Sunday 22 September 2013

ஸ்டெல்லா ப்ரூசும் ஆத்மாநாமும்

கவிஞர் தமிழ்நதி "தற்கொலை" பற்றிய ஒரு நிலைதகவலை நேற்று முன்தினம் பதிந்தார் . அதன் பிறகு அவரோடு நடந்த விவாதம் எனக்கு கடந்த  இரவில் ஸ்டெல்லா ப்ரூசையும் ஆத்மாநாமையும்   கொண்டு வந்து அருகே அமர்த்தியது

நான் ஆத்மாநாமை கேள்விப்பட்ட நாள் முதலாய் அவரின் கவிதைகளை வாசிக்க ஆர்வமாக இருந்தேன் . தம்பி அசோக் மூலமாக "ஆத்மாநாம் படைப்புகள் " என்ற புத்தகம் காலச்சுவடில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு , அந்த புத்தகத்தை கடந்த புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு என் நண்பர் சத்தியசீலனோடு   சென்றிருந்தேன் . காலச்சுவடு ஸ்டாலில் சென்று கேட்டபொழுது புத்தகம் தீர்ந்துவிட்டது என்று சொல்லி ஏமாற்றத்தை கொடுத்தார்கள் . அதன் பின் ஆத்மாநாம் பற்றிய தேடலில் புத்தக கண்காட்சியில் கிடைத்தது தான் விருட்சம் பதிப்பகத்தின் "என் நண்பர் ஆத்மாநாம் " . இதை எழுதியது எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸ் . அதுநாள் வரை எனக்கு ஸ்டெல்லா ப்ரூஸ் என்பவரை பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை . இதை சொல்ல வெட்கப் படுகிறேன் .

அதன் பிறகு ஒரு பகல் கடந்து மாலை நேரத்தில் என் நண்பர் ஆத்மாநாம் புத்தகம் படிக்கத் துவங்கினேன் .  அந்த புத்தகம் ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதிய  கட்டுரை தொகுப்பு . அவையெல்லாம் அழகியசிங்கரின் நவீன விருட்சத்துக்கு எழுதிய கட்டுரைகள் . அந்த புத்தகத்தில் ஒரு கட்டுரை தான் "என் நண்பர் ஆத்மாநாம் " . அந்த புத்தகம் முழுவதுமாக படித்து முடித்துவிட்டு மனம் ஆத்மாநாமை விட்டுவிட்டது , ஸ்டெல்லா ப்ரூசை கட்டிபிடித்துக் கொண்டு கதறியது . அந்த மென்மையான மனிதரை , அவர் மனைவியின் மரணத்துக் பின் அவர் எதிர்கொண்ட துயரான வாழ்வை , அதன் தொடர்ச்சியாக அவர் தேடி கொண்ட முடிவை என்னால் எளிதாக கடக்க முடியவில்லை . இடி விழுந்த நிலம் போல மனம் தொடர்ந்து அதிர்ந்து அழுதது . வலிந்து திணிக்கப்படாத உணர்சிகளோடு ஸ்டெல்லா ப்ரூசின் கட்டுரைகள் மனதில் நிரந்தர சித்திரமாக  ஸ்டெல்லா ப்ரூசை வரைந்துவிட்டது .

பின் மனம் கனத்து கசிந்து கொண்டிருந்த ஒரு இரவில் ஸ்டெல்லா ப்ரூசின் நண்பரும் , அவரின் கட்டுரைகளை தொகுத்து "என் நண்பர் ஆத்மாநாம்" என்ற புத்தகமாக வெளியிட்டவருமான அழகியசிங்கர் அய்யாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன் . அவர் எனக்கு எழுதிய பதிலில் ஸ்டெல்லா ப்ரூசின் முடிவு பற்றி நிரம்ப வருத்தியவர் , கூடுதலாக இன்னொரு வரியை சொல்லி  இருந்தார் . "Stella Bruce had done a foolish act in his life like Aatmanam." என்று ...எனக்கு இந்த வரி மனசில் இன்னும் காயங்களை ஏற்படுத்தியது .

