Sunday 29 September 2013

துள்ளு தமிழ் வாலி !!!




வாலி !!!

பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ   தான் என்று நினைத்துகொள்வேன் .

விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது  எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத்  தான்  முதல் அறிமுகம் . அந்த பருவத்துக்கே உரிய குறுகுறுப்பு . அந்த பாடலை முழுசா கேட்டுடணும் என்ற ஆவலில் அந்தப் பாடலை ஆராய்ந்தால் பாடல் முழுக்கவே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது .ஓஹோ இவர் இப்படியான பாடல் எழுதுகிற கவிஞர் போல என்று தான் அன்றைக்கு நினைத்தேன் .

பின்னாளில் தான் தெரியவந்தது . வாலி என்ற கவிஞர் தொட்டு எழுதாத சந்தங்களே  இல்லை என்று . இன்றைக்கும் கிராமங்களில் "எம்ஜியார் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ..?"  என்று மேற்கோள் காட்டுகிற பாடல்கள் முழுக்க வாலி எழுதியவயாகத் தான் இருக்கிறது .

இன்றைக்கு வரைக்கும் எனக்கு மிக பிடித்த பாடல் , எம்ஜியார் வாயசைத்து வாலி எழுதிய பாடல்களான "கண் போன போக்கிலே கால் போகலாமா " மற்றும் "தரை மேல் பிறக்க வைத்தான் " . 

பணம் படைத்தவன் திரைப்படத்தில் எம்ஜியார் மிடுக்காக கையில் 'பெல்லோஸ்' என்ற இசைக்கருவியோடு  வாயசைத்து பாடுவார் . அமரர் T .M .S இன் குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும் . வாலியின் வரிகளோ சகலத்தையும் விஞ்சி இருக்கும் .

"பொய்யான  சிலபேர்க்கு  புது  நாகரீகம்
புரியாத  பல  பேர்க்கு  இது  நாகரீகம்
முறையாக  வாழ்வோருக்கு   எது  நாகரீகம்
முன்னோர்கள்  சொன்னார்கள்  அது  நாகரீகம்  "

கண் போன போக்கிலே பாடலில் எனக்கு மிக மிக பிடித்த வரிகள் இந்த வரிகள் . இதே  பாடலில் வரும் இன்னும் ஒரு பத்தி நெஞ்சுக்கு நெருக்கமானது

"நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .."

எனக்கு நானே அடிக்கடி பாடிக்கொள்ளும் வரிகள் . குறிப்பாக ஏகாந்த இரவுகளில் .  சுய ஆற்றுப்படுத்துதல் என்று உளவியல் மருத்துவம் சொல்கிறதே , அப்படி எனக்கு இவ்வரிகள் உதவி இருக்கிறது , உதவிக் கொண்டிருக்கிறது ....

"செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது ...இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக  செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு .

"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."

டி.எம்.எஸ் குரல் உயர்த்தி  "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும் ...

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."

என்று கவிஞர் வாலியை  விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர்  பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ...

திருவான்மியூரில் குப்பம் கடற்கரை செல்லும்  சாலையில் கொஞ்ச நாள் குடி இருந்தேன் . அப்போது இரவுகளில் குப்பம் கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது வழக்கம் . அங்கே மீனவர் குடியிருப்பு  உண்டு .அதில் மீனவப் பெரியவர்  ஒருவர் தினமும் குடித்துவிட்டு வேத பாடம்  போல இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பார் . உடைந்த  குரலில் அந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அவருக்கு ரசிகனாகவே ஆகிவிட்டேன் . மீனவ  நண்பன் என்று எம்.ஜி.யாரை இன்றும் சென்னையில் சொல்லுவார்கள் , எனக்கென்னவோ வாலியை அப்படி சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது .

"மறுபடியும்"  என்று ஒரு திரைப்படம் . அதில் "எல்லோரும் சொல்லும் பாட்டு .." என்று SPB  பாடிய பாடல் . எழுதியது கவிஞர் வாலி . அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு அத்துப்படி . நீண்ட நாட்களாக என் கைபேசியில் அழைப்பு பாடலாக அது தான் இருந்தது .  

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஷேக்ஸ்பியர் சொன்ன   பெருந்தத்துவம் இந்த நாளே  வரிகளில் அடக்கி சொல்லிவிட்டார் வாலி .

