Tuesday 29 October 2013

நிர்தாட்சண்யம்

அறையெங்கும் நிறைந்திருக்கிறது 
அத்துவானப் பேரமைதி 
உதிர்ந்த மலரைப் போல 
மௌனம் போர்த்திக் கிடக்கிறது காலம்     
அரவமற்ற பொட்டலில்  பெய்யும் 
மாரியென கண்கள் 
நத்தையென   நகரும் 
காதலற்ற வெறும்நாட்கள்  
கூழாங்கல்லின்   அடியில் 
தேங்கிக் கிடக்கும் இருளைப் போல 
தனித்த வாழ்வு 

தானே   போட்டு  
தானே  சுவைக்கும் 
தேநீரின்   சுவை போல 
பகிரவென யாருமற்ற 
கொடும்வாழ்வின் பக்கங்கள் 
கொடும்  கசப்பென்கிறேன் 
நீங்களோ 
பைத்தியம் என்ற 
தாட்சண்யமற்ற  ஒரு வார்த்தையில் 
என் வாசலை 
கடந்து போகிறீர்கள் 

~~க.உதயகுமார்

இலையின் இயல்பற்ற இதயம்

நதிவழி நீந்தும் 
இலைபோல் 
லாவகம் வருவதில்லை 
விதிவழி வற்றும் வாழ்வில் 
ஓவியத்தின் கண்களென 
நிலைகுத்தியே நிற்கிறது 
துயர் 
சன்னமாய் விரிசல் விட்டு 
சுக்குநூறாய் உடைகிறது 
கண்ணாடி மனசு 

இலைகளுக்கு எப்படி 
இவ்வளவு எளிதாக இருக்கிறது 
தன்னை விடுவித்துக் கொண்டு 
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில் 
ஈரமாய் எழவும் 
இலையின் இயல்பற்ற இதயத்தால் 
முடிவதில்லை 

பச்சை காய்ந்து 
பழுப்பு மினுங்கும் 
பருவத்தே 
நானுமோர் இலையாவேன் 
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை 

--க.உதயகுமார் 

http://navinavirutcham.blogspot.com/2013/07/blog-post_7.html

Saturday 26 October 2013

வழமை

ஒவ்வொரு துண்டாய்
ஒவ்வொரு துண்டாய்
சிதறித்தெறித்த என்னை
நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்

முழுமையாய் மீட்சியுற்று
நிமிர்ந்தெழுகிறேன் 
சகிக்கப்பொறுக்காமல்
மறுபடி உடைக்க
நீளும் உன் கரங்களை
சபிக்கத் தோன்றுவதேயில்லை எனக்கு

சிதறடிப்பது
உன் தொழிலாகவும்
மீட்டெடுப்பது
என் தொழிலாகவும்
நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இவ்வாழ்வில்
புதர்மண்டும் இருளுக்காக
நான் அழுதென்ன ஆகப்போகிறது ?

--க.உதயகுமார்

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25302&Itemid=265

Friday 25 October 2013

ஒன்றுக்கென மற்றொன்று


வெறித்தபடி  நீளும்
இந்தப்பகலுக்கு
சொல்லவென
ஆறுதல்  ஒன்று
ஊர்க்குருவியிடம் இருக்கிறது

வெயிலில் நீந்திப்பறக்கும்
ஊர்குருவியிடம்
பகிரவென
இளைப்பாறுதலின் குறிப்பொன்று
நொச்சி மரக்கிளையில்  பூத்துக்கிடக்கிறது

நிழலைப் பொழியும்
நொச்சி மரக்கிளை அடியில்
சாவகாசமாய் அசை போடும்
பசுவின் மடி நுனியில்
தன் முலை முட்டும் குட்டிக்கென
சொட்டு சொட்டாய்
கசிகிறது மாகாதல்

இளங்கன்றின் நாநுனியில்
ஒரு யுகத்துக்குமான
பேரன்பின் ஈரம்


--க.உதயகுமார்

Wednesday 23 October 2013

காலத்தை கடக்கும் ஒருவன்



முடிவுறா காத்திருப்புகளின்
வெம்மையில்
அவனின்
மனச்சுவரின் பூச்சுகள்
உதிரத்தொடங்கிவிட்டன

தன் உதிரத்தின்
புளித்த சுவை
அவனுக்கு
இப்போது பிடிக்கவே இல்லை

முகத்தில் துப்பிச்சென்ற
உண்மைகள் அனைத்தையும்
நக்கி முடித்தாகிவிட்டது

மிடறு மிடறாய்
குடிக்க
வலியெதுவும்  புதிதாய் இல்லை

வாழ்தளற்ற வாழ்தலில்
நடுங்கி நடுங்கி
நீளம் கடக்க
இதோ நுழைகிறான்
நிச்சயமற்ற  இரவிற்குள்