அதன் பிறகு தம்பி "அசோக் ராமராஜோடு" , அலுவலகத்தில் கிட்டத் தட்ட  மூன்று  மாதகாலம் நான் அமெரிக்கா கிளம்புகிற வரையில் தினமும் நாங்கள் ஸ்டெல்லா ப்ரூசை பற்றியும் ஆத்மாநாமை  பற்றியும் பேசாதா நாளே இல்லை எனலாம் . அசோக் தம்பி கூட , "அண்ணா...... தற்கொலை பற்றிய  உங்களின் தொடர்ந்த பேச்சு, ஸ்டெல்லா ப்ரூஸ்   ஆத்மாநாம்  பற்றிய உங்களின் வாசிப்பினூடான  நினைவுமீட்டல்கள்  எனக்கு அச்சம் தருகிறது" என்று கூட ஒரு கட்டத்தில் சொல்லத் தொடங்கினான் .

அவர்களின் தற்கொலைகளை நியாயப் படுத்த முடியாது ...அதற்கு நான் முயலவும் இல்லை . ஆனால் அவர்களின் வாழ்வை வாழ்ந்து பார்க்காத நாம் அவர்களின் முடிவை எப்படி விமர்சிக்க முடியும் ? போகிறபோக்கில் முட்டாள் தனமான முடிவு என சொல்வது எப்படி சரியாகும் ...? ஆத்மாநாமின் தற்கொலையும் ஸ்டெல்லா ப்ரூசின் தற்கொலையும் இந்த சமூகத்தின் மீதான புகாரில்லையா ..?

மனச்சிதைவுக்கு உள்ளாகி அருமையான கவிஞனும்  மனுஷனுமான ஆத்மாநாம் ஏன் கிணற்றுக்குள் விழுந்துபோனான் என்பது உங்கள் யாருக்கேனும் தெரியுமா ..? எனக்கும் தெரியாது . ஸ்டெல்லா ப்ரூசிர்க்குத் தான் தெரியும் . நமக்கு காரணங்களை தெரியாது. ஆத்மாநாமின்  மனதை எது சிதைத்தது என்று தெரியாது . ஆத்மாநாமை அழுத்திய  வலி எது என்று தெரியாது . ஆனால் "முட்டாள் தனமாக கிணற்றில் விழுந்தார் " என்று மட்டும் சொல்ல கிளம்பிவிடுவோம் . அடுத்தவருக்கு உபதேசிப்பது எப்போதும் நமக்கு மிக சுலபம் . சிறுநீர் கழிப்பது போல போகிறபோக்கில் எப்போதும் நாம் பிறருக்காக அறிவுரைகள் வைத்திருக்கிறோம் . ஆனால் உதவுகிற கரங்கள் , நிபந்தனையற்ற அன்பை செலுத்தும் மனம் நம்மிடம் இருக்கிறதா ...? கிடையாது ..."என்ன காரணமா  இருந்தாலும்  தற்கொலை முடிவா ?" என்று தான் நமக்கு வாய் வரும் . ஏன்...ஸ்டெல்லா ப்ரூசே ஆத்மாநாமின் தற்கொலையை அப்படி சொல்லி இருக்கிறார் . ஆத்மானம் ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு நெருங்கிய நண்பர் . நமக்குதான் அவர் ஆத்மாநாம் ஆனால் ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு அவர் மதுசூதனன் . அதே போல நமக்குதான் அவர் ஸ்டெல்லா ப்ரூஸ் , ஆனால் ஆத்மாநாமுக்கு அவர் ராம் மோகன் .

ஆத்மாநாமுக்கு ஸ்டெல்லா ப்ரூசை மிக பிடிக்கும் . அன்போடு பெரிய மதிப்பும் வைத்திருந்திருக்கிறார்  . ஸ்டெல்லா ப்ரூஸ் ஹேமாவை திருமணம் செய்துகொள்ள தேர்ந்தெடுத்த தேதி எது தெரியுமா ஜனவரி 18 , அது ஆத்மாநாமின் பிறந்த தினம் . அவர்கள் இருவருக்குமிடையே அத்தனை நேர்த்தியான ஆத்மார்த்தமான நட்பு இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட நண்பரான ஆத்மாநாம்  மனச்சிதைவு அடைந்து மருத்துவமனையில் இருக்கும்பொழுது ஸ்டெல்லா ப்ரூஸ் பார்க்க செல்கிறார் . அவரை பார்த்த மாத்திரத்தில் ஆத்மாநாம் குதிக்கிறார் . இரும்புக் கம்பிகளால் ஆன கதவுகளுக்கு அந்தப்புறம் இருந்துகொண்டு அங்கிருக்கும் ஊழியரிடம் "நான் சொன்னேன் இல்ல என்ன பார்க்க என் நண்பர் வருவார்ன்னு , வந்திருக்கார்ப்பார் கதவ திற ..." . அந்த காட்சியை பார்த்த மாத்திரத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் வாய் பொத்திக் கதறி அழுததும் , அதை பார்த்து எனக்கு ஒண்ணுமில்ல ராம்மோகன் நான் நல்லா இருக்கேன் , அழாதீங்க என்று ஆத்மாநாம் கதறிய இடத்தையும் புத்தகத்தில் கடந்து வருகிற பொழுது எனக்கிருந்த மன நிலை உடைந்தழுதது ..நான் இந்த இடத்தை அசோக் தம்பியோடு ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கையில் அசோக் தம்பி கண்கள் கசிந்ததை நான் கவனித்திருக்கிறேன் . வாசிக்கிற நமக்கு ஏற்படுகிற அதிர்வு , ஆத்மாநாம் இறந்த பொழுது ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு எப்படி இருந்திருக்கும் , தன் பன்னிரண்டு கால நண்பர் இல்லாமல் போனபொழுது ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு இருந்த துயரம் எத்தனை அடர்த்தியாக இருந்திருக்கும் ...

