Tuesday 15 December 2015

நிலாவினில் கிடப்போம்


நேற்று

நாம் இருந்தோம்

பொதிகையின் மடியினிலே

 

உனக்கு பிடித்தமானவைகள்

எனக்கும் பிடித்திருந்தது

உனக்கு ஆகாதவைகள்

எனக்கும் அப்படியே ஆயின

 

பிரியங்களால்

ஒருவரையொருவர்

தழுவிக்கிடந்தோம்

சிந்திய முத்தங்களில்

வண்டுகள் ரீங்கரித்தன

 

உனது பயணம்

எனது பயணம் ஆனது

உனது பாதை

என்னை நோக்கி நீண்டது

 

 

இன்று

நாம் இருக்கிறோம்

பிரிவின் கரங்களிலே ...

 

தள்ளி நின்று

சொல்கிறாய்

என் அன்பு அபத்தமென்று

 

பிரிவின் நகம் கீறி

வழியும் குருதியை

நக்கி ருசிக்கிறாய்

 

நானோ வலிக்கிறது என்கிறேன்

நீயோ

என் கேவல்

உனக்கு கேட்கவில்லை என்கிறாய்

 

நமதிடைவெளியில்

எதுவுமே நடக்காதது போல

வெகு இயல்பாக

நேற்று தொலைபேசினாய்

எனக்கோ

பிரிவின் துயர் வாடை

மூச்சை நிறுத்தியது

 

உன் நலம் விசாரிப்புகள்

என்னை

காயப்படுத்தின

உரையாடலின் இறுதியில்

நீ உதிர்த்த புன்னகை

என் மீது

நீ செலுத்திய வன்முறை

 

என்னால்

எளிதில் உன்னை

மறக்கமுடியவில்லை

முன்பு பகிர்ந்த

முத்தத்தின் தடயங்கள்

வியர்த்து வழிகிறது

 

உன் நினைவின் தாழ்வாரத்தில்

அரளியென வேர்பிடித்திருக்கிறேன்

நீயோ

உன் அசட்டையான பார்வையால்

வெந்நீர் ஊற்றுகிறாய்

 

நமக்கு ஏன்

இப்படி ஆனது

நான் 

தூக்கம் தொலைத்து

துயரம் கொண்டது

உன் அவமதிப்பால் தானே

 

நான்

தரை மோதி அழுகிறேன்

குலுங்கி உடைகிறது கண்ணீர்

 

என்றாவது ஒருநாள்

நீ என்னை புரிந்துகொள்வாய்

என்ற என் நம்பிக்கை

என் புவனத்தை சுழற்றுகிறது

 

கேவியழுது கேட்கிறேன்

என்

அன்புனக்கு வேண்டாமா ?

 

 

எனக்கு நம்பிக்கை இருக்கிறது

மீண்டும் நாம் இருவரும்

நிலாவினில் கிடப்போம்

அன்று

வானின் நட்சத்திரங்கள்

நம் இருவரின் மீதும்

கவி பாடும்

No comments:

Post a Comment