--க.உதயகுமார்

Tuesday 22 October 2013

ஞாலத்தின் மாணப் பெரிது


பாலையின் நடுவே
தகித்தலையும் நெடும்பயணத்தின் கால்களுக்கு
உன் குழந்தைமை போன்றதொரு
அன்பின் முத்தத்தை
என் ரணங்களில் ஒத்திவிடும்
தலைக்கு மேல் நிலைகொண்ட பறவையின்  நிழல்
நின்னை நினைவூட்டுகிறது
அது என் பாதங்களுக்கு
போதவே போதாத  நிழலென்றாலும்

Monday 21 October 2013

நமதிடைவெளியில் நெளியும் கவிதை



உனதன்பின்  தீண்டலறியா  இந்நாட்களில்
உள்ளுறங்கும் வேதனையை
பகிரவியலாத மனதின் சுவர்களில்
சதை நெகிழ்ந்து
உதிரம் வெளிறி
பிடிப்பற்ற மல்லிக்கொடிபோல்
நான் அலைபாயுதல் கண்டாயா ....

மாமழை ஒன்று மறுதலித்தப் பின்னால்
வெட்டாந்தரையாயிருக்கும்  இவ்விரவின்  பக்கங்களில்
மசித்துளி போல்  உனதன்பைச்சொட்டி
எதையாகிலும் எழுதிப்போயேன்.....

~~க.உதயகுமார்

Saturday 19 October 2013

கிளியோபாட்ரா இல்லாத சீசரின் அந்திமக்காலம்



உறைந்த நைல் நதியென
வாழ்வின் முற்றத்தில்
அமர்ந்திருக்கிறான் சீசர்

அவனெதிரே ஒரு கோப்பை
இருக்கிறது
கிளியோபாட்ரா இல்லாத
சீசரின் ரோமைப் போல
ததும்பும் வெறுமையோடு

முன்பந்த சுகந்தகாலத்தில்
அவன் உதட்டில்
எப்போதும் ஒட்டி இருந்த
கிளியோபாட்ராவின் எச்சில்
இப்போது உலர்ந்துபோய்விட்டது

ஒற்றையாய் நிற்கும்
ஆலிவ் மரங்கள்
சபிக்கப் பட்டவை
என புலம்பித்தீர்க்கிறான்
தான் போர்வீரன் என்பதை மறந்து

தூரத்தில் பறக்கும்
எகிப்திய கழுகு கொத்திச்செல்வது
அலெக்சாண்ட்ரியா காற்றில் மிதந்த
இவனின் காதலைத்தான்
என்று விசும்புகிறான்
பின் பெருங்குரலெடுத்து
ஒப்பாரி வைக்கிறான்
அவன் போர்த்தழும்புகளில்
ஒழுகுகிறது
காதல்

கிளியோபாட்ராவின் அந்திமக்கால
மரணக்கனவுகளில் தீண்டிய
அதே சர்ப்பம்
சீசரின் கனவுகளிலும் இப்போது நெளிகிறது .
இல்லாமல் போன கிளியோபாட்ராவைப்போல்
தன்னை
ரோமின் குறிப்புகளில் இருந்து நீக்கும்படி
அதனிடம் மன்றாடுகிறான் .

மன்றாட்டுகள் எப்போதும் கேட்கப்படுவதில்லை
என சலிப்புற்ற சீசர்
ப்ரூட்டஸ்ஸைத் தேடுகிறான் ......

எனதருமை ப்ரூட்டஸ் !!!
நானொன்றும் சாக்ரடீஸ் இல்லை தான்
பரவாயில்லை
கொஞ்சம் கருணையோடு
ஹெம்லாக் ஊற்று ..

வெறுமை கரைந்து
துளித்துளியாய் நிறைகிறது
சீசரின் கோப்பை

 -க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6108

Friday 18 October 2013

ஆதலால் காத்திருக்கிறேன்



வாதையை விடவும் அனத்துகிறது
நின் பிரிவின் சூடு
புறக்கணிப்பின் சிலுவையில்
ரத்தம் சொட்ட சொட்ட
என்னை ஏன் கைவிட்டாய் 

நீ அலட்சியப்படுத்தும் என்னை
சுமப்பது
எனக்கு வலிக்கிறது
உதிர்காலத்தின் இலையென
நெஞ்சம் கனத்து விழுகிறேன்
நீயற்ற முகட்டிலிருந்து

வழிதவறிய  எறும்பென
பரிதவித்து
உன்சாயலொத்த அன்பை
தேடித் தேடி களைத்துப் போகிறேன்

உன் நேசத்தின் மழையைத் தவிர
வேறெதிலும் நனைய விருப்பமில்லை
ஊடலின் மேகம் உடைந்து
நீ பொழிந்தென்னை சிநேகிக்கும்  நாள் என்னாளோ

~~க.உதயகுமார்

மௌனத்திரைக்குப் பின்னால் ...



