Wednesday, 29 January 2014
Tuesday, 14 January 2014
பிரியத்திற்குரிய ஆன் செக்ஸ்டன் , உனக்காக நண்பன் காத்திருக்கிறேன் !
பிரியத்திற்குரிய ஆன் செக்ஸ்டன் ,
நான் உதயகுமார் எழுதுகிறேன் . நேற்று தான் உன்னுடைய தோழி சில்வியாவுக்கு கடிதம் எழுதினேன் . அவளிடம் இருந்து எனக்கு இன்னும் பதில் வரவில்லை . உனக்குத் தான் தெரியுமே சில்வியா எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பாள் . அவள் சிந்தனை பரவெளியில் இருந்து கீழிறங்கி வந்தபின்னால் எனக்கு பதில் எழுதக் கூடும் .
நான் இப்போது டவுனிங்டவுன் நகரத்தில் தான் இருக்கிறேன் . குளிர்காலம் துவங்கிவிட்டது ஆன் . மரங்களெல்லாம் உருவிழந்து போய் நிற்கின்றன . வாழ்ந்து கெட்ட குடும்பங்களை பார்ப்பதை போல பொலிவிழந்த இம்மரங்களை பார்ப்பது மிகவும் வேதனையளிக்கிறது . இன்று காலை நான் உனக்கு மிகவும் பிடித்த மார்ல்போரோ புகைத்துக் கொண்டு இருந்தேன் . வானம் இருட்டிக் கொண்டு இருந்தது .எனக்கு உன்னுடைய கவிதை வரி நினைவுக்கு வந்துவிட்டது "Oh the blackness is murderous ".... மந்தாரமான அந்த சூழல் இயல்பாகவே உன் நினைவை தருகிறது ஆன் .
உன்னோடு பேசவேண்டும் போல் இருந்தது . அதனால் தான் இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் .எனக்கு எப்போதும் உனக்கும் சில்வியாவுக்கும் ஆன ஒற்றுமையை நினைத்து வியந்திருக்கிறேன் ஆன் . மாசசூசெட்ஸ் மாநிலத்தில் தான் நீயும் பிறந்தாய் சில்வியாவும் பிறந்தாள் . அதிலிருந்தே உங்கள் இருவருக்குமான ஒற்றுமை பல விஷயங்களில் நிகழ்ந்து உங்களின் மரண விடுதலை வரைக்கும் தொடர்ந்திருக்கிறது ...நீ அவளை தொடர்ந்தாயா இல்லை அவள் உன்னை தொடர்ந்தாளா ...?
ஒரே வித்யாசம் அவள் சிறுவயதில் இருந்தே கவிதைகள் எழுதுகிறவளாக இருந்தாள் . நீயோ உன்னுடைய மன நல மருத்துவர் ஓர்ன் சொல்லி எழுதத் தொடங்கினாய் ...எப்படி இருந்தாலும் உங்கள் இருவரின் கவிதையிலும் விடாமல் கேட்கும் அந்த ஓலம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் ஆன் . அதிலும் " I will kiss you when I cut up one dozen new men and you will die somewhat, again and again. " என்ற வரிகளில் ரத்தம் தெறித்து என் உதடுகளில் முத்தமிட்டதாகவே நினைத்துக் கொள்வேன் ஆன் .
உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும் . சில்வியாவும் நீயும் உங்களின் முதல் தற்கொலை முயற்சியை பற்றி நிறைய நாட்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று சில்வியா என்னிடம் சொல்லியதுண்டு . அப்போது சில்வியா எப்படி பேசி இருப்பாள் என்று என்னால் யூகிக்க முடிகிறது . ஆனால் அவளின் முதல் தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததை பற்றி அவள் வருத்தமுற்று அழுதாளா ஆன் ? எனக்கு சில்வியா அழுதால் மனசுக்கு வலிக்கிறது ஆன் . நீ அழுதாலும் ...
