Wednesday 29 January 2014

பிரியத்தின் சில்வியா , உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன்




மாசறு அன்புடை சில்வியா , 

நண்பன்  அரவிந்தன் மூலமாக நீ  கொடுத்தனுப்பிய பதில் கடிதம் கிடைக்கப் பெற்றேன் . உன் பதில் வந்த நாளில் இருந்து அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கு எதுவும் வைத்திருக்கவில்லை . சில வரிகளில் தீயில் விழுந்த இறகு போல பொசுங்கிப்போனேன் , சில வரிகளில் காற்றில் பறக்கும் இறகைப் போல பறந்துபோனேன் . உன்மத்த அன்புடைய உதயா என்ற உன் கடிதத்தின் துவக்கமே என்னை அழவைத்துவிட்டது சில்வியா ..உனக்குத் தான் தெரியுமே , என்னால் மிக சுலபமாக செய்ய முடிந்தது அழுவது மட்டும் தானே ...

நான் உன் தோழி ஆன் செக்ஸ்டனுக்கு கடிதம் எழுதி இருந்தேன் . அவளை ஒரு முறை அறைக்கு வந்துபோகும்படி சொல்லி இருந்தேன் . என் மீது மிகுந்த பிரியம் உடையவள் . நான் கேட்டது போலவே வந்திருந்தாள் . மாலை வலுவிழந்து  இரவு கவியத் தொடங்கிய நேரம் வந்தாள் .  உன்னுடைய கடிதத்தை அவளிடமும் காட்டினேன் . படித்து முடித்தவள் கடிதத்தை முகத்தருகே கொண்டு சென்றாள் . முத்தம் கொடுக்கப் போகிறாள் என்று எண்ணினேன் . அவளோ ஆழ மூச்சிழுத்து கடிதத்தை முகர்ந்து பார்த்தாள் . என்ன செய்கிறாய் என்று வினவினேன் . ஒவ்வொரு எழுத்திலும் சில்வியாவின் வாசம் . அவள் அன்புமயமானவள் , அவளின் வாழ்வு மட்டும் கண்ணீர்த்துளிகளால் குளிப்பாட்டப் பட்டது தான் என்னால் தாங்கமுடியாத வலி என்று அழத்தொடங்கிவிட்டாள் . அவளின் தலை கோதி நெஞ்சோரம் சாய்த்துக் கொண்டேன் . அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன் . ஆசுவாசப் படுத்த எனக்கு தெரிந்த ஒரே வழி இது தான் சில்வியா . பின் நானும் அவளும் க்லென்லிவெட் அருந்தினோம் . அவளுக்கு அதன் சுவை மிகப் பிடித்திருந்தது . அன்றைய இரவை முழுக்க எங்கள்  பேச்சும் அழுகையுமே நிறைத்தது . விடியற்காலையில் சென்று விட்டாள் . மழை வந்து போன பிறகும் மண் வாசம் மிச்சமிருப்பதை போல அன்று நாள் முழுக்க  என் அறையெங்கும் ஆன் செக்ஸ்டன் மிச்சமிருந்தாள் . 

அதன் பின் மீண்டும் எனக்கு உன் நினைவு வந்துவிட்டது சில்வியா . நீ போட்ட கடிதத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன் . எனக்கு ஒரு வரி மட்டும் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது சில்வியா ..."வாழமுடியாமைக்கான சமரசம் தான் மரணம். " என்று நீ சொல்லி கேட்கும்பொழுது என்னால் அதை நம்பமுடியவில்லை . சமரசம் செய்து கொள்கிறவர்கள் கோழைகள் . நீ கோழை என நீயே சொல்லிக் கொண்டாலும் ஒருபோதும் நான் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் . மரணம் சமரசம் அல்ல . மரணம் வாழ்தலில் இருந்து பெற்றுக் கொள்கிற விடுதலை . நமது விடுதலையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் . இன்னொருவன் தந்து நாம் பெற்றுக் கொண்டால் அது அடிமைத்தனம் . நீ அடிமை இல்லை . நீ சுதந்திரமானவள் . நீ கோழை இல்லை . நீ பராக்கிரமம் உடையவள் . உன்னை பார்த்து நான் எப்போதும் பொறாமை பட்டுக் கொண்டு இருக்கிறேன் . என்னைப்பார் ....நான் சமரசம் செய்துகொண்டு வாழ்ந்தலைகிறேன் .  நான் தான் கோழை . நான் தான் அடிமை .

