Friday, 23 October 2015

மழை நாள்



மழை  தூவும்
நாளில் 
எல்லாமுமே
அழகாகிவிடுகின்றன
 
ஈரத்தோடு பறக்கும்
குருவிகளுக்கு
தன்  உடலொன்றும்
பாரமில்லை
 
பறவையின் சிறகு
சுமந்து அலைகிறது 
துண்டு  மேகத்தை
 
 
கொடிகளில் அமர்ந்தபடி
உடல்களை
சிலுப்பும்
மாடப்  புறாக்களின்
உடல்  மொழியில்
ஆயிரமாயிரம்  ஓவியங்கள்
 
இலைகளில்
ஒட்டியிருக்கிறது
திட்டு  திட்டாய்
மேகம் 
 
ஈரமான  தார்சாலைகளில்
உதிர்ந்துகிடக்கும்
மலர்களில்
மிளிர்கின்றன கூடுதல்  அழகு
 
மழையில் நனைந்திடாத
பூக்களில் 
என்ன எழில் 
இருந்துவிடப்போகிறது ?
 
கண்ணாடி சன்னல்களில்
ஒழுங்கற்ற கோடுகளாய்
பொழியும் மாரிக்கு
மனதை  கொடுக்கலாம்
 
மழைக்கு
பிந்தைய வானம்
தன்  அடையாளம் இழந்தாலும் 
அழகாக்கிவிடுகின்றது
அவனியில் அனைத்தையும்
 
மழை  நாளை
போல 
எல்லா  நாளும்
இருந்துவிட்டால்
இந்த  வாழ்வை
ஏன்  நமக்கு பிடிக்காது 
 
தூவும்  வானத்தின்
சரங்களை
தாவிப்பிடித்து
வானம்  போய்விட ஆசை  தான்
என்னை  போல் ஒருத்தனை
ஏற்றுக்கொள்ளுமா
மழைவானம்

Wednesday, 21 October 2015

விடுவித்துகொள்ளல்

எல்லா நேரமமும் இரைந்து கொண்டிருக்கிறது அருவி சத்தங்களில் இருந்து என்னை கொஞ்ச நேரமேனும் விடுவித்துக்கொள்ள அந்த்தப் பாடலை இசை நான் இந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்து செல்ல விரும்புகிறேன் துரோகங்களில் இருந்தும் வஞ்சங்களில் இருந்தும் வழி மாறி வேறெங்காவது சென்றுவிட விரும்புகிறேன் இசையை தவிர எனக்கு வேறு சப்தங்களை பிடிக்கவில்லை மௌனங்களுக்குள் பிரவேசித்து பதுங்கிகொண்டுவிட்டால் பாதுகாப்பாய் இருப்பேன் என்றுணர்கிறேன் மழை சத்தம் பிடிக்கிறது சன்னல் கண்ணாடிகளில் மோதி உடையும் மழையின் சத்தம் ஒரு துளிக்கும் மறு துளிக்கும் இடையே நான் ஜீவிக்க விரும்புகிறேன் துளிகளோடு சேர்ந்து உடைந்தாலும் மேல் மழையோடு சிதறுதல் பேரெழில் மழையினது சன்னதத்தில் மனங்குளிர நனைந்திருத்தல் மற்றெல்லாவற்றயும்விட எனக்கு முக்கியம் மனிதர்களிடத்தில் என்ன இருக்கிறது ? மழையிடத்தில் எல்லாம் இருக்கிறது நான் மனிதர்களிடமிருந்து தப்பி மழையினது கருப்பையில் சூல் கொள்ள விரும்புகிறேன் மீண்டும் புதுத் துளியாய் பிறந்தால் புதுராகம் இசைப்பேன் மண்வாசம் துளிர்க்க

எனக்கு தேவையெல்லாம்
இங்கிருந்து
தப்பிக்க வேண்டும்

Tuesday, 20 October 2015

......................................................

யாரோ வருகிறார்கள் 
யாரோ போகிறார்கள் 
நான் வெறும் சாட்சியாக 
நீண்டநாட்களாக இங்குதானிருக்கிறேன் 

எனை வெறுக்கவோ
நேசிக்கவோ
ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கிறது

இந்நாட்களில்
நான் பழகுவதெல்லாம் மௌனம்தான்
மேலும்
இங்கில்லாமல் போவது எப்படியென

என் பெயர் கேட்டவுடன்
அழைப்பை துண்டிக்கும்
இத்தனை புறக்கணிப்பை
இவ்வளவு நாளாக
எங்குமறைத்துவைத்திருந்தாய்

இத்தனை கசப்பை
உள்ளுக்குள் வைத்திருந்தா
என்னோடு சிரித்துப் பேசி
என் முத்தம் தின்றாய் ?
உடலதிரச்செய்கிறது உன் பாசாங்கு

கரையவே கரையாத சொற்களை
நீரின் ஆழத்தில் ஒளித்துவைத்திருந்து
இத்தனை நாளும் எப்படி
உன்னால் நேசித்தல் போல
நடிக்க முடிந்தது

கல்லெறிந்த குளத்தின்
மேற்பரப்பென
சலனமுற்றிருக்கிறேன்
நீ இன்னமும் கல்லெறிவதை நிறுத்தவில்லை

என்றாவதொரு நாள்
எதேச்சையாக சந்திக்க நேர்ந்தால்
அப்போதும் சிரித்தபடி கைகுலுக்குவாய்
நான் நன்கு அறிவேன்
வெறுப்பை மறைக்கும் சாத்தியமற்ற உன் முகத்தை

எதுவுமே நிகழாதது போல
நீ இருக்கிறாய்
தொட்டியில் இருந்து வெளியே குதித்துவிட்ட
மீனைப் போல நான் துடிக்கிறேன்
நீயோ கொள்ளை அழகென்று சிலாகிக்கிறாய்

நான் உனக்கு
சொல்ல விரும்புவதெல்லாம்
இன்றைய வானிலை
இப்படியே நீடித்துவிடாது