பேராசிரியர் லோவலின் கவிதை பட்டறையில் நீ தானே சில்வியாவை பெண்களின் பார்வையில் அவள் வாழ்வின் வலியை எல்லாம் எழுதச் சொன்னவள் . ஒரு விதத்தில் அது நீ அவளுக்கு செய்த நல்லது ஆன் . கவிதையில் அவள் ஊக்கம் பெறாமல் போயிருந்தால் இன்னும் இன்னும் அவள் துடித்து நொந்திருப்பாள் . சில்வியாவின் கவிதைகள் தான் அவள் முகம் புதைத்து அழுவதற்கான தாய் மடியாக இருந்தது இல்லையா ...நீ செய்த எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இருந்தது ஆன் . "அழுகிய உருளைக் கிழங்கு போல மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது" என்று நீ எழுதியது வரைக்கும் நான் உன்னோடு உடன்படுகிறேன் ஆன்
ஆனால் ஒன்றில் தான் உடன்படமுடியவில்லை . "சில்வியா என்னுடைய மரணத்தை தனதாக்கிக் கொண்டாள்" என்று சொல்லி இருந்தாயே . அதை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . அது அவளுடைய மரணம் ஆன் . சில்வியா அந்த மரணத்திர்க்காகத் தான் எத்தனையோ பாடுகளை சுமந்தாள் . அவள் நீண்டகால தேடலில் கிடைத்த அந்த மரணம் அவளுடையது தான் . அது உன்னுடையதும் இல்லை என்னுடையதும் இல்லை . உனக்கு அப்படி ஒரு காட்சிப் பிழை தோன்றியதாகவே நான் கருதுகிறேன் . ஒரு நாள் மதிய உணவிற்குப் பின் உன் அம்மாவின் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கொஞ்சம் வோட்க்காவை குடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் வோட்க்காவை உன் மீது ஊற்றிக் கொண்டு உன் கார் நிற்கும் அறைக்குள் சென்று கதவை அடைத்து காரை இயக்கி அதில் வந்த கார்பன் மோனாக்சைடை உள்ளிழித்து உன்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்துக் கொண்டாயே அது தான் அது மட்டும் தான் உன்னுடைய மரணம் . சில்வியாவும் நீயும் மரணித்த விதம் கார்பன் மோனாக்சைடின் கருணை என ஒன்றாக இருக்கலாம் , ஆனால் உங்கள் இருவரின் மரணமும் வேறு வேறு . அவளுடையதை அவள் தழுவி இல்லாமல் போனாள் உன்னுடையதை நீ தழுவி விடைபெற்றுக் கொண்டாய் .
நான் எனக்கானதை தான் எடுத்துக் கொண்டு போனேன் என்று சில்வியா எப்போதும் வருத்தத்தோடு இதை சொல்லிக் கொண்டிருந்தாள் . எனவே உனக்கும் அதை புரிய வைக்க முயற்ச்சிக்கிறேன் ஆன் . நீ இறப்பதற்கு முன் குமினுடன் மதிய உணவுக்கு சென்றாய் இல்லையா ...அதற்க்கு முதல் நாள் நானும் குமினும் ஒரு மது விடுதியில் சந்தித்துக் கொண்டோம் . குமின் என்னிடம் சொன்னார் "ஆன் செக்ஸ்டனுக்கு சகிப்புத் தன்மையே இல்லை ...எதற்கெடுத்தாலும் கோவிக்கிறாள் " என்று ...எனக்கு மிகுந்த கோவம் வந்துவிட்டது "ஆன் எதை சகிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் குமின் . அவளை பற்றி இன்னொருமுறை என்னிடம் இப்படி பேசாதீர்கள் . அவளுடைய கவிதைகளை விமர்சியுங்கள் . அவளை விமர்சிக்க வேண்டாம் " என்று என் முன் தளும்பி இருந்த மதுகோப்பையை சாய்த்துக் கொண்டேன் . குமின் என்னையே பார்த்திருந்துவிட்டு "உனக்கும் ஆன் செக்ஸ்டன் போலவே கோவம் வருகிறது " என்று சொன்னார் . நான் பின் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் . உன்னை சந்தித்த பொழுது குமின் என்ன சொன்னார் ..? எதை பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள் ? அவரை சந்தித்துவிட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஏன் நீ உனக்கான முடிவை தேடிக் கொண்டாய் என்று எனக்கு தெரியவில்லை . என்னிடம் பேசாமலே போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் .
