Sunday 22 September 2013

போர்ட்ஸ்மவுத் பயணமும் , நண்பனின் பிரியமும் !

நான் இந்தியாவில் இருந்தவரை தனியாக எங்கும் பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று . இலக்கிய சமூக நிகழ்ச்சிகளுக்கு  , நண்பர்களின் இல்லங்களுக்கு , அவர்களின் சுப நிகழ்வுகளுக்கு மற்றும் தனிப்பட்ட பயணங்களாக தமிழ் நாடு கேரளா மற்றும் கர்நாடகாவில்  பெரும்பாலான பகுதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன் . ஆனால் அமெரிக்கா வந்த இந்த இரண்டு மாதங்களில் அப்படி எதுவும் பயணிக்கும் எண்ணம் கூட எனக்கு வரவில்லை .அருகே இருந்த மாகாணங்களான டெலவர் , நியு ஜெர்சி போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன் அறையில் இருக்கும் நண்பரோடு . அதன் பிறகு நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க அலுவலகத்தில் இருக்கும் உடன் பணிபுரிபவர்கள் குழுவாக கிளம்பினார்கள் . முதலில் தயக்கம் இருந்தாலும் , எனக்கு நீர்வீழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்த காரணத்தால் அவர்களோடு சென்று வந்தேன் . ஆனால் தனியாக  எங்கும் பயணிக்காமல் இருந்தேன் .

கல்லூரிக்காலத்தில் அறிமுகமாகி இன்றுவரைக்கும் என்னுடைய உற்ற நண்பனாக என்னோடு அன்பில் இணைந்திருக்கிற நண்பன் மாடசாமி அமெரிக்காவில் எனக்குமுன்னமே வந்து இங்கே நியு ஹாம்ஷயர் என்ற மாகாணத்தில் போர்ட்ஸ்மவுத் என்னும் இடத்தில்
பணிபுரிந்து கொண்டிருக்கிறான் . அவன் என்னை விடுமுறைக்கு போர்ட்ஸ்மவுத் வரவேண்டும் என்று ஒரு மாதமாகவே அழைத்துக் கொண்டிருந்தான் . எனக்கும் அவனை  பார்க்க ஆவலாக  இருந்தது . சென்ற திங்கள் கிழமை இங்கே அரசு விடுமுறை "தொழிலாளர் தினம் ". எனவே மூன்று நாட்கள் விடுமுறைக்கு நண்பனை பார்க்க செல்லலாம் என முடிவெடுத்தேன் . முதல் முறையாக அமெரிக்காவில் தனியாக 650 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நண்பனை சந்திக்க பயணம் .

வெள்ளிக் கிழமை மாலை  அலுவலகம் முடித்து நேராக அங்கிருந்து டவுனிங்டவுன் ரயில் நிலையம் சென்று காத்திருந்தேன் . பிலடெல்பியாவுக்கு செல்லும் செப்டா ரயிலுக்கான காத்திருப்பு . இருபது நிமிட காத்திருப்புக்கு பின் குறித்த நேரத்தில் ரயில் வந்தது . ஏறிக் கொண்டேன் . 45 நிமிட பயணத்திற்கு பிறகு பிலடெல்பியா சென்றடைந்தேன் . நகரம் இருளத் தொடங்கி இருந்தது . பிலடெல்பியா முன்னர் அமெரிக்காவின் தலைநகராக இருந்த நகரம் . பழமையான கட்டிடங்களும் , புதிதாக கட்டப் பட்ட வானை தொட நினைக்கும் கட்டிடங்களும் நிறைந்த நகரம் . பிலடெல்பியா நம் வேலூரை போல . சுதந்திர போராட்டத்துக்கான முதல் பொறி சிப்பாய் கலகமாக இங்கே வேலூரில் சூல் கொண்டது போல இங்கிலாந்து என்னும் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை வேண்டி கிளம்பிய அமெரிக்காவின் சுதந்திர தாகம் முதன் முதலாக சூல் கொண்ட ஊர் பிலடெல்பியா . அமெரிக்க வரலாற்றில் பிலடெல்பியா நீண்ட நெடிய பக்கங்களை ஆக்கிரமித்த நகரம் . பிரித்தானிய காலனி ஆதிக்கம் அமெரிக்காவில் கோலோச்சிய  பொழுது பிலடெல்பியா தான் அவர்களின் முக்கிய அரசியல் சார்ந்த வர்த்தகம் சார்ந்த நகரமாக விளங்கி இருக்கிறது . பிலடெல்பியா என்பது ஆங்கில மொழி சொல் அல்ல . இது கிரேக்க மொழி சொல் . கிரேக்க மொழியில் பிலடெல்பியா என்றால் "சகோதர அன்பு ". நான் இங்கே பணிபுரிய வந்திருக்கிற நிறுவனத்தின் தலைமையகம் பிலடெல்பியாவில் தான் இருக்கிறது . இந்த கட்டிடம் அமெரிக்காவில் உயரமான பதினைந்தவாது கட்டிடம் .  58 தளங்களை கொண்ட இக்கட்டிடத்தின் உயரம் 974 அடி . இக்கட்டிடத்தின் அடியில் தான் சப் அர்பன் ரயில் நிலையம் இயங்குகிறது . நான் இந்த ரயில் நிலையத்தில்தான் வந்திறங்கினேன் .