மெழுகுள்ளம்  என்று தெரிந்தே
தீயிலிட்டு  சிரிப்பது
வன்மம் என்கிறேன் நான் ...
கவனக்குறைவு  என்கிறீர்கள் நீங்கள்

 பரிகசித்து
கைகொட்டி ஆர்ப்பரிப்பது
பகடி வதை என்கிறேன் நான் ...
வதையூட்டிய  காயத்தின்  கண்ணீரெல்லாம்
நீலிக்கண்ணீர் என்கிறீர்கள்  நீங்கள்

விடமொத்த  வார்த்தைகளை  துப்பிச்செல்வது
வீறிடும் வலி என்கிறேன் நான்
அடவுகட்டி நடிக்கிறான் என
அப்போதும் விடாமல் துப்புகிறீர்கள்

மென்மனசை கசக்கி எரிவது
சித்ரவதை  என்கிறேன் நான்
இதற்கெல்லாமா கோவிப்பாய்...?
உன் மனநலம்   சரியில்லை என சான்றளிக்கிறீர்கள்

புரிவதே இல்லை
என்  மொழி உங்களுக்கும்
உங்கள் மொழி எனக்கும்

சில நேரங்களில்
மொழியை மௌனமாக்கி
மௌனத்தை மொழியாக்குவது
எனக்கு  வசதியாக இருக்கிறது

Wednesday 16 October 2013

வக்கற்று வாழ்தல்



யாதொரு  பிடிப்புமற்ற
மல்லிக்கொடியொன்று
காற்றில் அலைந்தபடி
நீட்டித்துக்கொள்கிறது
தன்  உயிர் வாழ்தலை

என்ன செய்ய
வாழ்ந்துதொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது
வக்கற்ற நிலத்தில்

-க.உதயகுமார் 

Tuesday 15 October 2013

பாழடைந்த வீடு


எல்லா ஊரிலும்
ஒரு பாழடைந்த
வீடு நிற்கிறது

முடிந்துபோன ஒரு வாழ்க்கையின்
மிச்சமாக ,
அடைக்கப்பட்டோ
உடைக்கப்பட்டோ இருக்கும்
கதவுகள் .....

வீட்டின் மேல்தளம் எங்கும்
தலைகீழாய்த் தொங்கும்
முன்னம் வாழ்ந்த நினைவுகள் ....

பிரசவமும் மரணமும்
மாறி மாறி
பார்த்துக்கிடந்த
சுவரெங்கும்
சிலந்திக்கூடு .....

காயப்போட எதுவும் இல்லை ,
காத்தாடி விட
அந்த சிறுவனும் இல்லை ,
மொட்டையாய் நிற்கும்
மொட்டைமாடி ....

பிரார்த்தனைகளைத்  தின்று ,
கரையான் புத்தாகிப்போன
துளசி மாடம் ....

ஒருத்தியின்  வளவியோசையை
இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கும்
ஈரம் அற்றுப்போன
கிணத்து ராட்டை ....

எத்தனை முத்தங்கள்  உதிர்க்கப்பட்டது
எத்தனை கூடல்கள் வெற்றியடைந்தது
என கணக்குவைத்திருக்கும்
அறுந்துபோன
அந்த கயிற்றுக்கட்டில் ......

சாயம் வெளுத்து
திட்டுதிட்டாய்க் கிடக்கும்
ஒரு பெருமாட்டியின்
வெற்றிலை எச்சில் ....

வாழ்ந்த   வாழ்க்கையின்
நினைவுச்சின்னம்
சிதலமாகி நிற்கிறது
எல்லா ஊர்களிலும் .....

என் வீடும்
ஒரு நாள்
பாழடைந்துபோகுமோ ?


--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 12, 2011 இல் உயிரோசையில் வெளியான கவிதை . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4500

Monday 14 October 2013

ஆதாமின் துணையற்ற வனம் 




நினைவு நதியில்
பளீர் பளீரென வெட்டும்
ஏவாளின் பிம்பக்கீற்றுகளை
யாமத்தில் எதிர்கொள்வது
அவ்வளவு எளிதாய் இல்லை ஆதாமிற்கு 

அம்மகிழ்காலங்களை
புணர்கையிலெல்லாம்   
உயிர் நரம்பை அறுக்கிறது வலி

வாழ்வாங்கு வாழ்வோம்
என 
வார்த்தையில் கட்டிவைத்த  கோட்டையில்
அவன் மட்டும் உலவித்திரும்புகையிலெல்லாம்
உதிரம் பிசிபிசுக்கும்
காயங்களோடே கரையொதுங்குகிறான்

