Thursday, 19 June 2014

காத்திருப்பதில் அர்த்தமொன்றுமில்லை

நான் உன்னை தேடிக் கொண்டிருப்பதைப் பற்றி 
உனக்கு கவலையொன்றுமில்லை  
என் அழுகையை 
ஒரு கோமாளியின் நாடகக் கண்ணீர் என 
கடந்து போக சுலபமாக இருக்கிறது 

எத்தனையோ உதாசீனங்களுக்கு பிறகும் 
உன் கைபேசி எண்ணை மீண்டும் அழுத்தும் 
என் நேசத்தை பற்றி 
உனக்கு அக்கறையொன்றுமில்லை 

நீ வந்திராத திசைகளில் 
உன் வருகையை எதிர்ப் பார்த்திருந்த நாளில் 
வீசியதெல்லாம் தேரிக்காற்று தான் 
இருந்தும் கைகளில் பிரியங்களை பொத்திக் கொண்டு 
சோட்டுக்காரனுக்கு  கொடுக்க 
கையில் நீர்வடியும் மிட்டாயோடு 
நின்றிருக்கும் சிறுவனென காத்திருந்தேன் 

உன் சொற்கள் 
எளியோர் அவையில் வாய்திறக்கப் போவதில்லை  
உன் பிரியங்கள் 
காயப் பட்டவர்களுக்கு களிம்பாகப்போவதில்லை 
உன் நேரம் 
யாசித்தவருக்கு பதில் கூறாது 
உன் அலாதி அன்பும் 
உடைந்தழுபவர்களுக்கில்லை என்றான பின் 
காத்திருப்பதில் 
அர்த்தமொன்றுமில்லை 

விடைபெறுகிறேன் 
உன் திசைக்கு முற்றிலும் 
எதிர் திசை நோக்கி 
அங்கொரு அணில் இருந்தால் போதும் 
மிச்ச அன்பை அணிலுண்ணக் கொடுப்பேன்

5 comments:

  1. ஒவ்வொரு பத்தியிலும் சுழன்றடிக்கும் அன்பின் சுழல் காற்று படிப்பவரை மூர்ச்சையாக்கி கவிதையின் முடிவில் இருக்கும் அமைதிக்கு இழுத்து வருகையில்,

    காத்திருப்பின் வடுக்களை அணிலொன்று வருடிக் கொடுப்பதாய் அத்தனை இணக்கமாய் இருக்கிறது இந்த கவிதை

    உன் அலாதி அன்பும்
    உடைந்தழுபவர்களுக்கில்லை என்றான பின்
    காத்திருப்பதில்
    அர்த்தமொன்றுமில்லை (Y)

    ReplyDelete
    Replies
    1. நேசத்திர்க்குரியவர்களை சந்திக்க முடியாமல் என் எல்லா கதவுகளையும் நானே தான் சாத்திக் கொண்டேன் ரேவா . இந்த இருண்மை என்னை பயமுறுத்துகிறது . தாயின் கருப்பையில் இருந்த இருண்மை அல்ல இது , சவக்குழிக்குள் சூழ்ந்திருக்கும் இருண்மை . ஆயினும் விரும்பி நானாகத் தான் இந்த இருள்வெளிக்குள் தனித்து பாடித் திரிகிறேன் .

      உடம்பு முடியாமல் வீட்டிலேயே கிடப்பவனை வீட்டுக்கே வந்து கைப் பிடித்து பேசுவது போல இருக்கிறது நீ இங்கும் வந்து என் கவிதையை படித்து பின்னூட்டமிடுவது . எனக்கு தேவையெல்லாம் அங்கீகாரமோ , புகழோ அல்ல ரேவா . அங்கீகாரமும் புகழும் நாம் இழந்த எதையாகிலும் மீட்டுத் தருமா ? பின் அவை நமக்கு எதற்கு .? எனக்கு தேவையெல்லாம் அன்பானவர்களின் அருகாமையும் நேச சொற்களும் பிரியத்தின் கதகதப்போடான ஸ்பரிசமும் மட்டுமே ரேவா . வாழ்தலின் அர்த்தம் அன்பு மட்டுமே என்பதை நீயும் நானும் அறிந்தே இருக்கிறோம் . அது தான் நம்மை எழுத வைக்கிறது . சொற்கள் தெரிந்திருக்கும் எல்லோருமே எழுதி விடுவதில்லையே .

