Tuesday, 15 December 2015

தொடரமுடியாத வாழ்வு

நான் விரும்பும் தொலைவிற்கு
என்னால் வெளியேரிச்செல்லமுடியவில்லை



முரணான
இந்த வாழ்வின்
எதிர் எதிர் திசைகளில்
பயணப்படும்
என் மனம்
ஒடுங்கி மீள்கிறது
திடுக்கிடவைக்கும் உன் நிராகரிப்பால்



நீ என்னுள் பிரவேசித்த
நாளின் ஞாபகம்
வெற்றிடங்களை உருவாக்கத்தவறவில்லை



இன்னும் கூட
மீதமிருக்கின்றன
என் மீதான்
உன் வெறுப்பின் மிச்சங்கள்



என் நினைவில்
நெடுங்காலமாய் புதையுண்டிருக்கிறது
நீ இல்லாமல் போய்விட்ட துயரம்



யாருமில்லாத வெளியில்
யாரோ விட்டுச்சென்ற
அலைக்கழியும் குரலென
நான் சோர்ந்துபோய்விட்டேன்



எனதிந்த தனிமையுடன்
மிக நிராதரவான நிலையில்
ஒதுங்கிக்கிடக்கிறேன் 
இங்கிருந்து வெளியேறும்
வழிகளை ஆராய்ந்தபடி



எனது தனிமையின்
நிறம்
ஆகாயத்தின் கரையலாம்



எனது தனிமையின்
முடிவு
மரணத்தில் சேரலாம்



நீ இல்லாமல் போய்விட்ட
எனதிந்த தனிமையைவிடவும்
மரணம்
பற்றிக்கொள்ள ஏதுவானது எனக்கு

 
பாதியில் தடைபட்டுவிட்ட
கனவினைப்போல
தொடரமுடியவில்லை
இந்த வாழ்வை



கொஞ்சம் கொஞ்சமாக
நைந்து கிழிந்துபோகக்கூடும்
நீ இல்லாத
எனதிந்த வாழ்வு



என்னிடமிருக்கும் சிறகுகள்
பறப்பதற்கில்லை

No comments:

Post a Comment