அந்நாட்களில் தின்னக்கொடுத்த
அவள் பேரன்பின் மதுரத்தை
இந்நாளில்
பசுவைப் போல அசைபோடுதல்
கண்ணீரில் முடிகிறது

மலர் நிகர்த்த ஏவாளை 
ஊழ்விதி உதிர்த்தபின்னே
பச்சையற்ற வனமென  
வெளிறிக்கிடக்கிறது ஆதாமின் வாழ்வு

ஏவாளின் தீஞ்சுவை நேசமெல்லாம்
தீயோடு போனபின்னே
அகால இரவில் அழுவது மட்டுமே
துணையற்ற அவ்வனத்தில்
ஆதாமிற்கு தொழிலாக இருக்கிறது

--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 30 ,2013 அன்று உயிரோசையில் வெளியானது . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5805

Friday 11 October 2013

அமிலச்சொல்


மிகுந்த கசப்பான
உரையாடலுக்குப்பின்
செம்பிழம்பாய்
கொதிக்கும் இம்மனம்
அவமானத்தில்
கதறி அழுவது
சகிக்கப் பொறுக்கவில்லை

பின் ஏன்
இவ்விதயம் இன்னும்
துடிப்பதை நிறுத்தவே இல்லை ...

வெறுமையாக நீளும்
ஒவ்வொரு மணித்துளியும்
விஷம் என விழுந்த வார்த்தைகளை
நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது

புரிதல்கள் கோணலான
எல்லா உறவுமே
இப்படித்தான்
துடிக்க துடிக்க
கழுத்தறுக்கப்படுகிறதா..?

எல்லா பழியையும்
காலத்தின் மீதேற்றி
இலகுவாக திரிய
எனக்கொன்றும்
காகித கால்கள் இல்லையே
நன்மைகள் கழித்து மிஞ்சும் தீதை
நானே ஏற்கிறேன்

அன்பை
அளவு பார்த்து பரிமாறும்
நுணுக்கம் அறிந்திராத என்னை
தூற்றிக் கொண்டே இருப்பதைவிடவும்
ஒரு கூர் வாள் கொணர்ந்து
இதயப்பகுதியில்
மொத்த வன்மத்தையும் செலுத்து
உன் கால்களில் தெண்டனிட்டு
சட்டென விடுதலையடைகிறேன்

இனி ஒரு அமிலச்சொல் வேண்டாம்
ரயிலேறிரிக்கடந்த முண்டம் போல்
உதிரம் உதறி
துடிக்கிறதென் உடலம்

--க.உதயகுமார்


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25148&Itemid=265

Wednesday 9 October 2013

கொடும் விதி

போக்கிடம் உள்ள நதிகள்
நகர்ந்துகொண்டே இருக்கின்றன
நின்ற காலில் வெறிப்பதைத் தவிர
வக்கற்ற குட்டைகளுக்கு
வேறென்ன விதிக்கப் பட்டிருக்கிறது

- க.உதயகுமார்

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25129:2013-10-09-02-20-35&catid=2:poems&Itemid=265

Saturday 5 October 2013

ஏவாளைத் தொலைத்த ஆதாமின் இரவு


இச்சைகள் மேலிட
பார்வைகள் மேயும்
படுக்கையறை வனாந்தரத்தில்
துணையற்ற இப்பருவத்தின் காமம்
கொடிதினும் கொடிது


நட்ட நடு நிசியில்
பாலையென காந்தும் இவ்வுடலம்
ஒவ்வாத உணர்ச்சிகளைக்
கசியவிடும் தருணம்
பெருஞ்சாபம்


யாமத்தின் இடுக்குகளில்
துழாவும் காமத்திற்கு
பசலை போர்த்திய
இப்பருவத்தின் அடுக்குகளில்
பெருமூச்சைத் தவிர
வேறென்ன கிடைத்துவிடப்போகிறது


துக்க வீட்டில்
களியாட்டாம் கொண்டாடுதலைப் போல
பொருத்தமற்ற
மற்றும் இரக்கமற்ற
இக்காமத்தை என்ன செய்யலாம்


பசிக்கும் வயிற்றைத்
தண்டிப்பதை போல
ஒரு எதேச்சாதிகாரம்
தலைதூக்குகிறது
அடங்கா காமத்தை அறுத்தெறிய


பின்
உடலிடும் ஒப்பாரியில்
கரைகிறது மனசு
கத்தியைத் தவறவிட்டு

.
.
.

இறைஞ்சியும் கிடைக்காமல்
ஏமாற்றத்தில்
விம்மி வேர்த்தழும் தோலுக்கு
வேடிக்கை காட்டவென
சுவரில்
ஏவாளின் சித்திரம் வரைகிறான்
ஆதாம்



க.உதயகுமார்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5556

குறிப்பு   : April 30, 2012 அன்று எழுதியது .