நான் பிலடெல்பியாவில் இருந்து பாஸ்டன் போவதற்கு  பிலடெல்பியாவின் "முப்பதாவது தெரு ரயில் நிலையம் " (30th street station) அருகே தான் பேருந்துக்கு பதிவு செய்திருந்தேன் . எனக்கு பேருந்து இரவு பத்து மணிக்கு . எனவேதான் நேரத்தை போக்குவதற்கு  சப் அர்பன் ரயில் நிலையம் வந்து செண்டர் சிட்டி கட்டிடத்தின் எதிரே அமர்ந்து கொண்டு நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் . எனக்கு உயரமான கட்டிடங்களை அதன் அடியில் நின்று கொண்டு அண்ணாந்து பார்ப்பது ஒரு வகையான உற்சாகத்தை தருகிறது . அன்றைக்கும் அப்படித்தான் அந்தக் கட்டிடத்தை எத்தனை முறை அண்ணாந்து பார்த்திருப்பேன் என்று கணக்கில்லை . ஒரு தந்தை தன் பிள்ளையை தோளில் அமரவைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார் . கைபேசியில் அவர்களை படம் பிடித்துக் கொண்டேன் . வெள்ளை என்ன கருப்பென்ன மேலை நாடென்ன கீழை நாடென்ன அம்மாக்களும் அப்பாக்களும் எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் ஆகாயத்தை போல ..என்ன அவர்கள் அன்பை வெளிப் படுத்தும் முறைகளில் தான் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுகிறது .  நகரத்தின் கட்டிடங்கள் எல்லாம் சூரிய ஒளியை வழி அனுப்பிவிட்டு மின்விளக்குகளை உடுத்தத் தொடங்கின . நான் "முப்பாதவது தெரு ரயில் நிலையம் " நோக்கி கிளம்பினேன் . மணி ஒன்பதிருக்கும் . நான் பேருந்து ஏற வேண்டிய இடத்தில் மற்ற பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் . நானும் அவர்களோடு வரிசையில் நின்றுகொண்டேன் .  எனக்கு பின்னால் ஒரு ஆப்ரிக்க பெண் "இது பாஸ்டன்  செல்லும் பேருந்துக்கான வரிசையா ?" என்று உறுதிசெய்துகொண்டு ஒரு நன்றியையும் புன்னகையும் பரிசளித்தார் . அவ்விரவுக்கு அது இனிமையாக இருந்தது . நண்பன் மாடசாமி கைபேசியில் அழைத்தான் . பேருந்து ஏறிவிட்டாயா என்ற அவனின் கேள்விக்கு இன்னும் ஒரு மணி நேரமாகும் என்று பதிலளித்தேன் . ஏதேனும் சாப்பிட்டாயா என்றான் . கையில் ஆப்பில் இருக்கிறது கொஞ்சம் பேரிச்சை பழங்கள்  இருக்கிறது  பேருந்தில்  ஏறிய பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன் . காலையில் என்ன சமைக்க ஏற்பாடு செய்யட்டும் ? பூரி சாப்பிடுகிறாயா இல்லை தோசை சாப்பிடுகிறாயா ? என்றான் . நான் சிரித்துக்  கொண்டே , உன் விருப்பம் போல் என்றேன் . பத்திரமா வாம்மா , காலையில் உனக்காக விழித்திருப்பேன் , வந்தவுடன் கைபேசியில் தொடர்புகொள் என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான் . அவனோடு பேசிக்கொண்டிருந்ததில் பத்து நிமிடங்கள் கழிந்திருந்தன  .