ஆத்மாநாம் வாழ்வில் இருந்து விடைபெற்றது ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு மிகுந்த வலியையும் சமாதனம் செய்ய முடியாத துயரையும் கொண்டு வந்திருக்கிறது . அவரின் கட்டுரையில் நாம் இதை புரிந்து கொள்ள முடிகிறது . "ஆத்மாநாம் என்ற மென்மையான நண்பன் திரும்ப திரும்ப மனச்சிதைவின் தாக்குதல்களுக்கும் தீவிர சிகிச்சைகளுக்கும் ஆளாக நேர்ந்தது சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியாத கொடிய அவலம்தான். மனநல மருத்துவம் ஆத்மாநாம் காலடியில் தோற்று மண்டியிட்டு விட்டது. ஆத்மாநாமை அது மீட்கவில்லை. " என்று வருந்தி கண்ணீர் சிந்துகிறார் . அவரின் தற்கொலையை பற்றி சொல்கிற பொழுது  "தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும். அவை தாங்க முடியாத குரூரமானவை. "  என்று எழுதிய ஸ்டெல்லா ப்ரூஸ் ஆத்மாநாம் இறந்து கிட்ட தட்ட 24 ஆண்டுகள் கழித்து தானும் தற்கொலை செய்துகொண்டாரே . ....எத்தனை துயர் மிகுந்த காலத்தின் கொடிய விசித்திரம் இது.  ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு ஆத்மாநாம் இறந்த பொழுது தெரிந்திருக்கிறது தற்கொலை எல்லாவற்றிற்கும் ஆன முடிவில்லை , மேலும் தற்கொலை செய்துகொள்கிற உடலின் ஆத்மா சாந்தியடையாது என்று ...பின் ஏன் ஒரு சபிக்கப் பட்ட நாளில் தன் மனைவியின் சேலையில் தூக்கு போட்டு இறந்தார் ..? எந்த வலியையும் எந்த வாழ்வையும் நாம் கடக்காத வரையில் முழுமையாக அதை புரிந்துகொள்ள முடியவில்லை . என்னுடைய வலி இன்னதென்று   நீங்கள் கடக்காதவரை அது உங்களுக்கு வெறும் செய்தி தான் ...

நாற்பத்தி ஏழு வயதில் தான் ஸ்டெல்லா ப்ரூஸ் திருமணம் செய்துகொண்டார் . தன் எழுத்தை விரும்பி காதலித்த வாசகியான ஹேமாம்புஜம் என்ற பெண்ணை . அந்த நாற்ப்பத்தி ஏழு வயது வரை ஸ்டெல்லா ப்ரூஸ் பார்த்திராத தனிமையா ..? ஹேமாவை  திருமணம் செய்துகொள்வதற்கு முன் சென்னையில் ஆண்கள் தங்குகிற விடுதி அறையிலேயே தன் வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனியாகவே வாழ்ந்து தீர்த்தவர் . எபோதாவது அந்த தனிமையில் ஆத்மாநாம் என்ற மனிதர் வந்து போயிருக்கிறார் . அப்போதெல்லாம் அந்த தனிமையை பொறுத்துக் கொண்டவர் , அதை கடந்து வாழத் தெரிந்தவர் ஹேமா இறந்த பிறகு அந்த தனிமையை சுமக்கவே முடியாமல் ஹேமாவுக்கு மிக பிடித்த புடவையை எடுத்து தூக்குப் போட்டுக் கொண்டாரே , ஹேமா இல்லாத வாழ்வின் வெற்றிடத்தை ஸ்டெல்லா ப்ரூசின் வலியை  நாமெப்படி புரிந்து கொள்ள முடியும் .?

