துண்டிக்கப்பட்ட சாலையைப் போல்
வெறிச்சோடிக் கிடக்கிற வாழ்க்கையில்
நீரூற்றிப்போகிறார்கள்
அச்சிறுவர்கள்
இதழ்களை இறுகப் பூட்டியிருக்கும்
தடித்த சோகத்தை
மிக லாவகமாக
தங்கள் மழலையால் திறந்து
புன்னகை ஒன்றை எடுத்துச்செல்கிறார்கள்
தோலுரிக்கும்
இவ்வெயில் காலத்தில்
சுடுமனசை
மிகப்பாந்தமாக குளிரூட்டுகிறார்கள்
சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சியை
நினைவுப்படுத்தியபடி
அக்குழந்தைகள்
கரம் அசைத்து கடக்கும் தருணங்களில்
மேல் சட்டையெங்கும்
வண்ணத்துகள்கள்
பிணங்களை மிதித்தபடி
விகாரத்தில் ஓடும்
இந்நகரவாழ்க்கையில்
ஆறுதல் நிறுத்தங்கள்
மழலைகளின் குழையும் மொழி
வலி நிறை வாழ்வு
நிறம்மாறி சிரிக்கிறது
பாசாங்கின் கறை படியா
அந்நிலவுகளின்
வெள்ளந்திச்சிரிப்பை
எதிர்கொள்கையில் மட்டும்
சிடுசிடுக்கும் முகங்களில் எல்லாம்
சிரிப்பை ஒட்டியபடி பறக்கும்
அம் மின்மினிகள்
யாரையும் விட
கற்றுவைத்திருக்கிறார்கள்
இளம்பச்சை நிறத்தில்
இவ்வனத்தை நிறைப்பது எப்படி என…..
-க.உதயகுமார்
http://www.yaavarum.com/archives/1509
No comments:
Post a Comment