Monday 30 December 2013

காற்றில் கலந்துவிட்ட இயற்கை காதலன் நம்மாழ்வார்



இயற்கையை நேசிக்கிறவன் இன்பமாக வாழுகிறான் . அவனுக்கு பரமானந்தம் இங்கேயே வாழும் காலத்திலேயே கிடைத்துவிடுகிறது என்பதை இயற்கை  விஞ்ஞானி  நம்மாழ்வாரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளலாம் .

"செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும்." என்ற அவரின் கூற்று எத்தனை உண்மையானது . ஆனந்தவிகடனில் ஒரு முறை இதை படித்துவிட்டே நான் சென்னையில் தங்கி இருந்த வீட்டின் பால்கனியில் தொட்டிச் செடிகளை வளர்க்க ஆரம்பித்திருந்தேன் . வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு "தொட்டிச் செடிகள் " தானே விதிக்கப் பட்டிருக்கிறது . காலையில் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , சில நேரங்களில் அவைகளோடு பேசுவது என நம்மாழ்வார் சொன்னது போல செடி ஒன்றை வளர்ப்பது மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியை விதைக்க வல்லது .

வேளாண் துறையில் பட்டம் பெற்று நம்மாழ்வார் ஒரு அரசு பணியில் சேர்ந்தாலும் , பொருளீட்ட அல்ல நான் படிப்பை படித்தது என வேளாண் சார்ந்த விவசாய விழிப்புணர்வுக்கு  தன்னை அர்ப்பணித்தவர் . நம்மாழ்வார் இல்லாமல் போயிருந்தால் , வேப்பிலை நமக்கு உரிமையானது இல்லை . ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வேப்பிலைக்கான  காப்புரிமையை நமக்கு மீட்டுக் கொடுத்தவர் நம்மாழ்வார் .

திருக்குறளை விவாசய விழிப்புணர்வுக்கு இவர் அளவுக்கு வேறொருவர் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள் . திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் , அரசியல் இலக்கியம் என்று மட்டுமில்லாமல் அது மக்களின் வாழ்க்கைமுறைக்கும் உணவு முறைக்குமான இலக்கியமாக அடையாளப் படுத்தியதில் நம்மாழ்வாரின் பங்கு மிகப் பெரியது . 

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை’

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்’  

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்."

என்றெல்லாம் இவர் எடுத்தாண்ட திருக்குறள்களின் மூலமாக தான் சொல்லவருகிற செய்தி எவ்வளவு முக்கியமானது என ஆதாரப் பூர்வமாக நிறுவ விரும்பியவர் நம்மாழ்வார் . 

காடும் , அதன் வழியாக பெருகும் நீருமே  மக்களுக்கு முக்கிய பாதுகாப்பு . ஆனால் மரங்களை வெட்டி காட்டை அழித்து வெறும் ரோடு போட்டே முன்னேறிவிடலாம் என்று சொல்கிற இம்மக்கள் முட்டாள்கள் என்று சொன்ன நம்மாழ்வாரின் வாதம் அசட்டயானது அல்ல . 

தன் செயல்பாடுகள் மூலமும் , விழிப்புணர்வு மூலமும் எத்தனையோ இளைஞர்களுக்கு விவாசயத்தின் மீது காதல் வர காரணமாயிருந்தவர் . அனேக விவசாயிகளை இயற்கை வேளாண் பக்கம் திருப்பியவர் . என் முப்பாட்டன் முடிதிருத்தும் தொழில் செய்தார் . என் பாட்டன் அதையே பின்பற்றினார் . அப்பா படித்து அரசாங்க வேலையில் கிடந்தார் . இப்படியான விவாசயத்தின் பக்கம் தலைவைத்திராத என்னை போன்றவர்களை கூட "நான் சொல்வதை கேளுங்கள் ..." என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் . விவசாயத்திர்க்கென கைப்பிடி நிலம் இல்லாத நான் நம்மாழ்வாரின் "உழவுக்கும் உண்டு வரலாறு " , "தாய் மண்ணே வணக்கம்" , "நோயினைக் கொண்டாடுவோம்" , "எந்நாடுடையே இயற்கையே போற்றி " , "களை எடு " என அவர் எழுதிய புத்தகங்களை காதலோடு வாங்கிப் படிக்க வைத்தவர் .  இவைகளை பற்றி நண்பர்களோடு அனேக கூட்டங்களில் விவாதிக்கவும் செய்திருக்கிறோம் .  