உனக்கொன்று தெரியுமா ...நீ இங்கிலாந்தில் எந்த மாதிரியான அடுப்பை உபயோகப் படுத்தினாயோ , இங்கே நீ பிறந்த அமெரிக்காவில் நானும் அதே போன்ற அடுப்பை தான் பயன்படுத்துகிறேன் . அந்த அடுப்பு தான் எப்போதும் எனக்கு உன் நினைவை தந்து கொண்டே இருக்கிறது . ஒவ்வொரு முறை கடக்கும்போதும்  உள்ளிருந்து நீ அழைப்பது போலவே குரல் கேட்கிறது . பல முறை அந்த அடுப்பையே வெறித்துப் பார்க்கிறேன் . ஒரு முறை அந்த அடுப்பை கீழே திறந்து உள்ளே தலை போகிறதா என்று பார்த்தேன் . தாராளமாக என் தலையும் உள்ளே போகிறது . எரிவாயுவை தடையின்றி திறந்துவிட்டால் தீர்ந்தது கதை .ஆனால் கால்கள் ஏனோ நடுங்குகிறது . ஏனென்றால் நான் கோழை . சமரசம் செய்துகொண்டு வாழவே விதிக்கப் பட்டிருக்கிறது . வெள்ளை நிறத்தில் அந்த அடுப்பின் வடிவமே ஒரு சவபெட்டிபோல மிகுந்த அழகாக இருக்கிறது சில்வியா .  

என் பவித்திர பதுமையே சில்வியா , ஒளிகளுக்கு மத்தியில் இருளில் நீந்திக் கிடக்கிறேன் என்று சொன்னாயே . எவ்வளவு பெரும்பேறு அது . இருளிலும் ஒளியிலும் மாறி மாறி அல்லல் படுகிற என்னை போல நீ இல்லாமல் மரணத்தை சுதந்தரித்தவளே ..இனி ஒரு முறை மரணம் என்பது சமரசம் என்று சொல்லாதே ...

"எந்தப்பற்றுகளும் கட்டுகளுமற்ற தனிமையில் மிதக்கிறேன். என் கவிதைகள் எதுவும் எனக்கு ஞாபகமில்லை. பெரும்பாலான என் நினைவுகள் அழிந்துவிட்டன." என்று உன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாயே சில்வியா .... அந்த நிலைக்காக தானே நீ இங்கே வாழும் நாளில் எல்லாம் ஏங்கிக் கிடந்தாய் ...

No spiritual Caesars are these dead;
They want no proud paternal kingdom come;
And when at last they blunder into bed
World-wrecked, 
they seek only oblivion.

கவிதையின் கடைசி வரியில் அந்த நினைவிழந்த நிலைக்கு தானே  ஏங்கி  இருந்தாய் ...நீ விரும்பிய oblivion இப்போது உனக்கு கிடைத்திருக்கிறதே ...அதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா ...உன் மரணம் கவித்துவமற்றது என்று நீ சொல்லலாம் , ஆனால் உன் கவிதையில் நீ எவைகளை புதைத்து வைத்தாயோ அவைகளை உனக்கு மீட்டுக் கொடுத்து அகற்றவியலாத மனதின் வடுக்களை , உதிரம் சொதசொதத்து இருந்த ஆறாத காயங்களை அம்மரணம் இல்லாமல் செய்திருக்கிறது ...இல்லையா சில்வியா ?

உன்னுடைய  கவிதைகள் உனக்கு இப்போது நினைவில் இல்லாமல் போயிருக்கலாம் சில்வியா ... நீ எழுதிய கவிதைகள் நீ சொல்ல நினைத்தைவிடவும் அதிகமாக என்னிடம் பேசுகின்றன ...இறந்தவர்களின் கவிதைகளை படிப்பது  அவ்வளவு சுலபமில்லை . ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையே இருக்கிற இடைவெளி கூட பிரிவை நினைவூட்டி கதறி அழவைத்துவிடும் . உன் கவிதைகளில்  நீ கையாண்டிருக்கிற முற்றுப் புள்ளிகள் கூட எனக்கு உன் மரணத்தையே நினைவூட்டுகிறது ....ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் புரிந்தவனாய்  நீ முன்னம் வாழ்ந்த காலத்தில் நானும்  உறைந்துவிடுகிறேன் . உன் கவிதைகளை  நான் மறப்பதற்கில்லை 

உன்  நரம்புகளையும் எலும்புகளின் மையங்களையும் அரித்துக் கொண்டிருந்த எழுத்துக்களையும், சீழ்பிடித்த உன் ரத்தத்தின் ஓடுபாதைகளில் தேங்கியிருந்த சொற்களையும் சதைகிழித்து  பிய்த்து எடுத்து  கவிதைகளாக்கிவிடவாவது  தெரிந்திருந்தது உனக்கு . அதற்கும் வக்கற்றவன் நான் ...  கழிவறைக்குள் புகுந்துகொண்டு கைக்குட்டையை கடித்தபடி அழுது தீர்க்கிறேன் சில்வியா .... இப்போதைக்கு என் சொற்களையெல்லாம் நான் அழுதழுதே தீர்க்கிறேன் ....