ஸ்டெல்லா ப்ரூஸ் , தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் உலகத்தின் வாசிப்புக்கு எழுதி வைத்துவிட்டுப் போன கடிதம் படித்திருக்கிறீர்களா ? அந்த கடிதத்தில் அவரே தன் தற்கொலைக்கான காரணத்தை சொல்கிறார்

"ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. தனிமைச் சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது. எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளைத் திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும் போது மரண விடுதலை பெறுகிறேன்.”

இது கடிதத்தின் ஒரு துளி . எனக்கு இந்த கடிதம் தந்த வலியும் வேதனையும் அழுகையும் கொஞ்சமல்ல ...

சிலர் ஸ்டெல்லா  ப்ரூஸ் இறக்க அவரின் வறுமையும் காரணம் என்று தொடர்ந்து சிலர் சொல்கிறார்கள் எழுதுகிறார்கள் . ஆனால் அவரின் நெருங்கிய நண்பரான அழகிய சிங்கர் இதை மறுக்கிறார் . அவர் வறுமையில் இல்லை . அவரிடம் போதிய பணம் நகை இருந்தது . தன்னுடைய மனைவியின் நகைகள் ஏராளமானவற்றை தற்கொலை செய்து கொள்வதற்கு கொஞ்ச நாள் முன்பு   தன் நண்பர் ஒருவரிடத்தில் கொடுத்து திருப்பதி உண்டியலில் போடச் சொல்லி இருக்கிறார் . எனவே அவர் இறந்தது வறுமையில் இல்லை , இதை அவரின் கடிதமும் உறுதிப் படுத்துகிறது . பொல்லாத் தனிமை தனிமை தனிமை இது மட்டுமே அவரை நெருக்கிப் பிடித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கிறது .

ஆத்மாநாமை போலவே ஸ்டெல்லா ப்ரூசும் மென்மையான  மனம் கொண்ட மனிதர் . ராம் மோகன் என்ற தன் பெயரை அவர் ஏன் ஸ்டெல்லா ப்ரூஸ் என்று மாற்றி வைத்துக் கொண்டார் தெரியுமா . அவருக்கு பழக்கமான ஒரு தோழியின் தங்கையின் பெயர் தான்  "ஸ்டெல்லா ப்ரூஸ்" . சென்னை கிண்டி அருகே அந்தப் பெண்ணை ஒரு கும்பல் வன்புணர்ந்து பின் அந்தப் பெண் இறந்தும் போனார் . அந்தப் பெண்ணின் நினைவாகத் தான் தனக்கு அந்தப் பெயரை சூட்டிக் கொண்டார் .

நான் "என் நண்பர் ஆத்மாநாம் " படித்த பிறகு அடிக்கடி ஸ்டெல்லா ப்ரூசின் ஆத்மநாமின் நினைவுகளோடு சுற்றி வந்தேன் , அவர்களின் புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் இல்லை . ஹேமா அம்மையாரோடு ஸ்டெல்லா ப்ரூஸ் நிற்கும் ஒரு புகைப்படமும் , ஆத்மநாமின் கருப்பு வெள்ளை புகைப்படமும் தான் இருக்கிறது . இவைகளை கணிணியில் வைத்துக் கொண்டு அப்படியே வெறித்துக் கொண்டிருப்பேன் . ஸ்டெல்லா எப்படியான செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் . அவரின் பால்ய நாட்களை அவரே விவரிக்க படிக்கும்போது , அபப்டியான ஒருவர் காலத்தின் கரங்களால் எப்படி எல்லாம் பந்தாடப் பட்டு  இல்லாமல் போய்விட்டாரே என்ற அழுத்தம் எனக்கு மனசிக்களை உண்டு பண்ணியது , அன்றைய நாட்களில் தம்பி அசோக்  தான் என்னோடு தொடர்ந்து பேசி என்னை  அதில் இருந்து வெளிய இழுக்க முயற்சித்தான் ....