சரி விடு . எல்லாம் நடந்த பின்னால் அவைகளை பேசி நாம் என்ன செய்யப் போகிறோம் . நீ ஒரு முறை டவுனிங்டவுனில் இருக்கும் என் வீட்டிற்கு வா ஆன் . நான் புதிதாக நிறைய சிகிரெட்டுகளும் க்லென்லிவெட் மதுவும் வாங்கி வைத்திருக்கிறேன் . உன்னோடு அவைகளை பகிர்ந்துகொள்ள வென காத்திருக்கிறேன் ஆன் . மிதமிஞ்சிய பித்தை கண்களில் சொட்டியபடி நீ புகைக்கும் தோரணையே உன் கவிதைகளை விடவும் அதிக போதை தரும் . ஒரு முறை என்னை சந்திக்க வா ஆன் . பேசுவதற்கென நிறைய இருக்கிறது . எப்போதும் சுவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கும் சலிப்பாக இருக்கிறது . எப்போதாவது பால்கனிக்கு வருகிற அணில் குஞ்சுகள் தான் ஒரே அறுதல் . நீ ஒரு முறை வந்து போனால் எனக்கு இன்னும் ஆசுவாசமாக இருக்கும் . தோழிகளோடு மனம் விட்டு பேசுவது எவ்வளவு இனிமையானது ...
சில்வியா பதில் எழுதினால் நான் உனக்கு தெரியப் படுத்துகிறேன் . நீ வரும்வரைக்கும் காத்திருக்கிறேன் ஆன் . இங்கே ஊர் குளிர்கிறது , என் அறை குளிர்கிறது , தரை குளிர்கிறது தொடுகிற பொருளெல்லாம் குளிர்கிறது , ஆனால் என் மனம் மட்டும் அனலைப் போல தகித்துக் கொண்டே இருக்கிறது ...உன்னோடு பேசினால் , உன் தோளில் சாய்த்து அழுதால் என் மனக் கிண்ணத்தில் அனல் கொஞ்சம் தணிந்துபோகும் . எனவே காத்திருப்பேன் ஆன் . மறக்காமல் வந்துபோ ...
There was a theft.
That much I am told.
I was abandoned.
That much I know.
I was forced backward.
I was forced forward.
I was passed hand to hand
like a bowl of fruit.
நீ வரும்வரைக்கும் உன்னுடைய இந்தக் கவிதையில் தான் புரண்டுகொண்டிருப்பேன் .
என் தீராப் பிரியங்களை எப்போதும் உனக்காக பொழிந்துகொண்டிருப்பேன்
க.உதயகுமார்
Friday, 10 January 2014
தன்னியல்பு
சடசடவென பொழிகிறது
மழை
ஆங்கோர் மரத்தில் கூடிகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை
அடித்து வீசுகிறது
காற்று
மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்துவீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப்போகிறது..?
எது ஒன்றும்
அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது
யாரை குறை சொல்ல முடியும்?
வேண்டாம்
யாரையும் குறை சொல்ல வேண்டாம்
இதோ என் கூட்டின்
மரக்கதவுகளை
கூர் மூக்கால்
சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்தப் பறவைக்கு
யாரேனும் சொல்லுங்களேன்
கதவை மூடிக்கொண்டு
அழுவது என்னியல்பென
மழை
ஆங்கோர் மரத்தில் கூடிகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை
அடித்து வீசுகிறது
காற்று
மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்துவீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப்போகிறது..?
எது ஒன்றும்
அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது
யாரை குறை சொல்ல முடியும்?
வேண்டாம்
யாரையும் குறை சொல்ல வேண்டாம்
இதோ என் கூட்டின்
மரக்கதவுகளை
கூர் மூக்கால்
சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்தப் பறவைக்கு
யாரேனும் சொல்லுங்களேன்
கதவை மூடிக்கொண்டு
அழுவது என்னியல்பென
Thursday, 9 January 2014
நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்
இன்றுடைந்த மரப்பாச்சியை
சேர்த்துவைக்கிறேன்
நாளைக்கு எப்படியாகிலும் சரி செய்ய வேண்டும்
பின்னொரு நாளில்
துளி துளியாய்
உதிரம் பூக்கும்
என் சதைக் கீறலை
அன்பொழுக நக்கிவிட
எனக்கு அம் மரப்பாச்சி தேவைப்படலாம் இல்லையா ?
