... 

 போருக்கு போன மகன் என்ன ஆனான் என்று தெரியாமல்  காத்திருக்கும் தாயைப் போல உன்னிடம் இருந்து தவிப்போடு  பதிலுக்காக காத்திருப்பேன் . என் தவிப்பு அந்தக் கடிதத்தில் என்ன பாடலை பாடப் போகிறாய் என்பதை பற்றியதானது .


மிகுந்து வழியும் கண்ணீரோடும் , நடுங்கிய விரல்களோடும் உன்மீதான பிரியங்களோடும் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன் .
~~க.உதயகுமார் 

No comments:

Post a Comment