Sunday, 22 September 2013

அக்கா !

கனகாம்பர மலர்களின் மீது
அவளுக்கு அவ்வளவு காதல்
தான் வளர்க்கும் கனகாம்பரச்  செடியில்
ஒரு பூ குறைந்தாலும்
எதிர்வீட்டு அபிராமியிடம்
சண்டைக்கு நிற்பாள்

கனகாம்பரங்களை
அடுக்கடுக்காக கோர்த்து
சூடிக்கொள்கையில்
தான் இந்த தேசத்தின் ராணி
என்ற தோரணையில் இருப்பாள்

அடங்காப்பிடாரி
என
பெயர் வாங்கினாலும்
இயல்பில்  அப்படியில்லை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புகையில்
அவள் ஜாமெட்ரி பாக்ஸில்
தம்பிக்கென  மீதமிருக்கும்
இலந்தை  பழங்களைப் போல
இனிப்பானவள் 

பாவாடை சட்டை காலங்களில்
தலைதுவட்டும் துண்டில் மாராப்புடுத்தி
"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ..."
என பாடிக் களிப்பாள்

"பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்..."
என்ற
அவள்  கணீர் குரலில்
பாரதியை தெரிந்திராத
என் மயிர்க் கால்கள்
நேர்நிற்கும்

அவள் வரையும்
மார்கழி மாத கோலங்களைப்  போல
வண்ணங்களாய் சிரிக்கும்
பட்டாம்பூச்சியென
எப்பொழுதும் துள்ளித்திரிபவள்
அப்பாவோடு சண்டையிட்டு
அம்மா காணாமல் போன
ஒரு அதிகாலையில்
சடங்காகி 
அழுதுகொண்டிருந்தாள் ...
காரணங்களேதுமறியாமல்
"அம்மா வந்துடுவாங்க அழாதே .."
என்றவள் கழுத்தை கட்டிக்கொள்கையில்
எனை இறுக அணைத்துக்கொண்டு
ஏன்
உடல் நடுங்கி அழுதாள்
என்பது மட்டும்
இன்னமும் புரியவில்லை



~~க.உதயகுமார்

2 comments:

  1. Replies
    1. தொடர்ந்து நீங்கள் எனக்கு தரும் ஊக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ !!!

      Delete