உதாசீனப் படுத்தப்பட்ட பிரியங்களை
பின்னொரு நாளுக்கென
எடுத்துவைக்க வேண்டும்
ஒரு தற்கொலை முடிவு
தூக்க மாத்திரைகளை
எண்ணிக் கொண்டிருக்கும் போது
அப்பிரியங்கள்
என் மதுக் குடுவையை போட்டுடைக்கலாம் இல்லையா?
இக்கணத்தின்
அதிருப்திகளை
விஷம் ஒத்த வார்த்தைகளை
எஞ்சிய கண்ணீரை
நாளைக்கென சேமித்தால் என்ன ?
இக்கணம் வாத்சல்யமாக நீளட்டுமே
சேர்த்துவைக்கிறேன்
நாளைக்கு எப்படியாகிலும் சரி செய்ய வேண்டும்
பின்னொரு நாளில்
துளி துளியாய்
உதிரம் பூக்கும்
என் சதைக் கீறலை
அன்பொழுக நக்கிவிட
எனக்கு அம் மரப்பாச்சி தேவைப்படலாம் இல்லையா ?
உதாசீனப் படுத்தப்பட்ட பிரியங்களை
பின்னொரு நாளுக்கென
எடுத்துவைக்க வேண்டும்
ஒரு தற்கொலை முடிவு
தூக்க மாத்திரைகளை
எண்ணிக் கொண்டிருக்கும் போது
அப்பிரியங்கள்
என் மதுக் குடுவையை போட்டுடைக்கலாம் இல்லையா?
இக்கணத்தின்
அதிருப்திகளை
விஷம் ஒத்த வார்த்தைகளை
எஞ்சிய கண்ணீரை
நாளைக்கென சேமித்தால் என்ன ?
இக்கணம் வாத்சல்யமாக நீளட்டுமே
Wednesday, 8 January 2014
கேட்பாரற்ற துயரின் குரல்
ஆதிமனத்தின் புனைவாக
அக்குரல்
சன்னமாக புறப்பட்டு
பின் காற்றின் நாவால் துலக்கமடைகிறது
யுகம் யுகமாய் பயணப்பட்டும்
நீர்த்துப் போகாமல்
உயிர்த்திருக்கிறது
செதிலேரிய தொண்டையின்
அவலஒலி
மீளாவலியுற்று
நடுகைப்பொழுதில்
அலறும்
துணையற்ற ஆணொருவனின்
பரிச்சயமான குரல் போலவே
எனக்குத் தெரிகிறது
காற்றில்
அவ்வளவு வெம்மை ...
அத்தனித்த இதயத்தின்
துயர கானம்
நீண்டு நீண்டு நீளும்
மகாகாலத்தின் சுவர்களில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
உங்கள் செவிகளோ
மூடியே கிடக்கின்றன
உதிரத்தின் புளித்த சுவை
உங்களுக்கும் பிடிக்குமென்றால்
அநாதிகாலமாக நீளும்
அந்நெடுங்குரலின் மிகுதுயரள்ளி
மிடறு மிடறாய்
பருகிக் களிப்போம்
என்னோடு வருகிறீரா ?
அக்குரல்
சன்னமாக புறப்பட்டு
பின் காற்றின் நாவால் துலக்கமடைகிறது
யுகம் யுகமாய் பயணப்பட்டும்
நீர்த்துப் போகாமல்
உயிர்த்திருக்கிறது
செதிலேரிய தொண்டையின்
அவலஒலி
மீளாவலியுற்று
நடுகைப்பொழுதில்
அலறும்
துணையற்ற ஆணொருவனின்
பரிச்சயமான குரல் போலவே
எனக்குத் தெரிகிறது
காற்றில்
அவ்வளவு வெம்மை ...
அத்தனித்த இதயத்தின்
துயர கானம்
நீண்டு நீண்டு நீளும்
மகாகாலத்தின் சுவர்களில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
உங்கள் செவிகளோ
மூடியே கிடக்கின்றன
உதிரத்தின் புளித்த சுவை
உங்களுக்கும் பிடிக்குமென்றால்
அநாதிகாலமாக நீளும்
அந்நெடுங்குரலின் மிகுதுயரள்ளி
மிடறு மிடறாய்
பருகிக் களிப்போம்
என்னோடு வருகிறீரா ?
Subscribe to:
Posts (Atom)