எனக்கு ஆச்சர்யம் ."பக்கம் வந்த மாமா,இதுக்கு பேரம் பேசலாமா?பாக்குப்பாய போட்டு, நீயும் பயாஸ்கோப்பு காட்டு" என்றெல்லாம் எழுதிய வாலியால் எப்படி இப்படியும் எழுத முடிகிறது ? என்று அதிசயமாக இருக்கும் , கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கும் . ஆனால் பின் வாலியே "நான் காசுக்கு பாட்டெழுதவந்தவன்" என்று சுயவாக்குமூலம் கொடுத்த பின்னால் , என் மனம் அவர் நிலைப்பாட்டில் அதிக மூக்கை நுழைத்தெல்லாம் ஆராய்ச்சி  செய்ய விரும்பியதில்லை .

அந்த பாடலில் எனக்கு எல்லா வரிகளும் பிடிக்கும் என்றாலும் , சிலப்பதிகாரத்தின் சாரத்தை இரண்டு வரிகளில் எழுதி இருப்பார் வாலி .அது தான் மிகுந்த வியப்பு எனக்கு

"கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று"

அட ..என்று கேட்பவரை ரசிக்க வைக்கும் அவ்வரிகள் ...

வாலியின் சினிமா பாடல்களை எடுத்து சிலாகிக்க வேண்டுமென்றால் , ஒரு புத்தகம் தான் எழுதவேண்டும் . ஊர் உலகம் அறிந்த விஷயம்  இது .

எல்லா சினிமாப் பாடல்களையும் விட , வாலி எழுதிய கவிதை ஒன்று . எனக்கு மட்டுமில்லை தமிழர்  யாருக்கும் அது பிடிக்கும் . தமிழ் சமுதாயம் முழுமைக்கும்  அவ்வரிகள் மிக உன்னதமானது ..என்ன கவிதை என்று யோசிக்குறீர்களா..?

தமிழர் தலைவர் பிரபாகரனை பற்றி வாலி எழுதிய வரிகள்

"முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? "

மேலும் அதே கவிதையில்

"நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!

எனக்கு படிக்க படிக்க சிலிர்க்கும் . வாலியை கையெடுத்து கும்பிட தோன்றும் இவ்வரிகளை படிக்கும்போதெல்லாம் . எவ்வளவு பொருத்தமான  வரிகள் ...

கலைஞருக்கு  நடந்த பாராட்டு விழாக்களில் கவியரங்கம் இசைப்பது , எதன் பொருட்டும் அவர்களை விமர்சிக்க வாய் திறக்காதது போன்ற விடயங்கள் எனக்கு பல சமயங்களில் பெரியவர் மீது வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது . நண்பர்களிடத்தில் மனம் வருந்தி பேசி இருக்கிறேன் . ஆனால் என்னவோ "கவிஞர்" என்ற வாலியை என்னால் விட்டுக் கொடுக்கவே முடியவில்லை . கலைஞரோடு இருந்தாலும் , பார்வதி தாயார் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரத்தில் அரசை சாடியும் கவிதை எழுதிய விதத்தில் வாலி தன் நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார் என்பதை  புரிந்துக் கொண்டேன் .

சகோதரி செங்கொடி உயிரை ஈகித்து வீரமரணம் அடைந்த பொழுது , வாலி அய்யா எழுதிய கவிதை எனக்கு அன்றைக்கு மேலும் அழுகையை கூட்டியது .

"கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்டு-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!"  என்று மகளை  இழந்த தந்தையின் பரிதவிப்பை இந்த கவிதையில் பார்க்க முடியும் .

 இதோ மிக சமீபத்தில் புலிக்குட்டி பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து பெரியவர் வாலி  எழுதிய கவிதையும் அத்தனை  நெகிழ்சியானது .

"முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்…
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?

என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!"

என்று பெரியவர் வாலி எழுதிய இரங்கல் கவிதை தமிழர் நெஞ்சில் வலியோடு பதிந்துபோனது .

காசுக்கு பாட்டெழுதுகிறவன் என்று அவரே சொல்லிக் கொண்ட பொழுதும் , படைப்பாளிக்கே உரிய சமூக கோவத்தோடு பேனா பிரித்து தோலுரிக்கவும் தவறியதில்லை வாலி . தமிழின் துணைகொண்டு  தனக்கே உரித்தான மிடுக்கோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் பெரியவர் வாலி .

