பிரியத்திற்குரிய சில்வியா ,
நீ விடுதலை அடைந்த பிறகு இப்போது எப்படி உணர்கிறாய் ?
என்ன இவன் நலன்களை விசாரிக்காமல் எடுத்த உடனேயே கடிதத்தை இப்படி துவக்குகிறான் என்று நினைக்கிறாயா ? உனக்கோ எனக்கோ அவைகளை பற்றி பேசி என்ன ஆகப் போகிறது . நீ முன்பொரு முறை உன் காரை வேகமாக ஓட்டிச்சென்று மோதி தற்கொலைக்கு முயன்றாயே அதன் பிறகு உன்னை நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தேன் . "சில்வியா நீ நலமாக இருக்கிறாயா ?" என்று கேட்டபொழுது உன் உதடுகள் வறண்டு சுருங்கிக் கிடந்தன . உன் கண்களில் எந்த ஒளியுமின்றி அவை என்னை வெறித்துப் பார்த்தது . அதிலிருந்தே உன்னிடம் "நீ நலமாக இருக்கிறாயா " என்று நான் கேட்பதில்லை .
எப்படியாவாது சாவை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று சதா முயன்று கொண்டிருக்கிறவளை , வாழ்தலின் கணங்கள் கழுத்தை நெரிப்பதாக தூக்கத்தில் அலறிதுடிக்கிறவளை நான் "நலமாக இருக்கிறாயா " என்று கேட்பதைவிட ஒரு அபத்தம் உண்டா .... நீ நலமாக இருக்கிறாயா என்று எப்போதும் கேட்கமாட்டேன் சில்வியா .
உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை . அப்போது நீ மயக்கத்தில் இருந்தாய் . உனக்கு இருபது வயதிருக்கும் அப்பொழுது . நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு சாவகாசமாக உன் வீட்டின் நிலவறைக்கு சென்று படுத்துக் கொண்டாய் . நான் அப்போது உன்னை பின்தொடர்ந்தேன் . மிகுந்த அழகோடு நீ இருந்தாய் . சாவதற்கு முன்னால் அழகு மிளிரும் என்று எனக்கு தோன்றியது . நான் உன் அருகில் தான் இருந்தேன் . எனக்கு விடுதலை வேண்டும் விடுதலை வேண்டும் என்று தான் கடைசியாக நீ முனகிய வார்த்தைகள் . உன் தலையை எடுத்து என் மடி மீது கிடத்திக் கொண்டேன் . உன் முகத்தில் வியர்வைகள் பூக்கத்தொடங்கியபோழுது அவைகளை துடைத்துவிட்டு நானுனக்கு ஒரு பாடல் பாடினேன் ....
லா லா லா லா லா லா பூவொன்று உடல் உதிர்ந்து பூமியை நீங்கும் பின்னொருநாள் நானும் பின்தொடர்வேன் சில்வியா லா லா லா லா லா லா
நான் பாடிக்கொண்டிருந்தபொழுதே நீ வாந்தி எடுத்தாய் . எனக்கு அப்போதே தெரிந்தது நீ பிழைத்துக் கொள்வாய் என்று ...
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ நீ துர்பாக்கியசாலி சில்வியா நீ துர்பாக்கியசாலி சில்வியா லா லா லா லா லா லா
என்று நான் மீண்டும் பாடத் தொடங்குகையில் உன்னை கண்டுபிடித்துவிட்டார்கள் . அவர்கள் உன்னை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிய பொழுது எனக்கு என்னவோ அவ்வளவு அழுகையாக வந்தது . உன் வலி இன்னதென்று எனக்கு புரிந்திருந்தது சில்வியா ...நான் முகத்தில் அறைந்து கொண்டு தரையில் விழுந்து அழுதேன் . உனக்கு இது நினைவிருக்காது . நீ அப்போது மயக்கத்தில் இருந்தாய் . நான் எப்போதும் உன்னிடம் நலமாக இருக்கிறாயா என்று கேட்கவே மாட்டேன் சில்வியா ....அந்த கேள்வியை எதிர்கொள்வது உனக்கு கூடுதல் சித்ரவதையாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்தானே ...
உனக்கு இன்னொன்று தெரியுமா சில்வியா உன் மகன் நிக்கலஸ் தூக்கிட்டுக் கொண்டான் . என்னிடம் அவன் காரணம் எதையும் சொல்லவில்லை . எப்போதும் மன அழுத்தத்தில் இருந்தான் . அவனுடைய சடலத்தை கீழிறக்கும் போது அவனும் அத்தனை அழகாக இருந்தான் . ஒரு குளிர்காலத்தில் இரவில் நான் அவனுக்கு காப்பிப் போட்டு கொண்டுவந்தேன் . இந்த காப்பி இனிக்கிறது எனக்கு கசப்பாக போட்டுக் கொடு உதயா என்று கேட்டான் . சரி என நானும் கசப்பை கூட்டி தயார்செய்து கொடுத்தேன் . ஆனால் நிக்கலசோ இன்னும் கசப்பை கூட்டு கசப்பை கூட்டு என்று அழத் தொடங்கிவிட்டான் . எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை . சமயலறையில் இருக்கும் கத்தியில் என் கையை கிழித்து இரண்டு சொட்டு ரத்தம் கலந்தேன் . அப்போது நிக்கலசுக்கு அந்த காப்பி மிகவும் பிடித்திருந்தது . ருசித்து ருசித்து குடித்தான் . உன் மகன் நிக்கலஸ் உன்னைபோலவே கசப்பு சுவை விரும்புகிறவனாகவே இருந்தான் . ஆனால் எப்போதும் மன அழுத்ததிர்க்கான காரணத்தை அவன் என்னிடம் சொல்லவே இல்லை . அவன் மரணித்த பிறகு தாயின் தற்கொலை தான் நிக்கலசை கொன்றது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் . நான் அதை கிஞ்சித்தும் நம்பவில்லை சில்வியா ....