நண்பன் மாடசாமியை பற்றி சொல்ல வேண்டும் . திருநெல்வேலிக் காரன் . வெள்ளந்தி மனசு . கல்லூரியின் முதலாமாண்டில் எனக்கு பழக்கமானவன் . அன்றையில் இருந்து  பதிமூன்று வருடங்களுக்கு மேலாக எங்கள் நட்பு அன்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது , பயணங்களில்  கூடவே வரும் நிலவினை  போல .  மாடசாமியின் உலகம் மிக சிறியது . நண்பர்களாகிய நாங்களும் , அவனுடைய குடும்பத்தினருமே அவனுக்கு எல்லாம் . அவன் மற்றபடி வெளியுலகில் அத்தனை அழுத்தமாய் தன்னை வெளிக் காட்டிக்  கொள்வதில்லை . சிறந்த  அறிவாளி . கணிப்பொறி மொழியான java  வில்  இடம் வலம் திரும்பி U டர்ன் எல்லாம் அடிப்பான் . கல்லூரியில் எனக்கு ஒரு செமஸ்டர் தேர்வின் பொழுது டைபாய்ட் காய்ச்சல் வந்துவிட்டது . என் அம்மா அருகில்லாத குறையை மாடசாமி தான் அப்பொழுது தீர்த்து வைத்தான் . தினமும் மாடசாமியும் ஞானதுரையும் என்னை கல்லூரி ஆம்புலன்சில் அழைத்துச் சென்று ஊசி போட்டு அழைத்துவருவார்கள் . விடுதிக்கு வந்தவுடன் , எனக்கு இட்லி கஞ்சி போன்ற உணவுகளை வார்டனிடம்  சொல்லி தயார்செய்து கொடுத்துவிட்டு , என் பாடத்தை எனக்கு சொல்லிக் கொடுப்பான் . அவனுக்கு வேறு பரிச்சை இருக்கும் . ஆனாலும் எனக்கும் நேரம் செலவு செய்து சொல்லிக் கொடுப்பான் . மாடசாமியின் அனுசரணை இல்லாமல் போயிருந்தால் அந்த செமஸ்டரே  நான் எழுதி இருக்க மாட்டேன் . இந்த நிகழ்வாலேயே என் அம்மாவுக்கு மாடசாமியின் பெயர் மனதில் அழுந்தப் பதிந்து விட்டது .

கல்லூரி காலத்தில் நிறைய நிறைய நண்பர்கள் எனக்கிருந்திருந்தாலும் கல்லூரியை கடந்து வந்த பின்னால் உறுதியாக ஒன்றுபட்டு இன்றைய நாள் வரைக்கும் மிக பலமாக நீடித்திருக்கிற நட்பின் கோட்டையில் மாடசாமி தான் பிராதானம் எல்லோருக்கும் . அந்தக் குடும்பத்தில் , நான் , பூச்சி என்கிற சுரேஷ் , ஞானதுரை , சத்தியசீலன் , குணசேகர் , ஜெகதீசன் , நாகராஜ் , ஜெயப்ரகாஷ் என உறுப்பினர்கள் . மாடசாமி கிட்டத்தட்ட எங்கள் எல்லோருக்கும் இன்னொரு தாய் . நாங்கள் அனைவருமே ஒருவருக்கொருவரை அம்மா என்று தான் அழைத்துக் கொள்வோம் . மற்றவர்களுக்கு இது வித்யாசமாக தெரியும் . ஆனால் எப்படியோ எங்களுக்கு இப்படி அழைத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது . இன்று வரை அப்படிதான் பெயர்களோடு அம்மாவும் சேர்ந்து கொள்ளும் . உதாரணத்திற்கு பூச்சிம்மா , உதய்ம்மா, மாடம்மா இப்படி ... நாங்கள் அனைவருமே மிக எளிமையானவர்கள் . நாங்கள் மகிழ்ச்சியாக குதூகலமாக இருக்க எங்களுக்கு எதுவும் வேண்டாம் , நாங்கள் மட்டுமே போதும் . நாங்கள் எல்லோரும் இணைந்திருக்கிற இரவுகளும் பகலும் எங்களுக்கு திருவிழா தான் . விடுமுறை தினங்களில் நாங்கள் சேர்ந்து சமைக்கும் விதத்தை பார்த்து பலர் கண்வைத்திருக்கிறார்கள். ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒட்டு மொத்த அறையே மருத்துவமனையில் காத்துக் கிடக்கும் .எனக்கு வேறு நிகழ்ச்சிகளோ  பணிகளோ இல்லாத எல்லா சமயங்களும் நான் திருவான்மியூரில் தான் இருப்பேன்   எனக்கு திருவான்மியூர் மனசுக்கு நெருக்கமான இடமாக சென்னையில் இருப்பதற்கு காரணம் என் நண்பர்கள் திருவான்மியூரில் இருந்தது தான். ஒரு இடம் அழகாக  இருப்பதும் சொர்கமாக இருப்பதும் அங்கிருக்கும் நம் மனதுக்கு பிடித்தவர்களாலேயே ... வானுயர்ந்த கட்டிடங்களும் , அடர்ந்திருக்கும் மரங்களும் , பளீரென நீளும் சாலைகள் மட்டுமே ஒரு இடத்தை ஊரை நகரை அழகாக்கிவிடமுடியுமா என்ன ..?

