Friday 11 December 2015

எஞ்சிய நம்பிக்கைகள்

கைபேசியில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும்
உனது தொலைபேசி இலக்கம்
வேறெதையெதையோ நினைவுறுத்தியபடி
என்னைத் தவிர்க்க முயல்கிறது



உன்னிடமிருந்து அழைப்பு
இன்று வரும்
இன்றில்லையேல் நாளை
நாளையும் இல்லையானால்
பிறிதொருநாள்
என்று எஞ்சிய
என் நம்பிக்கையில்
நகர்கிரதென் வாழ்வு



உன் குரல் கேட்டிடாத
ஒவ்வொரு கணமும்
நான் நானாக உணர்வதில்லை



என் ஏனைய
பகல் பொழுதின் தவிப்புகளிலிருந்து
உனது ஒற்றை சொல் மட்டுமே
விடுவிக்க இயலும்



நான் உனக்கு வேண்டாம்
என்று நீ முடிவெடுத்தபின்னால்
புறக்கணிப்பின் விஷம் தீண்டிய
எனக்கு துணையிருப்பது
உன் பெயர் சுமந்த கைப்பேசிமட்டுமே



பகல் பொழுதிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட இரவு
கொண்டுவருகிறது
எல்லா துயரங்களையும்
அவ்விரவில்
எனக்கு துணையிருக்கும்படி
மன்றாடுகிறேன்
தூங்கிவிட்ட தொட்டிச்செடியிடம் 

 
உன் நினைவாக என்னிடம்
இருக்கும் மேல்சட்டை 
உயிர்ப்பின் வெம்மையோடு
என் அலமாரிக்குள்
உன் நினைவுகளை
அடைகாக்கிறது 



நீ எப்பொழுது என்னை அழைப்பாய் ?
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது உன் குரல் கொண்டென்னை தீண்டுவாய் ?
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது என் தவறுகளை மன்னித்து
நெஞ்சோடு அணைத்துக்கொள்வாய்
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது
தீப்பிடித்துக் கொண்ட என் ஆகாயத்தில் நீரூற்றுவாய்
எனக்கு தெரியாது



ஆனால்
எனக்கு ஒன்று தெரியும்
நான் உன்னை முகம்முகமாய்
சந்திக்க நேர்ந்தால்
எழில் புன்னகையோடு
ஒரு பறவையை போல
என் தோளில்வந்தமர்வாய்
என்ற நம்பிக்கை மட்டும்
புத்தகத்தினுள் மயிலிறகாய்
எனக்குள்  ஒளிந்திருக்கிறது

No comments:

Post a Comment