Sunday 27 December 2015

அவமதிப்பு

சட்டையை கழற்றி
அணிவது போல
உனக்கு
மிக சுலமாக இருக்கிறது
என்னை அவமானப்படுத்துதல்



நீ என்னுள்
உருவாக்குகின்ற
பதற்றம்
என்னை பற்றிய அவநம்பிக்கையை
கட்டிஎழுப்புகிறது



சின்ன முகச்சுளிப்பில்
சுக்குநூறாய்
உடைத்தெறிகிறாய்
மனதை



உன் அவமதிப்பின் நகம் கீறி
வழியும் குருதியில்
பின்னப்பட்டிருப்பது
என் ஒழுக்கமான நடத்தையும் தான்



கண்டும் காணதது போல
என் கதறலை
நோக்கமறுக்கிறாய்
கேட்டும் கேளாதது போல
என் கேவலை
உதாசீனப்படுத்துகிறாய்



நான் உனக்கு கையளித்த
பிரியங்களை
வேண்டாமென உதறிவிட்டாய்
உனக்கு பிரியங்களை
பிடிக்கவில்லையா
அல்லது
பிரியமாய் இருப்பவர்களையே பிடிக்கவில்லையா ?



குழந்தை மனசுனக்கு
எப்போதுதான்
புரிந்திருக்கிறது
கால்பந்தினை போல்
எளிதில் எட்டியுதைக்கிறாய்



எனக்குள்
தேங்கிக்கிடக்கும்
அழித்தகற்றவியலாத
உன் புறக்கணிப்பின் சித்திரங்கள்
என்றென்றைக்குமாய்த்
என் தனிமையின் துயரங்களை
தின்றபடி இருக்கும்

No comments:

Post a Comment