நினைவுகள்   சுழன்று கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . எனக்கான பேருந்து வந்து நின்றது . வரிசயில் நின்றிருந்த பயணிகளின் பயணசீட்டை  சரிபார்த்து விட்டு பேருந்தின் சிப்பந்தி பயணிகளை அனுமதித்தார் . அது இரண்டடுக்கு பேருந்து . நான் பேருந்தின் மேல்தளத்தில் சென்று அமர்ந்து கொண்டேன் . எப்போதும் என் இரவுப் பயணங்களுக்கென தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டேன் . MS அம்மா குறையொன்றும் இல்லை பாடத்தொடங்கிய சமயம் பேருந்து கிளம்பியது . நகரை விட்டு பேருந்து விரைந்துகொண்டிருந்தது . எனக்கு உடல் அசதி . அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன் . இரவு மணி இரண்டு போல பேருந்தை ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள் . நான் தேநீர்  குடிக்கவென  பேருந்தில் இருந்து வெளியே வந்தேன் . குளிர் கடுமையாக இருந்தது . நம்மூர் மோட்டலில் கொச்சையான சொற்களால் கதறும்  பாடல்களின் சத்தமில்லாத அந்த மோட்டல் புதிதாக இருந்தது .  இரவிலும் அந்தப் பெண் வசீகர புன்னகையோடு இருந்தாள் .

உங்களுக்கு நான் என்ன உதவி செய்யட்டும் ?

எனக்கொரு காபி வேண்டும் ...

பால் கலந்தா , கலக்காமலா ?

பால் கலந்து ...

அவள் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு காபியைபெற்றுக் கொண்டு  அவளுக்கொரு புன்னகையை விட்டுவிட்டு பேருந்தில் அடங்கினேன் . குளிரூட்டப்பட்ட பேருந்து மேலும் என் கைகளை நடுங்கச்செய்தது . குளிர் அடக்கும் ஆடையை  எடுத்து உடுத்திக் கொண்டேன் . பேருந்து கிளம்பியது , சைந்தவி "பிறை தேடும் இரவிலே உயிரே ..." என பாடதொடங்கி இருந்தார் ...  அதற்குப் பின் உறங்கவில்லை . பாடல்கள் கேட்டுக் கொண்டும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும் பயணம் தொடர்ந்தது . காலை மணி 5:15 க்கு பேருந்து பாஸ்டன் நகரின் தெற்கு பேருந்து நிலையத்தை சென்றடைந்தது .

அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டன் . நம்மூரில் எந்த ஊரோடு ஒப்பிடலாம் என்றால் நாமக்கல் பொருத்தமாக இருக்கும் . கல்வி நிலையங்களால் நிறைந்த நகரம் பாஸ்டன் .

பேருந்து இறக்கிவிட்ட நடைமேடையில் இருந்து நிலையத்திற்குள் வந்தேன் . உலகின் மிகப் பெரிய வல்லரசு , உலகின் பணக்கார தேசம் , உலகின் காவலன் என்றெல்லாம் அடைமொழியோடு அழைக்கபடுகிற தேசத்தில் வீடில்லாத பிரஜைகள் பேருந்து நிலையத்தில் காத்திருப்போர்  அமர்வதர்க்கான இருக்கைகளில் உறங்கிக் கொண்டிருந்தார்கள் , அழுக்கான தங்கள் உடமைகளோடு . "தன் கொண்டையில் பேன் இருப்பதை பொருட்படுத்தாத சீமாட்டி எதிரே இருப்பவளின்  கூந்தலுக்கு  சிக்கெடுத்தாளாம்" என்று என் பாட்டி சொல்லும் பழமொழி ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது .

நான் பாஸ்டனில் இருந்து போர்ட்ஸ்மவுத்   செல்ல இன்னொரு பேருந்து பிடிக்க வேண்டும் . நண்பன் ஏற்கனவே எனக்கு விவரங்கள் சொல்லி இருந்தான் . ஆனால் நண்பன் சொன்ன பேருந்துக்கான பயணசீட்டு அலுவலகம் காலை 7:30 குத்தான் திறக்கும் என்ற அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . அங்கிருந்த ஒரு காவலரை அணுகி விவரம் கேட்டேன் . அவரோ உங்களுக்கு அடுத்த பேருந்து இன்னும் அரை மணி நேரத்தில் இருக்கிறது , நீங்கள் பயணசீட்டை பேருந்திலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று பாலை வார்த்தார் . அப்பாடா   என்று அவர் சொன்ன இடத்தில் வந்து அமர்ந்து காத்துக் கொண்டிருந்தேன் . பேருந்து வந்தது . இங்கே பேருந்துகளுக்கு நடத்துனர் எல்லாம் இல்லை . ஓட்டுனர் மட்டும் தான் . அவரிடம் பயணசீட்டு என்னிடம் இல்லை என்ற விவரத்தை சொன்ன வுடன் , "கவலையில்லை , உங்களுடைய அடையாள அட்டை ஏதேனும் இருந்தால் என்னிடம் ஒப்படையுங்கள் , நீங்கள் போர்ட்ஸ்மவுத் சென்று  பயணசீட்டை  பெற்றுக்கொள்ளும்போது உங்களின் அடையாள அட்டையை அவர்கள் ஒப்படைப்பார்கள்  "  என்று சொன்னார் . எனக்கு திக்கென்றிருந்தது . என்னிடம் பாஸ்போர்ட் மட்டும் தான் இங்கிருக்கும் ஒரே அடையாள அட்டை . அதை எப்படி இவரிடம் கொடுப்பது ..? எனக்கு வேறு வழியில்லை , மருந்தீஸ்வரரை   நினைத்துக் கொண்டு பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு பேருந்தில் அமர்ந்து கொண்டேன் . பேருந்து கிளம்பியவுடனேயே நான் தூங்கிப் போனேன் . இடையே திடுமென விழித்த பொழுது வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது . பேருந்து நியுபெரிபோர்ட் என்னும் இடத்தை கடந்து கொண்டிருந்தது . பேருந்து சன்னலில் அலை அலையாக மழை வழிந்து கொண்டிருந்தது . எனக்கு தூங்க தோன்றவில்லை . சன்னலில் மழையை பார்த்தபடி பயணம் தொடர்ந்தது. வாய்விட்டு பாடவேண்டும் போல இருந்தது . மனசுக்குள்  அப்படி ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு போர்ட்ஸ்மவுத் வந்து சேர்ந்தேன் . மழை விட்டிருந்தது . அங்கே என் பாஸ்போர்டையும்  பயணசீட்டையும் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன் . என் பின்னாலேயே ஒரு பெண் ஓடிவந்தாள் . என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தேன் , அவள் கையில் என்னுடைய வங்கி  கணக்கு அட்டை . பேருந்துக்கு கட்டணம்  செலுத்தி விட்டு கணக்கு அட்டையை பெற்றுக் கொள்ளாமலே வந்துவிட்டேன் . நன்றியோடு பெற்றுக் கொண்டு புன்னகைத்தேன் . இந்த நாள் இனிய நாளாக  இருக்கட்டும் என்று அவளும் புன்னகைத்தபடி உள்ளே கடந்துவிட்டாள்.

மாடசாமிக்கு நான் வந்து விட்ட விவரத்தை சொன்னேன் . அடுத்த பத்துநிமிடங்களில் மாடசாமியும் அவனுடைய அறை நண்பர் நடேஷும் வந்தார்கள்  . பரஸ்பர  நலம் விசாரிப்புக்கு பிறகு அவர்களின் இல்லத்திற்கு நகரத் தொடங்கியது  கார் . போர்ட்ஸ் மவுத் மிக எழிலாக இருந்தது . அதிகம் ஜனசந்தடி இல்லாமல் ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் தூரம் அதிகமாக இருந்தது . அடர்ந்த மரங்கள் ....மாடசாமி சொன்னான் , "அக்டோபரில் இங்கே பணிகாலத்திர்க்கு முன்பு இம்மரங்களின் இலைகள் எல்லாம் பச்சை துறந்து வண்ணவண்ணமாக மாறும் . அப்போதும் வா இம்மரங்கள் உனக்கு மிக பிடிக்கும் " . எனக்கு உண்மையில் போர்ட்ஸ் மவுத் பிடித்திருந்தது . என் நண்பன் மாடசாமி யின் அருகாமையாலோ  என்னவோ ....