நம் மண்ணில் விளைகிற பொருட்களே நம் உடம்புக்கு ஏற்றது என தெளிவாக சொல்லிப் போனவர் . ஆப்பிளை காட்டிலும் கொய்யாக் கனிகளே நம் உடம்புக்கு இனிய நண்பன் என்று நம்மாழ்வார் சொல்லும்போது மண்டையில் ஏறியது . நெல்லிக்காய்களில் இல்லாத ஊட்டச்சத்துக்கலையா பிற இறக்குமதி செய்யப் பட்ட பழங்களில் கண்டுவிட்டீர்கள் என்று இவர் சொன்ன பிறகு நம் மண்ணில் காய்கனிகள் நமக்கு அருமருந்து என்பது புரிந்தது . ஆலிவ் எண்ணைக்கும் நம் மண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? எள்ளில் இருந்து நாம எடுக்கிற நல்லெண்ணெய்  போன்ற வரபிரசாதம் கிடைத்தும் நாம் அவைகளை புறந்தள்ளி விளம்பரங்களில் மோகம் கொண்டு பொய்யான கவுரவத்துக்கு உணவு முறைகளை மாற்றிக் கொள்கிறோம் என்று நம்மாழ்வார் சொன்ன போது மனம் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டது . 

இங்கே ஆயிரம் அரசியல் வாதி செய்ய முடியாததை நம்மாழ்வார் சாதித்துக் காட்டினார் . மெத்த படித்த மேதாவி பிரதமர் ஒருவர் "விவாசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ள வேண்டும் " என்று சொன்ன பொழுது , விவசாயத்தை கைவிடுகிற நாடு தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று சம்மட்டியால் அடித்தார் .  தொழிற்சாலைகளுக்கு விலை நிலங்களை அரசுகள் ஒதுக்கீடு செய்த பொழுது , "கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும். மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கும் தவிர, வேறு எதற்கும் கிராமத்தின் நிலத்தை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், வேறு ஏதோ ஆதாயம் கருதி செய்கிறார்கள் என்று அர்த்தமே தவிர நாட்டு நலனுக்காக செய்வதற்காக அல்ல"  என்று துணிச்சலாக ஆளுகிறவர்களின் மக்கள் விரோத போக்கை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் .  கூடங்குளம் அணு உலை வருவதே தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்றத்தான் என சில "திடீர் விஞ்ஞானிகள்" ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேட்டியாய் கொடுத்துக் கொண்டிருந்தபொழுது , "இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றி மக்கள் தலைக்கே நீங்கள் கொல்லி வைக்கப் போகிறீர்கள் " என இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக நின்ற போராளி நம்மாழ்வார் ..

வெளிநாட்டு விதைகளை , வெளிநாட்டு பூச்சிக் கொல்லி மருந்துகளை எல்லாம் "பசுமை புரட்சி" என்ற பெயரில் இந்தியாவுக்குள் கொண்டுவந்தவரை கொண்டாடிய அரசுகள் விருது கொடுத்து கவுரவித்த அரசுகள் எங்கள் நம்மாழ்வாரை மட்டும் தொடர்ந்து புறக்கணித்தது . தன பாக்கெட்டுக்கு ஆதாயம் இல்லாமல் இது வரை எந்த அரசுகள் இன்னொருவரை அங்கீகரித்திருக்கிறது ? அதிலும் "இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?"  என்று சட்டையை பிடித்து கேள்விக் கேட்கிற விஞ்ஞானியை  எந்த அரசுகள் தான் விருதுகளால் கௌரவப்படுத்தும் ? மரபணு மாற்றம் செய்யப் பட்ட "பிடி கத்திரிக்காய்களுக்கு" இந்தியா தன் கதவுகளை அகலமாக திறந்து விட்ட பொழுது  , "அந்த விதைகள் நம் குடலுக்கும் ஏற்றதில்லை , நம் நிலத்துக்கும் ஏற்றதில்லை " என விவசாயிகளுக்கு புரியவைத்து அவர்களை ஒன்று திரட்டி போராட்ட களத்துக்கு கூட்டி வந்தவரை அரசுகளுக்கும் முதாளித்துவ முதலைகளுக்கும் எப்படி பிடிக்கும் ..?  இவர்கள் விருதுகளை கொடுப்பதற்கு பின்னணியில் எல்லாம் மிகப் பெரிய அரசியல் இருக்கிறது என்பது நமக்கு தெரியாதா என்ன ?  