ஆத்மாநாம் , ஸ்டெல்லா ப்ரூஸ் என்ற இரண்டு படைப்பாளிகளின் மரணத்தை  நியாயப்படுத்த வில்லை , அதே சமயத்தில் "முட்டாள்கள், வாழ்வை எதிர்கொள்ள திராணி இல்லாதவர்கள்  தற்கொலை செய்துகொண்டார்கள் " என்று அவர்களின் கல்லறையை நான் அசுத்தப் படுத்தவும் விரும்பவில்லை .

"என் நண்பர் ஆத்மாநாம் " என்ற கட்டுரையை ஸ்டெல்லா ப்ரூஸ் பின்வருமாறு முடித்திருந்தார் . " ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்…”

தன்னுடைய வாழ்வின் முடிவை ஸ்டெல்லாவின் கைகளும் தற்கொலை என எழுதிக்கொண்டதை  "வாழத்தெரியாதவர் " என்ற ஈரமற்ற வார்த்தைகளில் என்னால் கடந்து போகமுடியாது.


மெர்லின் மன்றோ மரணத்தை பற்றி நான் ஒரு பதிவெழுதி இருந்த பொழுது என்னிடம் ஒரு நண்பர் சொன்னார் . "அவ கொழுப்பெடுத்தவ , ஊர் மேஞ்சி மேஞ்சி செத்துப் போனா , இதுக்குப் போய் நீ வேல மெனக்கிட்டு உக்காந்து பீல் பண்ணிக்கிட்டு இருக்கியே .." அவரை கடுமையாக திட்டிவிட்டு பிறகு கொஞ்ச நாள் அவரோடு பேசவே இல்லை . மெர்லின் வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே தெரிந்தாள் அவளின் தற்கொலையும் பலவாறாக விமர்சிக்கப் பட்டது . அவருக்குள் இருந்த எழுத்தாளரை இசைத்திறமையை இந்த உலகம் அடையாளம் கண்டிருக்கிறதா ?ஆனால் அவளின் உள்ளத்துயரை நம் யாருக்காவது தெரியுமா...ஆனால் மிக கொச்சையாக விமர்சிக்க கிளம்பிவிடுவோம் . வளர்த்த தந்தையாலேயே வன்புணரப்படுவது  அவ்வளவு எளிதில் மறக்க முடிகிற துயரா ...? காலம் தான் எத்தனை படைப்பாளிகளை நெருக்கிப் பிடித்து தற்கொலை முனையில் நிறுத்தி இருக்கிறது  .... காலத்திற்கு ஈவு இரக்கங்கள் இருப்பதில்லை .

கிணற்றில் குதிப்பதற்கு முன் தன்னுடைய ஆடைகளை எல்லாம் கழற்றி மடித்து வைத்துவிட்டு உள்ளாடையோடு கிணற்றில் குத்தித்த ஆத்மாநாமையும்    , காலையில் எழுந்து குளித்து சாமிகும்பிட்டு தன் மனைவிக்கு பிடித்த அவரின் சேலையை எடுத்து தூக்கு போட்டு தன் வாழ்வை அடங்கச்செய்துகொண்ட   ஸ்டெல்லாவையும்  நாம் புரிந்துகொள்ள முடியாது ..எனவே அவர்களின் மரணத்தை விமர்சிக்க நமக்கு உரிமையோ அருகதையோ இல்லை ... துயர் படுகிறவனுக்கு தனிமையில் உழல்கிறவனுக்கு , அன்பற்று மனசிதைவடைகிறவனுக்கு இந்த உலகம் அப்படி ஒன்றும் குரூரங்களற்ற புனிதமான இடமல்ல ...


வலிக்க வலிக்க வாழ்தல் கொடுந்துயரம் , பெருஞ்சாபம்  . அப்படி வாழும் உள்ளத்தின் அதிர்வுகள் பிற செவிகளுக்கு கேட்பதில்லை .என்னவோ இன்று இரவு ஸ்டெல்லா ப்ரூசும் ஆத்மாநாமும்  என் அறையில் இருப்பதை போல தோன்றுகிறது ...

 ~~க.உதயகுமார்

1 comment:

  1. //துயர் படுகிறவனுக்கு தனிமையில் உழல்கிறவனுக்கு , அன்பற்று மனசிதைவடைகிறவனுக்கு இந்த உலகம் அப்படி ஒன்றும் குரூரங்களற்ற புனிதமான இடமல்ல ...


    வலிக்க வலிக்க வாழ்தல் கொடுந்துயரம் , பெருஞ்சாபம்  . அப்படி வாழும் உள்ளத்தின் அதிர்வுகள் பிற செவிகளுக்கு கேட்பதில்லை.//

    ReplyDelete