வீடு வந்து சேர்ந்தோம்  . உங்கள்  வருகையின் நிமித்தம் அறையை நேற்று தான் சுத்தம் செய்தோம் என்று மாடசாமியின்  நண்பர் நடேஷ் தெரிவித்தார் . இனிமையாக பேசினார் . புதிதாக சந்திப்பதுபோல் இல்லாமல் சந்தித்த சில மணி துளிகளில் "உங்களை பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருந்தார்  மாடசாமி " என்று ஒட்டிக் கொண்டார் . உடுப்பை கூட மாற்றாமல் அவரோடு எங்கள் கல்லூரி காலத்தை திருவான்மியூர் நாட்களை பேசிக் கொண்டிருந்தேன் . வழக்கம் போல மாடசாமியின் கெடுபிடிகள் ஆரம்பமானது . "போதும் முதல்ல இந்த உடுப்ப மாத்திகிட்டு பல்ல வெளக்கு " .. சரிங்கசாமி என்று உடுப்பை மாற்றிக்கொண்டு காலை  வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வந்தேன் . தேங்காய் சட்டினி தயாராகிக் கொண்டிருந்தது .

முட்டை தோசை , பொடி தோசை .... இரண்டு மாதத்திற்கு பிறகு தோசையை கண்ணால் பார்த்தேன் . வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு மாடசாமியோடு என்னென்னவோ  பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . கொஞ்ச நேரம் என்னை ஓய்வெடுக்க சொன்னான் . அப்படியே தூங்கிவிட்டேன் . கண் விழித்துப் பார்த்தால் எனக்கு பிடிக்குமென "Egg  Fried  rice " தயாராகிக் கொண்டிருந்தது . மனசும் வயிறும் இரண்டு மாதத்திற்கு பிறகு திருப்தி பட்டுக் கொண்டது . மாடசாமி மற்றும் பூச்சியின் அருகாமை இருந்துவிட்டால் போதும் குழந்தயாகிவிடும் மனசு .  குதூகலமாய் இருந்த மதியநேரத்தில் என்னோடு வானமும் சேர்ந்து கொண்டது . இருண்டு இடி இடித்து மழை கொட்டியது . பால்கனியில் இருந்தவாறு மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு மாடசாமியின் நெல்லை தமிழ் ஆறுதல்கள் அறிவுரைகள் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தது .

அன்று மாலை , நான் மாடசாமி , நடேஷ் மற்றும் மாடசாமியின் மற்றொரு நண்பர் சார்லஸ் என நால்வரும் அங்கிருக்கும் கடைகளுக்கு சென்றோம் . எனக்கு தேவையான உடுப்புகளை மாடசாமியே   தேர்ந்தெடுத்தான் .  சிரிப்பும் கொண்டாட்டமுமாக அம்மாலையை கடந்து புது துணிகளோடு இரவு வீடு வந்தோம் . நடேஷ் இரவு உணவாக பரோட்டாவும் சிக்கன் கொத்துக் கறியும் தயார் செய்து பரிமாறினார் . அவ்வளவு ருசி . முதலில் பரோட்டா வேண்டாம் என்றவன் , கொத்துக் கரி ருசியில் நான்கு பரோட்டாக்களை துவம்சம் செய்தேன் . இன்னும் சாப்பிடுங்கள் என்று அன்பு கட்டளை நடேஷ் இட்ட பொழுதும் , வயிற்றில் இடமில்லமால் நெளிந்து மறுத்தேன் .  சனிக் கிழமை ஒரு நாள் அவ்வளவு இனிமையாக மகிழ்ச்சியாக கடந்துபோனது . இரவு UNO என்ற  விளையாட்டு சொல்லிக் கொடுத்தார்கள் . சீட்டுக்கட்டு மாதிரி . எனக்கு அது மிகவும் பிடித்துப் போனது .  நள்ளிரவு ஒரு மணி வரை விளையாடிக் கொண்டிருந்தோம் , வெடிசிரிப்புகளோடு . எப்போதும் போல மாடசாமியே போங்கு ஆட்டம் ஆடி வெற்றிபெற்றுக் கொண்டிருந்தார் :-)  .  எப்போதும் போல நான் தான் மண்ணை கவ்வினேன் .