      உன் வருகைக்கும் உன் நேச சொற்களுக்கும் என் தூய பிரியங்கள் ரேவா ....

      Delete
    2. உதயா நம்மைச் சேர்த்து வைத்திருக்கும் இப்பிரிய வார்த்தைகள் எதைக் கொண்டு எழுப்பியது என்று நியாபகம் இருக்குமென்றே நினைக்கிறேன்.. ஒரு புத்தன் நமக்குள் விதைத்த விதை அத்தனை சுலபத்தில் அழியக்கூடியதா உதயா..

      அது விருட்சமென என்னுள் வியாபித்துக்கொண்டே இருக்கிறது.. பலர் கவனிக்கிறார்கள் என்றே நினைப்பே என்னை அங்கு எழுதவிடாமல் செய்கிறது.. இங்கு எனக்கு அந்த தயக்கங்கள் இல்லை உதயா.. இது என் இடம்..

      எனக்கும் என் சகோதரனுக்குமான இடம்.. சரிதானே...

      இதோ இப்போதும் கூட புத்தனின் விவாதங்களை வாசித்துவிட்டு தான் உங்கள் இன்மை அற்று கணக்கும் என் கண்களில் உங்கள் வரிகளாவது படட்டும் என்று ஆழ்மனக் குறிப்பின் பக்கம் வந்தேன் சகோதரா..

      இதோ என் காயங்களுக்கு உங்கள் பதில் மருந்து தடவி வைத்திருக்கும் மாயம் புத்தன் மட்டும் தான் அறிவான் போலும்..

      இருட்காலங்கள் இன்னும் கொஞ்சம் காலம் தான். பொறுமையாய் இருப்போம்.. வெளிச்சத்திரையில் நாளை நம் காட்சிகள் விரியும்.. சேர்ந்து ரசிப்போம்...இன்றைய துயரங்களை நாளைய அனுபவங்களாய்ச் சொல்லி...

      அதுவரை அமைதி காத்திரு...இருத்தல் மட்டுமே இங்கு நாம் எல்லோருக்குமான மூலதனம்.. மூலதனம் காப்போம்..

      ப்ரியங்களுடன்
      ரேவா
      revaviews@gmail.com

      Delete
    3. உதயா நம்மைச் சேர்த்து வைத்திருக்கும் இப்பிரிய வார்த்தைகள் எதைக் கொண்டு எழுப்பியது என்று நியாபகம் இருக்குமென்றே நினைக்கிறேன்.. ஒரு புத்தன் நமக்குள் விதைத்த விதை அத்தனை சுலபத்தில் அழியக்கூடியதா உதயா..

      அது விருட்சமென என்னுள் வியாபித்துக்கொண்டே இருக்கிறது.. பலர் கவனிக்கிறார்கள் என்றே நினைப்பே என்னை அங்கு எழுதவிடாமல் செய்கிறது.. இங்கு எனக்கு அந்த தயக்கங்கள் இல்லை உதயா.. இது என் இடம்..

      எனக்கும் என் சகோதரனுக்குமான இடம்.. சரிதானே...

      இதோ இப்போதும் கூட புத்தனின் விவாதங்களை வாசித்துவிட்டு தான் உங்கள் இன்மை அற்று கணக்கும் என் கண்களில் உங்கள் வரிகளாவது படட்டும் என்று ஆழ்மனக் குறிப்பின் பக்கம் வந்தேன் சகோதரா..

      இதோ என் காயங்களுக்கு உங்கள் பதில் மருந்து தடவி வைத்திருக்கும் மாயம் புத்தன் மட்டும் தான் அறிவான் போலும்..

      இருட்காலங்கள் இன்னும் கொஞ்சம் காலம் தான். பொறுமையாய் இருப்போம்.. வெளிச்சத்திரையில் நாளை நம் காட்சிகள் விரியும்.. சேர்ந்து ரசிப்போம்...இன்றைய துயரங்களை நாளைய அனுபவங்களாய்ச் சொல்லி...

      அதுவரை அமைதி காத்திரு...இருத்தல் மட்டுமே இங்கு நாம் எல்லோருக்குமான மூலதனம்.. மூலதனம் காப்போம்..

      ப்ரியங்களுடன்
      ரேவா
      revaviews@gmail.com

      Delete
  2. நான் என்னத்த சொல்ல? என் மௌனமும் உன் மௌனமும் பரஸ்பரம் புரியும்போது?

    ReplyDelete