Tuesday 12 November 2013

அடர்வனத்தின் மின்மினிகள்



துண்டிக்கப்பட்ட சாலையைப்  போல்
வெறிச்சோடிக் கிடக்கிற வாழ்க்கையில்
நீரூற்றிப்போகிறார்கள்
அச்சிறுவர்கள்

இதழ்களை   இறுகப் பூட்டியிருக்கும்
தடித்த சோகத்தை
மிக லாவகமாக
தங்கள் மழலையால்  திறந்து
புன்னகை ஒன்றை எடுத்துச்செல்கிறார்கள்

தோலுரிக்கும்
இவ்வெயில்  காலத்தில்
சுடுமனசை
மிகப்பாந்தமாக குளிரூட்டுகிறார்கள்

சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சியை
நினைவுப்படுத்தியபடி
அக்குழந்தைகள்
கரம் அசைத்து  கடக்கும் தருணங்களில்
மேல் சட்டையெங்கும்
வண்ணத்துகள்கள்

பிணங்களை  மிதித்தபடி
விகாரத்தில் ஓடும்
இந்நகரவாழ்க்கையில்
ஆறுதல் நிறுத்தங்கள்
மழலைகளின்  குழையும் மொழி

வலி நிறை வாழ்வு
நிறம்மாறி சிரிக்கிறது
பாசாங்கின் கறை  படியா
அந்நிலவுகளின்
வெள்ளந்திச்சிரிப்பை
எதிர்கொள்கையில் மட்டும்

சிடுசிடுக்கும்  முகங்களில்  எல்லாம்
சிரிப்பை ஒட்டியபடி பறக்கும்
அம் மின்மினிகள்
யாரையும்  விட
கற்றுவைத்திருக்கிறார்கள்
இளம்பச்சை நிறத்தில்
இவ்வனத்தை நிறைப்பது எப்படி என…..

-க.உதயகுமார்

http://www.yaavarum.com/archives/1509

Thursday 7 November 2013

மரணம் சரணம் கச்சாமி

இறந்தவர்கள் 
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்  புகைப்படங்களில் 
உதிர்ந்த இறகின் மயிர்முகங்களில் 
பறவையை தேடிக்கொண்டிருக்கிறேன் 

இருப்பை மறுத்து  
தூக்கிட்டு மரித்தவர்  
புகைப்பட விழிகளில் 
அன்பு கசிந்து உறைகிறது 
நிலம்தொட்ட இலையின் 
புடைத்த நரம்புகளில் 
வேர்களின் சாயலை கண்டுணர்கிறேன்

நதி புதைக்கப்பட்ட மணற்குழிகளைப்போல 
இறந்தவர்களின் கைபேசி எண்களும் , முகநூல்பக்கங்களும் 
நிலையாமையை நினைவூட்டியபடி இருக்கிறது 
கடற்கரையில் காலுக்கு கீழே 
கரையும் மணலில் 
வாழ்க்கை தீர்ந்துகொண்டிருப்பதை 
சலனமற்று படித்துக் கொண்டிருக்கிறேன் 

--க.உதயகுமார்