நாளைக்கு எங்கே எல்லாம் போகப் போகிறோம் என்ற உரையாடலுக்கு  பிறகு சனிகிழமை இரவு விடிந்து ஞாயிற்றை பார்த்தோம் . காலையில் வடை , காரப் பணியாரம் என கமகம சாப்பாடு . சீக்கிரம் கிளம்பவேண்டும் என உத்தரவு . அப்படியே கிளம்பி நாற்பது நிமிட கார் பயணத்திற்கு பிறகு என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் . அங்கு சென்ற நிமிடத்தில் குழந்தையாகிப் போனேன் . அது ஒரு கிராமத்தில் இருக்கும் பண்ணை தோட்டம் . ஆப்பிள் மரங்களும் , பீச் (peach ) மரங்களும் , plum  மரங்களும்  , ப்ளூ பெர்ரி செடிகளும் நிறைந்திருந்த தோட்டம் அது . அங்கு சிறப்பு என்ன வென்றால் , நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பழங்களை தின்றுகொள்ளலாம் . பணம் கேட்க மாட்டார்கள் . நாம் வீட்டுக்கு கொண்டு வரும் பழங்களுக்கு மட்டுமே எடை போட்டு பணம் செலுத்த வேண்டும் .  எங்கள் மதிய சாப்பாடே ஞாயிறு அன்று plum , ஆப்பிள் , பீச் மற்றும் ப்ளூ பெரி தான் . சலிக்க சலிக்க மரத்தில் இருந்து பழங்களை  பறித்து தின்றோம் . வார்த்தைகளில் விவரிக்க முடியா மகிழ்ச்சி எனக்கு . அங்கிருந்த மரங்களை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது .  நடுநடுவே மாடசாமியும் நானும் "ஜேம்ஸ் இந்த இடத்தை பற்றி நீ என்ன நெனைக்குற ..பீட்டர் இது ஒரு அழகான தோட்டம் " என்று தமிழ்  டிஸ்கவரியில் வருவது போல மிமிக்ரி செய்து கொண்டு தோட்டத்தின் பழங்களை சுவைத்து மகிழ்ந்தோம் .  வீட்டுக்கு தேவையான பழங்களை நாங்களே தேர்ந்தெடுத்து பறித்துக் கொண்டு எடை போட்டு வாங்கிக் கொண்டோம் .

பின் அங்கிருந்து , ஹாம்ப்டன் கடற்கரைக்கு சென்றோம் ... அட்லாண்டிக் பெருங்கடல் .!  ஏனோ  எனக்கு அக்கடற்கரை அன்னியமாக இருந்தது . எனக்கோ குளிரில் காதுமடல்கள் சில்லிட்டன. ஆனால் அங்கே ஆணும் பெண்ணுமாய் ஆடை என்று சொல்லும்படியாக பெரிதாக ஒன்றுமில்லாமல் மிக குறைவான அடைககளில் கடற்கரை மணலில் கிடந்தார்கள் . இரண்டு இளசுகள் அழுந்த முத்தமிட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . அடிக்கடி பெயர் தெரியாத  ஒரு பறவை என் தலைக்கு மேலே தாழ பறந்து சென்றது .மாடசாமியோடு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தேன்  . பிறகு கொஞ்சம் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம் .  ஏனோ அக்கடற்கரையில் எனக்கு கால் நனைக்க வேண்டும் என்று தோன்றவில்லை  .  அங்கிருந்து கிளம்பும்  நேரம் மழை பிடித்துக் கொண்டது . மழையில் கடற்கரை சாலையில் அந்த  பயணம் அத்தனை சிலிர்ப்பாக இருந்தது . கொஞ்ச தூரம் கடந்திருப்போம் கடலின் மேலே வானவில் ....மீண்டும் ஓரிடத்தில் காரை நிறுத்தி வானவில்லோடு கடலை வேடிக்கை பார்த்துவிட்டு  கிளம்பினோம் . என் மகிழ்ச்சி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது . விடிந்தால் நான் கிளம்பவேண்டுமே ....மாடசாமி மிகச்சரியாக அதை கணித்து , கவலைபடாதம்மா ...அடுத்த மாசம் நான் உன் வீட்டுக்கு வரேன் ... இங்க தான இருக்கேன் .... நம்ம friends  எல்லாரும் உன்ன பத்தி தான் கவலை படறாங்க . உதயக்குமார பார்த்துக்கோ மாடுன்னு தான் என்கிட்டே சொல்றாங்க . சந்தோஷமா இரும்மா  என்று ஏதேதோ ஆறுதல் சொன்னான் . அவனுக்கு வரும் நவம்பரில் திருமணம் . நிறைய நண்பர்களின் திருமணங்களுக்கு சென்றிருக்கிறேன் . ஆனால் மாடசாமியின் திருமணத்திற்கு என்னால் செல்ல முடியாத சூழல் . அதை நினைத்து நான் வருத்தப் பட்ட பொழுதும் , திருமணம் முடித்து நான் இங்கே தானே வருவேன் . பிறகேன் கவலைப் படுகிறாய் என்று என்னை தேற்றினான்.