அகவை எண்பதை கடந்த பொழுதும் , இவரின் வார்த்தைகளில் மட்டும் முதுமை தெரிந்ததே இல்லை .

 "தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே...
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்...." என்று காதல் செய்யும் யாரும் கேட்ட மாத்திரத்தில் கிறங்கி மயங்கும் பாடல் இது . இதை எழுதும் பொழுது வாலி எண்பதை கடந்துவிட்டார் . தமிழ் திரையுலகம் கண்ட கவிஞர்களில் இந்த வரம் கண்ணதாசனை விடவும் வாலிக்கே மிக அதிகமாய் கிடைத்திருந்தது என்பது என் கருத்து .

கம்பராமயணத்தில் வானர அரசன் வீரன் வாலியை பற்றி கம்பன் எழுதியப் பாடல் . இலக்கியவாதிகள் எல்லோருக்கும் மிக பரிட்சயமான  ஒரு ராமாயணப்   பாடல் உண்டென்றால் அது வாலியை மெச்சி கம்பன் எழுதிய

"கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில்; "  என்ற பாடல் .

காற்று கூட வாலியின் வேகத்தின் முன்னால் தோற்றுப் போய்விடும் , முருகனின் வேல் கூட வாலியின் மார்பில் செல்லாது  என்றெல்லாம் கம்பன் வாலியை புகழ்ந்தான் . இது கவிஞர் வாலிக்கும்  ஒப்புப் படுத்திப் பார்க்கிறேன் . காற்றின் வேகத்தை விடவும் தமிழ் வார்த்தைகளை புதிதுபுதிதாக கோர்த்து பாடல் எழுதுவதில் வாலி ஒரு அதிசயம் தான் . வாலியை யாரோ ஒருவர் வம்புக்கு இழுத்த பொழுது மேடையிலேயே வாலி சொன்னாராம் "டேய் நான் மாமிசம் திங்குற பாப்பான் , என்கிட்டே வச்சிக்காத " என்று .  போலியாக வாழாமல் நான் இப்படித்தான் என்று ஊருக்கு உரைத்த விதத்தில் உறுதியான நெஞ்சம் தான் கவிஞர் வாலிக்கும் .


எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

என்று எழுதிய வாலி , மண்ணை விட்டு கிளம்பி விட்டார் . விதியின் வாய்க்குள் எல்லோரும் ஒரு நாள் விழத்தான் போகிறோம் . கவிஞர் வாலி காலத்தால் மறக்க முடியாத பாடல்களை  எழுதி  அழியாப் புகழ் பெற்று பூரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு இறுதி யாத்திரை கிளம்பி இருக்கிறார் . "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் .." என்று எழுதிய வாலியையும் அவர் திரையிசை பாடல்களையும் தமிழ் நெஞ்சங்கள் என்றைக்கும் மறக்க முடியாது .

அவர் பெரிதும் விரும்பி சேவித்த ரங்கராஜனை நானும் வேண்டிக் கொள்கிறேன் . அந்த வெண்தாடி கவிஞன் , ரங்கனின் திருவடியில் ஆழ்ந்த இளைப்பாறுதல் பெறட்டும் . "என் வெற்றி என்பது என் வலிமையில் வந்தது இல்லை , தமிழின் வலிமையால் வந்தது" என்று சொன்ன வாலி , தமிழுள்ள வரையிலும் புகழ் தழைத்திருப்பார் .


ஆண்டாண்டு காலம்
தொன்மையுடைத்த
தெள்ளு தமிழ்
உம் விரல்களின் வழியே
துள்ளு தமிழானது
வாலி ..!
உங்கள்
தமிழ்த் திரையிசைப் பாடல்கள்
எங்கள் சந்ததிக்கும்  ஆகுமோர்  
தூளி !!


ஆழ்ந்த இரங்கல்
க.உதயகுமார்




குறிப்பு : இந்தப் பதிவு கவிஞர் வாலி அவர்கள் மறைந்த மறுநாள் (ஜூலை 19,2013) எழுதிய இரங்கல் கட்டுரை .

No comments:

Post a Comment