Thursday 19 June 2014

காத்திருப்பதில் அர்த்தமொன்றுமில்லை

நான் உன்னை தேடிக் கொண்டிருப்பதைப் பற்றி 
உனக்கு கவலையொன்றுமில்லை  
என் அழுகையை 
ஒரு கோமாளியின் நாடகக் கண்ணீர் என 
கடந்து போக சுலபமாக இருக்கிறது 

எத்தனையோ உதாசீனங்களுக்கு பிறகும் 
உன் கைபேசி எண்ணை மீண்டும் அழுத்தும் 
என் நேசத்தை பற்றி 
உனக்கு அக்கறையொன்றுமில்லை 

நீ வந்திராத திசைகளில் 
உன் வருகையை எதிர்ப் பார்த்திருந்த நாளில் 
வீசியதெல்லாம் தேரிக்காற்று தான் 
இருந்தும் கைகளில் பிரியங்களை பொத்திக் கொண்டு 
சோட்டுக்காரனுக்கு  கொடுக்க 
கையில் நீர்வடியும் மிட்டாயோடு 
நின்றிருக்கும் சிறுவனென காத்திருந்தேன் 

உன் சொற்கள் 
எளியோர் அவையில் வாய்திறக்கப் போவதில்லை  
உன் பிரியங்கள் 
காயப் பட்டவர்களுக்கு களிம்பாகப்போவதில்லை 
உன் நேரம் 
யாசித்தவருக்கு பதில் கூறாது 
உன் அலாதி அன்பும் 
உடைந்தழுபவர்களுக்கில்லை என்றான பின் 
காத்திருப்பதில் 
அர்த்தமொன்றுமில்லை 

விடைபெறுகிறேன் 
உன் திசைக்கு முற்றிலும் 
எதிர் திசை நோக்கி 
அங்கொரு அணில் இருந்தால் போதும் 
மிச்ச அன்பை அணிலுண்ணக் கொடுப்பேன்

Wednesday 18 June 2014

................................

முடிவற்று நீளும் 
காலத்தின் இருப்பென 
உங்கள் கசப்பு எப்போதும் இருக்கிறது 

அந்தமற்ற ஆகாயமென 
விரிந்து கிடக்கின்றது 
உங்கள் உதாசீனம் 

சொல்லாத சொல்லின் பொருள் போல 
கெட்டித்துக் கிடக்கும் 
என் அன்பை 
உங்கள் கசப்பும் உதாசீனமும் 
என் செய்யும் ?
வெட்ட வெட்ட துளிர்க்கும் 
வாழை என் அன்பு 
மழை பொழிவது உங்களுக்காக மட்டுமில்லை 

Monday 16 June 2014

..............................

பகல் எரிந்துகொண்டிருந்த 
கோடைக்காலத்தின் மத்தியானத்தில் 
புல்தரையில் அமர்ந்திருந்தேன் 
வெயிலை குடித்துக்கொண்டு

வெகுமதி அளிக்கப்பட்ட உதாசீனங்களோடும் 
புனைவாக வரையப்பட்ட 
என்னை பற்றிய பிம்பங்களின் 
முதுகுக் கீறல்களோடும் 
நீங்கள் சூட்டிய அவமான கிரீடத்தோடும் 
புல்தரையில் வேர்பிடிக்க கிடந்திருந்தேன் 
வெயிலெனக்கு உறைக்கவே இல்லை 

வண்ணங்களை சுமந்து கொண்டு 
சிறகசைத்து சிறகசைத்து 
பறந்துவந்த வண்ணத்துப் பூச்சியொன்று 
என் தலை வந்து அமர்ந்தது 
தலை சிலுப்பலோ 
உடல் அசைவோ 
வண்ணத்துப் பூச்சியை விரட்டிவிடும் 
என்பதுணர்ந்து 
நெடுநேரம் அமர்ந்திருந்தேன் 
நிச்சலன மரம் போல 

ரத்தமும் சதையுமான 
மனம் கொண்ட மனுஷனென 
உங்களுக்கு என்னை புரிந்திடாதபோதும் 
அந்த 
வண்ணத்துப் பூச்சி 
எனை பூவென்றா நினைத்தது ?