இரவு யாருக்கும் பசியில்லை என்று சொன்னோம் , ஆனால் மாடசாமி "உனக்குதான் வெண்பொங்கல் பிடிக்குமில்ல ..செய்யுறேன் கொஞ்சம் போல சாப்பிட்டு படு " என்று வெண்பொங்கல் செய்து கொடுத்தான் . இரவு உணவுக்குப் பின் சோர்ந்து போய் இருந்தேன் ..மாடசாமி கவலைப் படாதம்மா போகப் போக உனக்கு இங்க பிடிக்கும்  . காலைல   உனக்கு பேருந்து ஆறு மணிக்கு எனவே நீ இப்பவே உன் பொருட்களை எடுத்துவை என்று எனக்காக தயார் செய்தான் . நாளை பயணத்தின் பொழுது மதியம் சாப்பிட பிஸ்ஸா பர்கர் தான் கிடைக்கும் எனவே நான் உனக்கு மதிய உணவு ஏற்பாடு செய்கிறேன் என "தயிர்சாதம் " செய்து கட்டிகொடுத்தான் . தாய் வீட்டுக்கு சென்று  வருகிற மகளை பார்த்திருக்கிறீர்களா ? ஒரு பையோடு போய் மூணு நாலு மூட்டைகளோடு வருவாள்  அபப்டித்தான் இருந்தது என் நிலைமையும். போகும் பொழுது இல்லாத பல பொருட்களை வரும்போது மாடசாமி என் பையில் திணித்திருந்தான் . காலை உணவுக்கு "வெண்பொங்கலும் , மைசூர்   பாக்கும் "  ஒரு டப்பா , மதிய உணவுக்கு தயிர் சாதமும் மாவடுவும் ஒரு டப்பா , இது போக எனக்காக தக்காளி  ஊறுகாய் , கறிவேப்பிலை பொடி , கோங்குரா சட்டினி , வத்தக்  குழம்பு என ஏகப்பட்ட பாட்டில்கள் பைக்குள் அடைக்கப் பட்டிருந்தது . நடேஷ் என்ற நண்பர் ஒரு பையில் பழ வகைகளை போட்டு கொண்டு வந்து அவர் ஒரு பக்கம் திணித்தார் . புதுத்துணிகள் , தின்பண்டம் என என் பை நிறைமாத  கர்பிணி போல வயிற்றை  சாய்த்துக் கொண்டு இருந்தது ...

காலையில் மாடசாமி எழுப்பிவிட்டு என்னை தயார்செய்து காரில் ஏற்றிக்கொண்டான் . பேருந்து நிலையம் செல்லும் வரை நான் எதுவும் பேசவில்லை . என் முகம் சுருங்கி கிடந்தது . அவன் தான் பேசிக் கொண்டே வந்தான் . பேருந்தில்  ஏற்றிவிட்டு பேருந்து கிளம்பும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான் .பேருந்து நகரத் தொடங்கியது ...மாடசாமியின் உருவம் மறைந்து புள்ளியாய் தேய்ந்த பிறகு மனசு கனத்துக் கிடந்தது . பயணம் துவங்கும் போது குழந்தை பிறந்தவீடாக குதூகலித்து கிடந்த மனசு , பயணம் முடித்து திரும்பும் போது மரணம் நிகழ்ந்த வீடு போல் துக்கித்து கிடந்தது . அந்த இரண்டு நாட்களும்  எனக்கு போர்ட்ஸ்மவுத்  இன்னொரு திருவான்மியூராக இருந்தது . மண்ணின் மணத்தை மீண்டும் உணரச்செய்தான் நண்பன் .

இதோ மீண்டும் டவுநிங்டவுன் , மீண்டும் அலுவலகம் , மீண்டும் தனித்த அந்தி ....

 நேற்றிலிருந்து தாய்வீட்டில் இருந்து திரும்பிவந்த புதுப்பெண் போலதான் மனசு அவ்வப்பொழுது அனிச்சையாக விசும்புகிறது  ... அடுத்த போர்ட்ஸ் மவுத் பயணம் அக்டோபரில் , அதுவரைக்கும் இந்த  இரண்டு நாள் நினைவுகள் தாக்குப் பிடிக்கும் ...


~~க.உதயகுமார்

No comments:

Post a Comment