நிக்கலஸ் இறந்த பிறகு நான் அந்த வீட்டுக்கு போகவில்லை . நீ போயிருந்தாயா சில்வியா ..? சரி எப்போதாவது போனால் நிக்கலஸின் படுக்கைக்கு வலப்புறமாக ஒரு காகிதத்தில் என்னவோ வரைந்து ஒட்டி வைத்திருக்கிறான் . அது எனக்கு இன்னதென்று புரியவே இல்லை . நீ பார்த்து எனக்கு விளக்கம் சொல் சில்வியா . நீரற்ற ஒரு நதி . அதில் கவிழ்ந்துகிடக்கிற ஒரு படகு . படகின் மீதெங்கும் ரத்தம் வழிகிறது ....அவன் என்ன தான் அந்த வரைபடத்தில் சொல்ல வருகிறான் என்று எனக்கு புரியவே இல்லை . உன் மகனின் ஓவியம் உனக்கு நிச்சயம் புரியும் . நீ பார்த்து எனக்கு சொல் . நிக்கலஸ் என்னிடம் சொல்ல நினைத்ததை புரிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது .
என்னவோ கேட்க வந்து எதைஎதையோ பேசிக் கொண்டிருக்கிறேன் இல்லையா .....சரி சொல் ...நீ விடுதலை அடைந்த பிறகு இப்போது எப்படி உணர்கிறாய் ?
உனக்கு எப்படி அப்படி தோன்றியது ....? அடுப்பை திறந்து உள்ளே தலையை வைத்துக் கொண்டு எரிவாயுவை திறந்து மெல்ல மெல்ல மரணத்தை உள்ளிழுத்துவிடவேண்டும் என்று உனக்கு எப்படி தோன்றியது ? நான் அன்றைக்கு உன்னோடு அங்கிருந்திருந்தால் உன் இறுதிக் கணங்களை பார்த்திருப்பேன் . உன் வலிகளை எல்லாம் பார்த்திருந்தவன் நீ விடுதலை அடையும் நிமிடங்களை தவறவிட்டேன் என்பது எனக்கு மிகுந்த அழுகையை தருகிறது . அப்போது உனக்கு வலித்ததா சில்வியா . கார்பன் மோனோ ஆக்சைட் நறுமணம் எப்படி இருந்தது ? உனக்கு பிடித்திருந்ததா ...இல்லை நுரையீரலில் வலியுணர்ந்தாயா ....வலித்திருந்தாலும் அது வாழ்தலின் வலியை விட குறைவாகத்தான் இருந்திருக்கும் இல்லையா
இப்போது எப்படி உணர்கிறாய் சில்வியா ....நீ விரும்பிய மரணத்தை எப்படியோ தழுவிவிட்டாய் . உனக்கு பிடிக்கவே படிக்காத வாழ்தலின் பக்கங்களை கிழித்து கிழித்து காற்றில் வீசி மகிழ்ச்சியோடு தீர்ந்துவிட்டாய் ...இப்போது எப்படி உணர்கிறாய் ....
உன்னிடம் யாரேனும் இப்போதும் சொல்கிறார்களா "ஏன் சில்வியா மகிழ்ச்சியான கவிதைகளையே நீ எழுதுவதில்லை " என்று ..? நீ பாக்கியசாலி வாழ்கையில் இருந்து தப்பிக்கும்பொழுது அப்படியான கேள்விகளிடமிருந்தும் தப்பிச் சென்றுவிட்டாய் ... நான் உன்னிடம் சொன்னதே இல்லை ...எனக்கு நீ எழுதியதில் மிகப் பிடித்த கவிதை எது தெரியுமா ..? உன் கணவனை கொலை செய்ய வேண்டும் என்று எழுதி இருப்பாயே அது தான் இப்போதும் என் விருப்பத்திற்குரிய கவிதை ...நான் சமீபத்தில் பாஸ்டன் நகரத்திற்கு போயிருந்தேன் ..காற்றெங்கும் உன் வாசனையாகத் தான் இருந்தது ... ஒரு கருகிய பூவின் வாசனை போன்ற அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..பிறகு அழுதுவிட்டேன் சில்வியா ...
நான் உன்னை சந்திக்க வரும்நாளில் உனக்கும் மிகுந்த கசப்போடு ஒரு காப்பி போட்டு கொண்டுவருகிறேன் ... நிக்கலசுக்கு பிடித்த அதே சுவையில் ... அதற்கு முன் நீ இப்போது எப்படி உணர்கிறாய் என்பதை எனக்கு கடிதமாக எழுது .
நான் காத்திருப்பேன் என் பிரியத்திற்குரிய சில்வியா ..... நிக்கலசுக்கு என் அன்பான முத்தங்களை தெரியப் படுத்து .
க.உதயகுமார்
29-Nov-2013
No comments:
Post a Comment