சச்சின் டெண்டுல்கர் செய்தது எவ்வளவு பெரிய சாதனை . இந்த மண்ணை மக்களை தன் ரன் குவிப்பால் எவ்வளவு மெருகேற்றி இருக்கிறார் . அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க இங்கே எத்தனை விவாதங்கள் , நாடாளுமன்றமே கூடி ஒரு நாள் விவாதிக்கிறது . அவருக்கு விருது கிடைக்கவும் அவரை MP ஆக்கி மக்களுக்கு உழைக்கவும் !?!? வாய்ப்பு கொடுத்த அரசாங்கங்கள் , நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானியை அவர் தன் வாழ்வு முழுக்க  இந்த மண்ணுக்காக மக்களுக்காக குரல் கொடுத்த விடயங்களை காதில் வாங்கிக் கொள்ள கூட தயாராக இல்லை என்பது தான் பெருத்த வேதனைக்குரிய விடயம் .   மத்திய அரசு "ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்" என்ற தனியார் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து கொண்டு காவிரி படுகை நிலத்தில் மீத்தேன் வாயுவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டதும் , " இது மட்டும் நடந்தால் , காவிரிப் படுகை உப்பளமாக மாறும், வங்கக் கடல் நீர் விவசாய நிலத்தை ஊடுருவும்  " என்று தள்ளாத வயதிலும் தெருவில் இறங்கி போராடினார் . எங்கள் மண்ணின் மூத்த விஞ்ஞானிக்கு போதிய அங்கீகாரத்தை அரசுகள் வழங்கவில்லையே என நாம் கவலைபடுகிறோமே  ஒழிய ,  நம்மாழ்வார் விருதுகளை எதிர்நோக்கி எப்போதும் காத்திருந்ததில்லை . மக்கள் நலன் சார்ந்து மண் நலன் சார்ந்து தன் காலத்தை  எல்லாம் கரைத்து ஆய்வு செய்து தான் வைத்திருக்கும் திட்டங்களுக்கு கொஞ்சம் செவி சாயுங்கள் என்பது தான் நம்மாழ்வாருக்கு இந்த மத்திய மாநில அரசுகளிடம் இருந்த அதிகபட்ச எதிர்பார்ப்பு .ஆனால் மனிதம் போற்றும் இவ்விஞ்ஞானியை எப்போதும் அரசுகள் செவி கொடுத்து கேட்டதில்லை என்பது எவ்வளவு துரதிர்ஷ்ட்டமானது . 

"உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு"  என்ற பாரதியின் வரிகளை இன்னும் இன்னும் சத்தம் போட்டு பாடி விவாசய பெருங்குடிகளுக்காக வாழ்நாளெல்லாம் வருத்தப் பட்ட  மகோன்னத  ஆன்மா  இன்றைக்கு  காற்றில் கரைந்துவிட்டது . "இங்கே எப்போதும் எளிய மக்களுக்கு எதிராக அநீதியை கட்டவிழ்விக்கவே பணம் படைத்தவன் அதிகாரம் கொண்டவன் தன் வாழ்நாளை செலவு செய்கிறான் " என இன்றைய சமூகத்தின் கசப்பான உண்மையை கிராமங்களில் வேர்கொண்ட மனிதர்களுக்கு புரியவைக்க வாழ்வெலாம் பாடுபட்ட எங்கள் இயற்கை நேசன் இயற்கையோடு சேர்ந்துவிட்டார் .  

நம் மண்ணுக்கும் ,மரம் செடி கொடிகளுக்கும்  , வாயில்லா பிராணிகள் அத்தனைக்கும் ,  மக்களுக்கும் ஈடுசெய்யவே முடியாத பெரிய இழப்பு , நம்மாழ்வாரின் மரணம் . இறந்தவர்களை "இயற்க்கை அடைந்தார் " என்று சொல்கிற வழக்கம் உண்டு . எனக்கென்னவோ அந்த வாக்கியம் அது நம்மாழ்வாருக்கு இன்னும் கச்சிதமாக அர்த்தத்தோடு பொருந்துவதாக தோன்றுகிறது .

நம்மாழ்வார் இயற்கையை அடைந்திருக்கிறார் . சோற்றில் கைவைக்கும்போதேல்லாம் உம்மை நினைத்துக் கொள்வோம் எங்கள் மண்ணில் விளைந்து எங்கள் மண்ணுக்கே உரமான ஆழ்வாரே .....


வெறும்  கண்ணீர்த்துளிகளையும் சம்பிரதாய இரங்கல் கூட்டங்களையும் , அடையாள மலர்வளையங்களையும்  அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் .மரங்களையும் மண்ணையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றிப் பாதுகாப்பதே இந்த அரசும் மக்களும் நம்மாழ்வாருக்கு செய்யவேண்டிய உண்மையான அஞ்சலி . 

--க.உதயகுமார் 

4 comments:

  1. மரங்களையும் மண்ணையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றிப் பாதுகாப்பதே இந்த அரசும் மக்களும் நம்மாழ்வாருக்கு செய்யவேண்டிய உண்மையான அஞ்சலி .

    உண்மை... அருமையான பகிர்வு...

    ReplyDelete
  2. ஆத்மாத்தமான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. நான் நம்மாழ்வாரின் சீடனாகி அவரின் புகழ் பரப்பப்போகிறேன்..

    ReplyDelete