நீ இறந்த பின்பும் உயிரற்ற  உன் சாப உடலை பார்த்துக் கொண்டிருந்ததாக சொன்னாயே , அப்பொழுது பிதுங்கிய விழிகளின் ஓரங்களில் கசிந்த ரத்தம் உன் முகத்தில் அதி சௌந்தர்யமான ஒரு ஓவியத்தை வரைந்திருந்தது என்று நீ சொல்லக் கேட்டபின் , என் மூக்கில் எப்போதவாது வழிகிற ரத்தம் அழகிய ஓவியம் போலவே  இருக்கிறது, விளங்கிக் கொள்ளமுடியா நிக்கலஸின் அந்த ஓவியத்தில் வழிந்த குருதியை போலவே இருக்கிறது. வழியும் குருதியை துடைக்கும் பிரக்ஞயற்று நானும் அதை ரசிக்கத் தொடங்கி விட்டேன் சில்வியா  ...

பாறைகளை சுமந்தபடி பயணம் போக சொல்வது ஈரமற்ற செயல் இல்லையா சில்வியா ...அதில் உனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்பது எனக்கு தெரியும் . உன் இருண்மைக்குள் என்னையும் அனுமதிப்பாயா சில்வியா ...நினைவுகளின் நாற்றமற்ற உன் வியோமத்தில் என்னையும் அனுமதிப்பாயா சில்வியா ... நீ ஆசுவாசித்து கிடக்கிற தனிமைக்குள் என்னையும் சேர்த்துக் கொள்வாயா சில்வியா ...உனக்கு என் மீது பிரியங்கள் அதிகம் . உன் கண்களில் எப்போதும் சோகம் சொட்டுகிறது என்றே பலரும் சொல்கிறார்கள் . எனக்கென்னவோ உன் கண்கள் கருணைமயமானவை என்றே தோன்றுகிறது . என்னை உன் நிச்சலன வெளிக்குள் அனுமதிக்க உனக்கு தடையொன்றும் இருக்கப் போவதில்லை .

ஆன் செக்ஸ்டன்  என்னிடம் கேட்டிருந்தாள் . உனக்கு சில்வியா நெருங்கிய தோழியா என்று. நான் சொன்னேன் ,  எனக்கும் அவளுக்குமான  இந்த  வாத்சல்ய அன்புக்கு நாங்கள் எந்தப் பெயரையும் சூட்டி இருக்கவில்லை . அவள் எனக்கு அம்மா என்றோ , மகள் என்றோ , காதலி , தோழி என்றோ எந்த பெயருக்குள்ளும் நான் அவளை அடைக்கவிரும்பவில்லை . எங்கள் அன்பு பெயர்களை கடந்தது .

அன்பு செலுத்தவும் பெற்றுக் கொள்ளவும் பெயர் ஒரு அவசியமா சில்வியா ...? இன்னென்ன பெயர் கொண்ட உறவுக்குத்தான் நேசத்தின் அளவை கூட்டியோ குறைத்தோ பரிமாறுவோம் என்று சொல்வது எவ்வளவு அபத்தம் . ஆனால் அந்த அபத்தம் தான் இங்கே மீண்டும் மீண்டும் நிகழ்த்தப் படுகிறது . சரி விடு , அபத்தங்களையும் அனர்த்தங்களையும் மறந்து நீ ஆழ் இருளில் சஞ்சரித்துக் அனந்தலாய் கிடக்கிறாய் . உனக்கு  இம்மனிதர்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி  உன் கனவுகளற்ற சயனத்தை கலைக்க  எனக்கும் விருப்பமில்லை . 

நான் எழுதியவைகள் மட்டுமல்லாமல் நான் எழுதாதவைகளும் வாசித்தவள் நீ என்று சொல்லிக் கொண்டாய் . தப்பும் தவறுமான என்னை வாசிக்க நீ ஒருத்தி எப்போதும் இருக்கிறாய் என்பது எனக்கு தெரியும் . நீ என்னை கைவிடுவதில்லை . அழுது தீர்த்த நேரம் போக , எழுதிதீர்க்கவே விரும்புகிறேன் .நான் தொடர்ந்து உன்னை கடிதங்களில் வந்தடைவேன் சில்வியா ...அதுவரையில் என் தூய முத்தங்களை உன் தலைக்கு வைத்து உறங்கு என் நேய உயிரே சில்வியா ....


க.உதயகுமார் 
06-Dec-13 

1 comment:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

    வலைச்சர தள இணைப்பு : நிரம்பி வழியும் வெற்றிடம்

    ReplyDelete